PulseNews
அரசியல்

வருங்கால மனைவிக்கு நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய நாமக்கல் இளைஞர்: முற்றிலும் மோசடி என வருவாய்த்துறை எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக் சரவணன் என்ற கட்டட பொறியாளருக்கு, மதுரையைச் சேர்ந்த ராதிகா வர்ஷிணி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது வருங்கால மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத வித்தியாசமான பரிசை வழங்க நினைத்த அசோக் சரவணன், தனது சகோதரியின் உதவியுடன் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, அதை திருமணத்தன்று பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார். உலகத்திலேயே யாரும் கொடுக்காத பரிசை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிலவில் நிலம் வாங்க முடிவெடுத்ததாகக் கூறும் அசோக் சரவணன், 2018-ல் ஒருவர் நிலவில் நிலம் வாங்கிய செய்தியைப் பார்த்து வியந்து, தானும் தனது வருங்கால மனைவிக்காக நிலவில் இடம் வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவில் நிலம் விற்பதாகக் கூறி பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்து தருகின்றன. 'பே ஆஃப் ரெயின்போ', 'சீ ஆஃப் ரெயின்ஸ்' போன்ற பெயர்களில் இந்த நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்குச் சென்று பெயர், முகவரி போன்ற விவரங்களைப் பதிவிட்டு, கிரெடிட் கார்டு அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.3,068.40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 ஏக்கர் வாங்கினால் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ.8,276.40-க்கும், 5 ஏக்கர் வாங்கினால் 15 சதவீத தள்ளுபடியில் ரூ.13,014-க்கும், 10 ஏக்கர் வாங்கினால் 20 சதவீத தள்ளுபடியில் ரூ.24,468-க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஒரு சொத்தை விற்கவோ வாங்கவோ வேண்டுமென்றால் அது யாருக்காவது சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. கடல்கள் யாருக்கும் சொந்தமில்லை என்பதைப் போல, நிலவும் யாருக்கும் சொந்தமானதல்ல என்று விண்வெளிச் சட்டத்துக்கான சர்வதேச இன்ஸ்டிடியூட்டின் கவுரவ இயக்குநர் ஸ்டீபன் இ. டாயல் விளக்கியுள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், சர்வதேச விண்வெளி சட்ட விதிகளின்படி, நிலவில் எந்த ஒரு தனிநபரோ அல்லது தனியார் நிறுவனமோ நிலத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ துளியும் அனுமதியில்லை. 1967-ல் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தப்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளி பொருட்கள் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கோ, பயன்பாட்டிற்கோ அல்லது தனிநபர் உரிமைக்கோ உட்படாது. விண்வெளி என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுவான சொத்தாகும். எனவே, நிலவில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சரவணனிடம் 23,000 ரூபாய் வசூல் செய்துள்ளது முற்றிலும் ஏமாற்று வேலை மற்றும் மோசடி எனத் தெரிவித்துள்ளனர். செய்தி: க.சண்முகவடிவேல்

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வருங்கால மனைவிக்கு நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய நாமக்கல் இளைஞர்: முற்றிலும் மோசடி என வருவாய்த்துறை எச்சரிக்கை
PulseNews சுருக்கம்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் அசோக் சரவணன், தனது வருங்கால மனைவியான மதுரையைச் சேர்ந்த ராதிகா வர்ஷிணிக்கு திருமண பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். தனது சகோதரியின் உதவியுடன் இதற்கான முயற்சியை மேற்கொண்ட அவர், உலகிலேயே வித்தியாசமான பரிசை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிலத்தை வாங்கியுள்ளார்.

இருப்பினும், நிலவில் நிலம் வாங்குவதாகக் கூறப்படுவது முற்றிலும் மோசடி என வருவாய்த்துறை எச்சரித்துள்ளது. இத்தகைய செயல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics