PulseNews
லைஃப் ஸ்டைல்

கறிவேப்பிலை செடி வளரவே இல்லையா? இந்த 5 விஷயத்தை முதல்ல செக் பண்ணுங்க

சமையலில் மணமும் சுவையும் சேர்க்கும் கறிவேப்பிலையை வீட்டிலேயே வளர்க்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. ஆனால், கன்றாக வாங்கி நடவு செய்த சில நாட்களிலேயே செடி வளராமல் நின்றுவிடுவது, இலைகள் உதிர்வது அல்லது புதிய தளிர்கள் வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர். கறிவேப்பிலை செடி வளராமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக போதிய சூரிய ஒளி கிடைக்காதது, அதிகப்படியான தண்ணீர் ஊற்றுவது, மண்ணில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, சரியான முறையில் கவாத்து செய்யாமல் இருப்பது உள்ளிட்டவை இருக்கலாம். எனவே, செடியின் வளர்ச்சிக்கு முதலில் சரியான இடத்தைத் தேர்வு செய்வது அவசியம். கறிவேப்பிலை செடிக்கு தினமும் குறைந்தது 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைப்பது நல்லது. முடிந்தால் காலை முதல் மதியம் வரை நல்ல வெயில் படும் இடத்தில் செடியை வைக்கலாம். வீட்டுக்குள் அல்லது தொடர்ந்து நிழல் படும் பால்கனி பகுதியில் வைத்திருந்தால், செடி உயரமாக வளர்ந்தாலும் கிளைகள் மற்றும் இலைகள் அடர்த்தியாக வளராமல் போக வாய்ப்புள்ளது. அதேபோல், கறிவேப்பிலை செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்பதால் வேர்களில் அழுகல் ஏற்பட்டு, செடியின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். குறிப்பாக தொட்டியில் வளர்க்கப்படும் செடிகளுக்கு அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறும் துளைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேல் மண் ஓரளவு காய்ந்த பிறகே தண்ணீர் ஊற்றுவது நல்லது. மண் எப்போதும் ஈரமாகவே இருக்கிறதா, இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். மண் மிகவும் இறுக்கமாக இருந்தாலும் வேர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே, நல்ல வடிகால் வசதியுள்ள மண் கலவையைப் பயன்படுத்துவது செடியின் வளர்ச்சிக்கு உதவும். கறிவேப்பிலை செடி நன்றாக வளர மண்ணில் போதுமான ஊட்டச்சத்தும் தேவை. வீட்டில் கிடைக்கும் நன்கு மக்கிய தொழுஉரம், மண்புழு உரம் அல்லது இயற்கை உரங்களை அவ்வப்போது சிறிதளவு சேர்க்கலாம். உரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதும் நல்லதல்ல என்பதால், அளவோடு பயன்படுத்த வேண்டும். செடி வளர்ச்சி குறைவாக இருப்பதுடன் இலைகள் வெளிர் நிறமாகத் தோன்றினால், மண்ணின் ஊட்டச்சத்து நிலையை கவனிக்கலாம். புதிதாக வாங்கிய செடியை உடனடியாக அதிக அளவு உரமிடுவதற்குப் பதிலாக, அது புதிய இடத்துக்கு பழகிய பிறகு தேவைக்கேற்ப உரமிடுவது நல்லது. கறிவேப்பிலை செடியில் புதிய கிளைகள் அதிகமாக உருவாக வேண்டும் என்றால் கவாத்து செய்வதும் முக்கியமான பராமரிப்பு முறையாகும். செடி மிகவும் உயரமாக மட்டும் வளர்ந்து, பக்கவாட்டில் கிளைகள் வராமல் இருந்தால், மேல்பகுதியிலுள்ள வளர்ச்சியை லேசாக கத்தரித்து விடலாம். இதனால் பக்கவாட்டில் புதிய தளிர்கள் உருவாக ஊக்கம் கிடைக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமான கிளைகளை வெட்டிவிடாமல், செடியின் அளவுக்கு ஏற்ப சிறிதளவு மட்டுமே கவாத்து செய்வது நல்லது. காய்ந்த, நோய்த்தொற்றுள்ள அல்லது பலவீனமான கிளைகளையும் அகற்றலாம். சில நேரங்களில் கறிவேப்பிலை செடியில் பூக்கள் அல்லது காய்கள் உருவாகத் தொடங்கினால், செடியின் ஆற்றல் அந்த வளர்ச்சிக்குச் செல்லும். இலைகளுக்காக வளர்க்கப்படும் சிறிய செடிகளில் பூக்கள் மற்றும் காய்களை ஆரம்பத்திலேயே அகற்றுவது, செடியின் வளர்ச்சியை இலை மற்றும் கிளைகள் உருவாவதற்கு திருப்ப உதவலாம். குறிப்பாக செடி இன்னும் சிறியதாக இருக்கும்போது பூக்கள் அதிகமாக வந்தால், அவற்றை மெதுவாக கிள்ளி அகற்றலாம். இயற்கை முறையில் செடியை பராமரிக்க விரும்புபவர்கள் அரிசி கழுவிய நீர், மோர் கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றை அதிகமாகவோ அடிக்கடியோ பயன்படுத்தாமல், நீர்த்த நிலையில் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அரிசி கழுவிய நீர் அல்லது மோர் கரைசலை ஊற்றிய பிறகு மண்ணில் துர்நாற்றம், பூஞ்சை அல்லது பூச்சிகள் அதிகரிக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இயற்கை உரம் என்றாலும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் செடிக்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும், கறிவேப்பிலை செடியின் இலைகளின் அடிப்பகுதியை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம். மாவுப்பூச்சி, அசுவினி போன்ற சிறிய பூச்சிகள் இருந்தால் புதிய தளிர்கள் பாதிக்கப்படலாம். இலைகள் சுருண்டிருப்பது, ஒட்டும் தன்மை இருப்பது அல்லது இலைகளின் மீது சிறிய பூச்சிகள் காணப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி, செடியை மற்ற செடிகளிலிருந்து சற்று தனியாக வைப்பது உதவியாக இருக்கும். தொட்டியில் கறிவேப்பிலை வளர்ப்பவர்கள் செடியின் அளவுக்கு ஏற்ற தொட்டியைத் தேர்வு செய்வதும் முக்கியம். வேர்கள் வளர இடமில்லாத அளவுக்கு சிறிய தொட்டியில் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் வளர்ச்சி குறையலாம். அதே நேரத்தில் தேவையில்லாமல் மிகப்பெரிய தொட்டிக்கு மாற்றுவதும் தண்ணீர் அதிகமாக தேங்குவதற்கு காரணமாக இருக்கலாம். வேர்கள் தொட்டியின் அடிப்பகுதியில் அதிகமாக நிரம்பியிருப்பது தெரிந்தால், சரியான அளவிலான பெரிய தொட்டிக்கு மாற்றலாம். கறிவேப்பிலை செடி உடனடியாக வேகமாக வளர வேண்டும் என்று தினமும் உரம், தண்ணீர் என அதிக கவனம் செலுத்துவதைவிட, சரியான வெயில், நல்ல வடிகால் வசதி, அளவான நீர்ப்பாசனம், போதுமான ஊட்டச்சத்து மற்றும் அவ்வப்போது கவாத்து ஆகியவற்றை முறையாகச் செய்வதே சிறந்த வழியாகும். செடி வளர்ச்சி பெறுவதற்கு சிறிது காலம் ஆகலாம் என்பதால் பொறுமையுடன் பராமரிப்பதும் அவசியம். இந்த அடிப்படை விஷயங்களை சரியாக கவனித்தாலே, வீட்டுத் தொட்டியிலேயே ஆரோக்கியமான கறிவேப்பிலை செடியை வளர்த்து, தேவையான நேரங்களில் பசுமையான இலைகளைப் பறித்து சமையலுக்கு பயன்படுத்த முடியும்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கறிவேப்பிலை செடி வளரவே இல்லையா? இந்த 5 விஷயத்தை முதல்ல செக் பண்ணுங்க
PulseNews சுருக்கம்

வீட்டிலேயே வளர்க்கப்படும் கறிவேப்பிலை செடிகள் சரியாக வளராமல் இருப்பதற்கும், இலைகள் உதிர்வதற்கும் போதிய சூரிய ஒளி இன்மை, அதிகப்படியான தண்ணீர் ஊற்றுதல், மண்ணில் சத்து குறைபாடு மற்றும் முறையற்ற கவாத்து ஆகியவையே முக்கிய காரணங்களாகும். இச்செடிக்கு தினமும் குறைந்தது 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி தேவைப்படுகிறது, எனவே நிழலான பகுதிகளில் வைப்பதைத் தவிர்த்து, நன்கு வெயில் படும் இடங்களில் வைக்க வேண்டும். மேலும், மண்ணின் மேல் பகுதி காய்ந்த பின் மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும்; தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

செடியின் பக்கவாட்டு வளர்ச்சியைத் தூண்ட அவ்வப்போது நுனிக் கிளைகளைக் கத்தரிப்பது அவசியம். மண்ணின் சத்துக்காக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை அளவோடு சேர்க்கலாம். செடியில் பூக்கள் அல்லது காய்கள் தோன்றினால் அவற்றை அகற்றுவது இலைகள் அடர்த்தியாக வளர உதவும். அதேபோல் மாவுப்பூச்சி அல்லது அசுவினி போன்ற பூச்சிகள் தாக்காமல் இருக்க அவ்வப்போது இலைகளைக் கவனித்து, தேவைப்பட்டால் இயற்கை உரங்களை நீர்த்த நிலையில் பயன்படுத்தலாம். இச்செடி வளர்வதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதால், பொறுமையுடன் சரியான பராமரிப்பை மேற்கொண்டால் ஆரோக்கியமான கறிவேப்பிலையைப் பெற முடியும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle