PulseNews
தொழில்நுட்பம்

மேற்பரப்பில் 5,500° செல்சியஸ், வளிமண்டலத்தில் 4 கோடி° செல்சியஸ்: சூரிய மேற்பரப்பை விட கொரோனா கொதிப்பது ஏன்?

சூரியனைப் பற்றி நாம் நினைக்கும் போது, அதன் நடுப்பகுதிதான் மிக பயங்கரமான வெப்பத்தில் கொதிக்கும், வெளியே வர வர வெப்பம் குறையும் என்றுதானே பொதுவாக நினைப்போம்? ஆனால், சூரியனின் இயற்பியல் விஞ்ஞானிகளை பல தலைமுறைகளாகத் தலைசுற்ற வைத்த விசித்திரமான மர்மத்தை தன்னுள் வைத்திருக்கிறது. சூரியனின் வெளிப்பரப்பை விட, அதற்கு மேலே இருக்கும் அதன் வெளிப்புற வளிமண்டலமான 'கொரோனா' பல மடங்கு அதீத வெப்பத்தில் கொதிக்கிறது! "இது எப்படி சாத்தியம்?" என்ற நூற்றாண்டு காலப் புதிருக்கு, இந்தியாவின் பெருமைமிகு 'ஆதித்யா-எல்1' (Aditya-L1) விண்கலம் இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவியல் விடையைக் கண்டுபிடித்துத் தந்துள்ளது! சூரியனின் வெப்ப அமைப்பைப் பார்த்தாலே தலைசுற்றும். மையப்பகுதி (Core) சுமார் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரிகிறது. மேற்பரப்பு (Photosphere) மையத்தை விட்டு வெளியே வரும்போது வெப்பநிலை வெகுவாகக் குறைந்து, நாம் காணும் மேற்பரப்பில் சுமார் 5,500 டிகிரி செல்சியஸாகத் தணிகிறது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், மேற்பரப்பைத் தாண்டி மேலே உள்ள வளிமண்டலத்திற்குப் போனால் வெப்பநிலை மீண்டும் தலைகீழாக எகிறி 20 லட்சம் டிகிரி செல்சியஸ் வரை கொதிக்கிறது. சூரியனில் தீவிர வெடிப்புகள் ஏற்படும்போதுஇது 4 கோடி டிகிரி செல்சியஸ் வரை உச்சம் தொடுகிறது. அடுப்பில் எரியும் நெருப்பை விட, அதற்கு ஒரு அடி மேலே உள்ள காற்று பல மடங்கு அதிகமாகக் கொதித்தால் எப்படி இருக்குமோ, அப்படியொரு விசித்திரம்தான் சூரியனிலும் நடக்கிறது. இந்த மர்மத்தை அவிழ்க்க பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் கழக (IIA) விஞ்ஞானிகள் களமிறங்கினர். சூரியனிலிருந்து அதன் வளிமண்டலமான கொரோனாவிற்கு வெப்ப ஆற்றல் இரண்டு வழிகளில் கடத்தப்படுவதாகக் கருதப்பட்டது. சூரிய மேற்பரப்பில் நிகழும் தொடர்ச்சியான கொதிப்பு இயக்கங்களால் உருவாகும் அலைகள். சூரியனின் வலிமைமிக்க காந்தப்புலங்கள் ஒன்றோடொன்று முறுக்கப்பட்டு, அறுபட்டு, மீண்டும் இணையும் 'காந்தப்புல மறுஇணைவு' (Magnetic Reconnection) நிகழ்வு. இதில் எது கொரோனாவை இவ்வளவு பயங்கரமாகச் சூடாக்குகிறது? ஆதித்யா-எல்1 விண்கலத்தின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்திய உண்மைகள்; மேற்பரப்பு அலைகள் மூலம் கிடைப்பது வெறும் 7% ஆற்றல் மட்டுமே. கொரோனாவின் அதீத வெப்பத்தைத் தக்கவைக்கும் பிரம்மாண்டமான 93% ஆற்றல், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு மீண்டும் இணையும் அதிபயங்கர செயல்பாட்டிலிருந்தே கிடைக்கிறது. சூரியன் அமைதியாக இருக்கும் நட்சத்திரம் அல்ல. அதன் கொரோனாவிலிருந்து சூரியப் பிழம்புகளும், 'கொரோனல் மாஸ் எஜக்ஷன்' (CME) எனப்படும் பிரம்மாண்ட காந்த பிளாஸ்மா மற்றும் வாயு மேகங்களும் விண்வெளியில் மணிக்கு லட்சக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் தூக்கி வீசப்படுகின்றன. இவை பூமியின் காந்த மண்டலத்தைத் தாக்கும்போது வானில் கண்கவர் வண்ணமயமான அரோராக்களை (Auroras) உருவாக்குகின்றன. அதேநேரம், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள், பூமியின் தகவல் தொடர்பு, ஜி.பி.எஸ் (GPS) மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளையே முடக்கும் வல்லமை கொண்டவை. சூரியனின் 11 ஆண்டு சுழற்சியின் உச்சத்தில், ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட CME வெடிப்புகள் நடக்கின்றன. இவ்வளவு ஆற்றலை விண்வெளியில் வாரியிறைக்கும் சூரியன், அந்த வெப்ப ஆற்றலை எப்படி மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது? என்ற கேள்விக்கு விடை தேடினர் விஞ்ஞானிகள். கடந்த 2024 ஆக.5 அன்று சூரியனில் நிகழ்ந்த ஒரு தீவிரமான CME வெடிப்பை, ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 'விஇஎல்சி' (VELC - Visible Emission Line Coronagraph) என்ற அதிநவீனக் கருவி படம் பிடித்தது. சூரியனின் அதிக வெளிச்சமுள்ள பகுதியை நயமாக மறைத்து, மங்கலான கொரோனா பகுதியைத் துல்லியமாகப் படம் பிடிப்பதுதான் இதன் வேலை. வெடிப்பு நிகழ்ந்து பெரும் ஆற்றல் வெளியேறிய பிறகு, சிக்கலாகி முறுக்கேறிய காந்தப்புலக் கோடுகள் மீண்டும் இணையத் தொடங்கின. அடுத்த 10 மணி நேரத்திற்குள் காந்தப்புலம் தனது பழைய நிலைக்குத் திரும்பியது! அதாவது, இழந்த ஆற்றலை அந்த காந்தப்புல மறுஇணைவே மிக வேகமாக மீண்டும் நிரப்பி, கொரோனாவைத் தொடர்ந்து கொதிக்க வைக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. இந்த ஆய்வுக் கட்டுரை உலகப் புகழ்பெற்ற சர்வதேச இதழான 'தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்' (The Astrophysical Journal Letters)-ல் வெளியாகி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இஸ்ரோவால் ஏவப்பட்டு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 'லாக்ராஞ்சியன் புள்ளி 1' (L1)-ல் தடையின்றி நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா-எல்1, உலக வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிய திறவுகோலாக மாறியுள்ளது. இது வெறும் ஒரு வான்வெளிப் புதிருக்குக் கிடைத்த விடை மட்டுமல்ல; விண்வெளி வானிலையை முன்கூட்டியே கணித்து, பூமியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைச் சூரியப் புயல்களில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு மாபெரும் அறிவியல் மைல்கல்! சூரியனின் மர்மங்களை அவிழ்ப்பதில் இந்தியா இப்போது உலகிற்கே வழிகாட்டத் தொடங்கியுள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மேற்பரப்பில் 5,500° செல்சியஸ், வளிமண்டலத்தில் 4 கோடி° செல்சியஸ்: சூரிய மேற்பரப்பை விட கொரோனா கொதிப்பது ஏன்?
PulseNews சுருக்கம்

சூரியனின் மேற்பரப்பு சுமார் 5,500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அதன் வெளிப்புற வளிமண்டலமான 'கொரோனா' பகுதி மட்டும் 4 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் கொதிப்பது விஞ்ஞானிகளிடையே நீண்டகால மர்மமாக இருந்து வருகிறது. பொதுவாக சூரியனின் மையத்திலிருந்து தள்ளிச் செல்லும்போது வெப்பம் குறைய வேண்டும் என்ற விதியையும் மீறி, கொரோனா பகுதியில் மட்டும் அதீத வெப்பம் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இந்த விசித்திரமான நிகழ்வு ஏன் நிகழ்கிறது என்ற பல தலைமுறை மர்மத்திற்கு விடை காணும் வகையில், இந்தியாவின் ஆதித்யா-எல்1 விண்கலம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சூரியனின் இந்த வெப்பப் புதிரை விடுவிப்பதில் இந்த ஆய்வு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology