குதிரை பேரம் இல்லையா....? சட்டசபையில் செங்கோட்டையன் கேள்வியால் வெடித்த வாக்குவாதம்...!
தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், 6 சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்கள் இல்லாதது தொடர்பாக எழுந்த கேள்வி, பின்னர் ஆளுங்கட்சி மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடையிலான கடும் வாக்குவாதமாக உருவெடுத்தது. தொடர்ந்து “குதிரை பேரம்” குறித்த பேச்சும் எழுந்ததால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் பேசும்போது, 6 சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், அங்குள்ள பொதுமக்கள் தங்களது குறைகளையும், அடிப்படை பிரச்சினைகளையும் யாரிடம் எடுத்துச் செல்வார்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ள 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த தொகுதிகளில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அந்த தொகுதிகளின் பல்வேறு பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். ஒரு தொகுதியின் அனைத்து பிரச்சினைகளையும் பொறுப்பு அமைச்சரால் முழுமையாக அறிந்து செயல்பட முடியாது என்றும், மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து கண்காணித்து தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன், 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம் என்று தெரிவித்தார். மேலும், அந்த தேர்தலில் தங்களது தரப்புதான் வெற்றி பெறும் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று அவர் கூறினார்.அமைச்சரின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும், வாக்குவாதமும் ஏற்பட்டது. விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, எடப்பாடி பழனிசாமி தெரிவித்த சில கருத்துகளுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குறுக்கிட்டார். எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் சிலவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், “குதிரை பேரம்” தொடர்பான கருத்துகளை அவை முன்னவர் செங்கோட்டையன் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அவரது ஒலிவாங்கி அணைக்கப்பட்டதால் அவையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வாபஸ் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தை சுட்டிக்காட்டி, “அது குதிரை பேரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அவர் தனது விருப்பப்படி வாபஸ் பெறவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும், “ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு, பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஏன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். விவாதம் தொடர்ந்து சூடுபிடித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சத்தமாக பேசியதால் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடும் அதிருப்தி தெரிவித்தார். அப்போது எழுந்து நின்ற சபாநாயகர், “இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு என்ன பொதுக்கூட்டம் நடத்துகிறோம்?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் எழுந்து நின்றுதான் பேச வேண்டிய நிலை ஏற்படும் என்று ஆவேசமாக தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக பேச வேண்டும் என்றும், தனது உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 6 சட்டமன்றத் தொகுதிகளில் உறுப்பினர்கள் இல்லாதது குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது ஆளும் கட்சி மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதமாக மாறியது.
இந்த விவாதத்தின்போது 'குதிரை பேரம்' குறித்த பேச்சு எழுந்ததால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது. உறுப்பினர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்வி மற்றும் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசிய கருத்துக்களால் அவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.