எகிப்து பாலைவனம் ஒரு காலத்தில் கடலா? 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சுறா எச்சங்கள் வெளிப்படுத்திய உண்மை
தற்போது பாலைவனமாக காட்சியளிக்கும் எகிப்தின் மணற்பரப்பில், சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செழித்து வளர்ந்த கடல்சார் சுற்றுச்சூழல் இருந்ததற்கான வரலாற்று சான்று தொல்லுயிர் ஆய்வாளர்கள் (Palaeontologists) கண்டறிந்துள்ளனர். பண்டைய கடல் படுகையில் உருவான பாறைகளில் இருந்து 7 வகையான சுறா இனங்களின் பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் உள்ள 'அபு-டார்டூர்' (Abu-Tartur) பீடபூமியில், பாஸ்பேட் வளம் நிறைந்த 'துவி படிவப் பாறை' பகுதியில் இந்த புதைபடிவங்கள் கண்டறியப்பட்டன. சுமார் 14.5 முதல் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'கிரெட்டேசியஸ்' காலத்தில், வட ஆப்ரிக்காவின் பெரும்பகுதியை மூடியிருந்த ஆழமற்ற கடலின் ஒரு பகுதியாக இப்பகுதி விளங்கியுள்ளது. கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிர் ஆய்வாளர் தாரிக் யாசின் (Tarek Yassin) தலைமையிலான இந்த ஆய்வு முடிவுகள், சர்வதேச அறிவியல் இதழான Cretaceous Research-ல் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் இதுவரை ஆவணப்படுத்தப்படாத 14 சுறா பற்களை ஆய்வு செய்ததில், அபு-டார்டூர் பகுதியில் இதற்கு முன் கண்டறியப்படாத 5 புதிய சுறா இனங்களை அடையாளம் கண்டுள்ளனர். Cretalamna cf. maroccana Scapanorhynchus cf. raphiodon Serratolamna cf. serrata Squalicorax bassanii Squalicorax pristodontus இவற்றில் Serratolamna cf. serrata மற்றும் Squalicorax bassanii ஆகிய இரண்டு இனங்கள் ஒட்டுமொத்த எகிப்து நாட்டிற்கே முதல்முறையாக பதிவாகி உள்ளன. கண்டுபிடிப்பில் ஊசி போன்ற வடிவமுடைய Scapanorhynchus cf. raphiodon சுறாவின் பற்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்த வகை சுறா இனம் வாழ்ந்ததற்கான முதல் சான்றாகவும், உலக அளவில் இந்த இனத்தின் மிக இளைய புதைபடிவப் பதிவாகவும் இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆழ்கடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர் மேல்நோக்கி நகரும் நிகழ்வால் (Ocean Upwelling), பண்டைய காலத்தில் இந்தப் பகுதி மிதவை நுண்ணுயிரிகள் (Plankton), மீன்கள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்கள் நிறைந்து உணவுச் சங்கிலி மிகவும் செழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இதுவே பல்வேறு பெரிய வகை வேட்டை சுறாக்கள் அங்கு வாழ்வதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த 7 வகை சுறாக்களும் ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். பாஸ்பேட் படிவுகளில் வெவ்வேறு காலக்கட்டங்கள் மற்றும் சூழல்களைச் சேர்ந்த எச்சங்கள் ஒன்றிணைந்திருக்க வாய்ப்புள்ளது. Squalicorax சுறாக்களின் இருப்பு கடற்கரைக்கு அருகிலுள்ள ஆழமற்ற பகுதியையும், Scapanorhynchus சுறாக்களின் இருப்பு ஆழமான கடற்பகுதியையும் குறிக்கின்றன" என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளனர்.

தற்போது பாலைவனமாக காணப்படும் எகிப்தின் நிலப்பரப்பு, சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் சார்ந்த சூழலாக இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லுயிர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எகிப்தின் மேற்கு பாலைவனத்தில் உள்ள அபு-டார்டூர் பீடபூமியில் அமைந்த பாஸ்பேட் நிறைந்த பாறைப் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதியிலுள்ள பண்டைய கடல் படுகையில் இருந்த பாறைகளில் இருந்து, ஏழு வகையான சுறா இனங்களுக்குச் சொந்தமான பற்கள் புதைபடிவங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒரு காலத்தில் வறண்ட பாலைவனமாகத் திகழும் இந்த இடம், கடலாக இருந்த வரலாற்று உண்மை வெளிப்பட்டுள்ளது.