PulseNews
தொழில்நுட்பம்

சூப்பர் கம்ப்யூட்டராக மாறும் பிளாக்ஹோல்: எதிர்காலத்தில் அதிவேக விண்வெளி பயணம்? விஞ்ஞானிகளின் அதிரடி கணிப்பு

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசை அரக்கனாகக் கருதப்படும் பிளாக்ஹோல் (Black Hole), மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு புதிரான உலகம். இவற்றை பற்றிய கருத்து கோட்பாடுகளாக இருந்தாலும், பல தசாப்த கால விண்வெளி ஆய்வுகள் மற்றும் இயற்பியல் விதிகளை அடிப்படையாக கொண்டவை. பிளாக்ஹோல்களை எதிர்காலத்தில் மனித இனம் அறிவியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற திகைப்பூட்டும் ஆராய்ச்சிகள் இப்போது தீவிரமடைந்துள்ளன. பிளாக்ஹோல் பிறந்தது எப்படி? பிளாக்ஹோல் பற்றிய முதல் சிந்தனை 1783-லேயே தொடங்கியது. பிரம்மாண்ட நிறை கொண்ட ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருக்கும்போது, ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் சென்றால் மட்டுமே அதிலிருந்து தப்ப முடியும் என ஆங்கிலேய வானியலாளர் ஜான் மிச்செல் கணித்தார். 1916-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டைப் பயன்படுத்தி, இயற்பியலாளர் கார்ல் ஸ்வார்ஸ்சைல்ட் ஒரு பிளாக்ஹோலைச் சுற்றியுள்ள எல்லையைக் கணக்கிட்டார். இதுவே 'நிகழ்வு எல்லை' (Event Horizon) என அழைக்கப்படுகிறது. இந்த எல்லையைத் தொடும் ஒளி உட்பட எந்த ஒரு பொருளும் வெளியேறவே முடியாது. 1960-களில் இயற்பியலாளர் ஜான் வீலர்தான் இதற்கு 'பிளாக்ஹோல்' என்ற பெயரைச் சூட்டினார். 1939-ல் ராபர்ட் ஓபன்ஹைமரும் அவரது மாணவர் ஹார்ட்லேண்ட் ஸ்னைடரும் பிரம்மாண்ட நட்சத்திரங்கள் சிதைந்து எப்படி பிளாக்ஹோலாக மாறுகின்றன என்பதை உலகுக்கு விளக்கினர். பிளாக்ஹோலை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பது எப்படி? பிளாக்ஹோல் ஒளியைக் கூட விழுங்கி விடுவதால், அதை நேரடியாகப் பார்க்க முடியாது. எனவே விஞ்ஞானிகள் 3 மறைமுக வழிகளைப் பயன்படுத்துகின்றனர். பிளாக்ஹோல் அருகிலுள்ள நட்சத்திரப் பொருட்களை ஈர்த்து விழுங்கும்போது எக்ஸ்-ரே கதிர்வீச்சு உருவாகிறது. ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் அந்த கதிர்வீச்சைப் பதிவு செய்து உருவாக்கப்படும் படங்கள். 2 பிளாக்ஹோல்கள் மோதி இணையும் போது பிரபஞ்சத்தில் உருவாகும் பிரம்மாண்ட அலைகள். பல நோபல் பரிசுகளை வென்ற கண்டுபிடிப்பு இது. கண்களுக்குத் தெரியாத, ஆனால் அதீத ஈர்ப்பு விசை கொண்ட ஒரு மாயப் புள்ளியைச் சுற்றி அருகிலுள்ள நட்சத்திரங்கள் வேகமாகச் சுற்றுவதை வைத்து பிளாக்ஹோல் இருப்பதை உறுதி செய்கின்றனர். பிளாக்ஹோல்களை வெறும் விண்வெளிப் பொருளாக மட்டும் பார்க்காமல், எதிர்காலத் தொழில்நுட்ப எஞ்சின்களாகவும் பார்க்கத் தொடங்கி உள்ளனர். விண்கலங்கள் கோள்களின் ஈர்ப்பு விசை பயன்படுத்தி வேகத்தை அதிகரித்துக் கொள்வது வழக்கம். 2 பிளாக்ஹோல்கள் ஒன்றை ஒன்று சுற்றும்போது உருவாகும் அதீத ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலங்களுக்கு இமாலய உந்துசக்தியைக் கொடுக்க முடியும். ஆனால், பூமிக்கு அருகில் உள்ள பிளாக்ஹோலே 1,500 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதால், எதிர்காலத்தில் செயற்கையாக பிளாக்ஹோலை உருவாக்கும் ஆற்றல் மனிதனுக்குத் தேவைப்படுகிறது. இயற்பியலாளர் ஜேக்கப் பெக்கன்ஸ்டீன் கணிப்பின்படி, ஒரு பிளாக்ஹோலின் நிகழ்வு எல்லையில் உள்ள ஒரு சதுர மீட்டரில் சுமார் 10-ன் அடுக்கு 69 பிட் தகவல்களைச் சேமிக்க முடியும். இன்றைய அதிநவீன கணினிகளால் அதிகபட்சமாக ஒரு டிரில்லியன் பிட்களையே சேமிக்க முடியும். மேலும், சேத் லாயிட் என்ற இயற்பியலாளர் கணக்கீட்டின்படி, ஒரு ஜூலுக்கு வினாடிக்கு 10-ன் அடுக்கு 33 செயல்பாடுகள் என்ற கற்பனை செய்ய முடியாத அசுர வேகத்தில் இது இயங்கும். நிகழ்வு எல்லைக்குள் சென்ற எதுவும் வெளியே வர முடியாது என்றால், தகவல்களை எப்படி மீட்டெடுப்பது? இதற்கு 1974-ல் மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங் விடையளித்தார். பிளாக்ஹோல்கள் முற்றிலும் கறுப்பானவை அல்ல, அவை நுண்ணிய கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்பதை நிரூபித்தார். இதுவே 'ஹாக்கிங் கதிர்வீச்சு' (Hawking Radiation) எனப்படுகிறது. இதன் மூலம் உள்ளே செல்லும் தகவல் அழியாமல், பிளாக்ஹோல் ஆவியாகும் போது கதிர்வீச்சாக வெளியேறுகிறது. மனித இனம் செயற்கை பிளாக்ஹோல்களை உருவாக்க இன்னும் பல காலம் ஆகலாம். ஆனால், பிரபஞ்சத்தில் வாழும் அதீத அறிவு படைத்த வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) தங்களின் தகவல் தொழில்நுட்பத் தேவைக்காக ஏற்கனவே பிளாக்ஹோல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று இயற்பியலாளர்கள் கியா த்வாலி மற்றும் ஜாசா ஒஸ்மானோவ் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டடத்திலிருந்து வெளிவரும் வெப்ப உமிழ்வை வைத்து அங்குள்ள கணினிகளின் செயல்பாட்டை உளவு அமைப்புகள் கண்டறிவது போல, விண்வெளியில் செயற்கையான முறையில் வெளிப்படும் ஹாக்கிங் கதிர்வீச்சைக் கண்காணிப்பதன் மூலம் ஏலியன்களின் இருப்பைக் கண்டறியவும், பிரபஞ்சத்தின் புதிய இயற்பியல் ரகசியங்களை மனிதகுலம் கற்றுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சூப்பர் கம்ப்யூட்டராக மாறும் பிளாக்ஹோல்: எதிர்காலத்தில் அதிவேக விண்வெளி பயணம்? விஞ்ஞானிகளின் அதிரடி கணிப்பு
PulseNews சுருக்கம்

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசை அரக்கனாகக் கருதப்படும் பிளாக் ஹோல்கள், மனித கற்பனைக்கு எட்டாத மர்மமான உலகமாக விளங்குகின்றன. பல தசாப்த கால விண்வெளி ஆய்வுகள் மற்றும் இயற்பியல் விதிகளின் அடிப்படையில், பிளாக் ஹோல்களை எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மனித இனம் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்த ஆராய்ச்சிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, பிளாக் ஹோல்களை சூப்பர் கம்ப்யூட்டர்களாக மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இது எதிர்காலத்தில் அதிவேக விண்வெளி பயணங்களுக்கு வழிவகுக்கலாம் என்று கருதப்படுகிறது. பிளாக் ஹோல் குறித்த ஆரம்பகால சிந்தனைகள் 1783-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology