இருளில் நீல-பச்சை நிறத்தில் மின்னும் ஃபயர் சாலமண்டர்: புற ஊதா ஒளியில் வெளிப்பட்ட புதிய அவதாரம்
பொதுவாக ஃபயர் சாலமண்டர்களைப் (Fire Salamander) பார்க்கும்போது, அவற்றின் உடலமைப்பு கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் வழக்கமான பாணியிலேயே காட்சியளிக்கும். இந்த மஞ்சள்-கருப்பு நிற அமைப்பே "நான் நச்சுத்தன்மை வாய்ந்தவன்; என்னை நெருங்காதே" என வேட்டையாடும் விலங்குகளை எச்சரிக்கும் இயற்கையின் சமிக்கையாகப் பல தலைமுறைகளாக அறியப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உயிரினத்தின் மீது புற ஊதா ஒளியை (UV Light) பாய்ச்சியபோது, விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்திய புதிய ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராயல் சொசைட்டி (Royal Society) ஆய்விதழில் வெளியான புதிய ஆய்வு முடிவுகளின்படி, ஃபயர் சாலமண்டர்கள் புற ஊதா ஒளியின் கீழ் நீல-பச்சை (Blue-Green) நிறத்தில் மினுமினுக்கும் புள்ளிகளுடன் ஒளிர்வது (Biofluorescence) முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் 365-நானோமீட்டர் புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, சாலமண்டர்களின் உடலின் பக்கவாட்டுப் பகுதிகள், அடிவயிறு மற்றும் தொண்டைப் பகுதிகளில் இந்த பிரகாசமான நீல-பச்சை புள்ளிகள் தென்பட்டன. சுரப்பிகளின் விந்தை: இந்த ஒளிர்தல் வெறும் தோலின் நிறமியில் மட்டும் ஏற்படவில்லை; விலங்கின் தோலில் உள்ள விஷச் சுரப்பிக் குழாய்கள் மேற்பரப்பை அடையும் இடங்களிலேயே இந்த ஒளிர்வு அதிகமாகக் காணப்பட்டது. அழியாத ஒளிர்வு: உயிருள்ள விலங்குகளைத் தூண்டி, அவற்றின் தோல் திரவங்களைச் சேகரித்து ஆய்வு செய்தபோது, அந்தச் சுரப்புகள் தனியாகவும் சியான் மற்றும் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தன. பாசி (Moss) மீது விடப்பட்ட இந்தத் திரவம், 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஒளிரும் தன்மையைத் தக்கவைத்திருந்தது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேல்தோல் மற்றும் பரோடாய்டு சுரப்பிகளிலேயே இந்த ஒளிர்வு அதிகமாக உள்ளது. இதற்கு காரணமான குறிப்பிட்ட வேதிப்பொருள் எது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இரத்த ஓட்ட அமைப்பின் மூலமாக இந்த ஒளிரும் மூலக்கூறுகள் கடத்தப்பட்டு சுரப்பிகளில் குவியலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல தலைமுறைகளாக விரிவாக ஆராயப்பட்ட ஒரு பழக்கமான உயிரினத்தில், இதுவரை கண்டறியப்படாத இந்த மர்ம ஒளி எதற்காகப் பயன்படுகிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் 2 முக்கிய காரணங்களை முன்வைக்கின்றனர். தங்களை வேட்டையாட வரும் எதிரிகளுக்கு, பகலில் மஞ்சள் நிறம் எச்சரிக்கை விடுப்பதுபோல, இரவு நேரங்களில் நீல-பச்சை ஒளிரும் திரவம் எச்சரிக்கை சமிக்ஞையாக செயல்படலாம். இனப்பெருக்க காலங்களில் ஆண் சாலமண்டர்கள் உடலை நிமிர்த்தி நிற்கும் போது உடலின் அடிப்பகுதியில் உள்ள இந்த ஒளிரும் பகுதிகள் வெளிப்படுகின்றன.இதனால், இருண்ட சூழலில் வாழும் சக சாலமண்டர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ, துணையை ஈர்க்கவோ இந்த ஒளிர்வை அவை பயன்படுத்துகின்றனவா என்ற கோணத்திலும் ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. ஆய்வு செய்யப்பட்ட பிற சாலமண்டர் அல்லது நியூட் இனங்களில் இத்தகைய தோல் திரவ ஒளிர்தல் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீல-பச்சை நிற ஒளிக்கு காரணமான மூலக்கூறை அடையாளம் காண்பதும், வெவ்வேறு பிராந்தியங்களில் வாழும் சாலமண்டர்களிடையே இந்த ஒளிர்வு ஏன் மாறுபடுகிறது என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட இலக்காக உள்ளது. இயற்கையின் படைப்பில் இன்னும் மனிதக் கண்களுக்குத் தெரியாத எத்தனை மாயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு இந்த ஃபயர் சாலமண்டர் ஆய்வு மற்றுமொரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

ஃபயர் சாலமண்டர்கள் பொதுவாக கருப்பு நிற உடலில் மஞ்சள் நிறப் புள்ளிகளைக் கொண்டு காணப்படுகின்றன. இந்த நிற அமைப்பானது, தான் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதை மற்ற விலங்குகளுக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகப் பல காலமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த உயிரினத்தின் மீது புற ஊதா ஒளியைப் பாய்ச்சியபோது, அவை நீல-பச்சை நிறத்தில் மின்னும் புதிய தோற்றத்தை வெளிப்படுத்தியது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வியக்கத்தக்க மாற்றம் இந்த உயிரினத்தின் மறைக்கப்பட்ட புதிய பரிமாணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.