கர்நாடகாவில் புதிய நன்னீர் நண்டு இனம் கண்டுபிடிப்பு: மேற்குத் தொடர்ச்சி மலையில் வன ஊழியர் நிகழ்த்திய சாதனை
கர்நாடகாவில் வனத்துறையினர் மேற்கொண்ட வழக்கமான ரோந்துப் பணி, மிகப்பெரிய பல்லுயிர் பெருக்க கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வனக்காவலர் ஒருவர் கண்டெடுத்த விசித்திரமான நன்னீர் நண்டு, அறிவியலுக்கு முற்றிலும் புதியதொரு இனம் என ஆராய்ச்சியாளர்கள் தற்போது உறுதி செய்துள்ளனர். இந்த நண்டுக்கு ‘காட்டியானா கர்நாடகா’ (Ghatiana karnataka) என பெயரிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட கொல்லூர் வனப்பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, வனக்காவலர் (Beat Forester) அஜ்மீர் கே (Ajmeer K) என்பவர் இந்த நண்டைக் கவனித்தார். அதன் அசாதாரண நிறம் அவரது கவனத்தை ஈர்த்ததால், அது குறித்து மேலும் ஆராய முடிவு செய்தார். உடனடியாக அவர் இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் (Zoological Survey of India) ஆய்வாளர் சாந்தனு மித்ராவைத் தொடர்புகொண்டார். இந்தத் தகவலே ஆராய்ச்சியாளர்கள் இந்த நண்டைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நண்டின் ஆண் மற்றும் பெண் மாதிரிகளைச் சேகரித்து, அவற்றின் உடல் அமைப்புகள் மற்றும் நிற அமைப்புகளை நுணுக்கமாக ஆய்வு செய்தனர். மேலும், அவற்றின் வாழ்விடச் சூழலும் ஆவணப்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், இது ஏற்கனவே அறியப்பட்ட நண்டு வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இது புதிய உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டு ‘காட்டியானா கர்நாடகா’ எனப் பெயரிடப்பட்டது. இந்த புதிய இன நண்டு தனித்துவமான வண்ண அமைப்பைக் கொண்டுள்ளது. ஆண் நண்டுகளுக்கு பெரும்பாலும் அடர் ஊதா நிறத்தில் காணப்படும். இவற்றின் மேல் ஓட்டில் வெளிர் இளஞ்சிவப்பு டூ மெரூன் (mauve) நிறத்திலான 'V' வடிவ அடையாளம் உள்ளது. பெண் நண்டுகளுக்கு உடலின் முன்பகுதி சாம்பல்-ஊதா நிறத்திலும், பின்பகுதி அடர் சாம்பல்-பழுப்பு நிறத்திலும் இருக்கும். இந்த மாறுபட்ட நிற அமைப்புகளே மற்ற தொடர்புடைய நண்டு வகைகளில் இருந்து இதனை தனித்து அடையாளம் காண ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவின. தற்போது வரை, கொல்லூர் அருகிலுள்ள மாவினகரு (Mavinakaru) பகுதியில் மட்டுமே இந்த நண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக ஈரப்பதம் கொண்ட காடுகளில் வாழும் இந்த நண்டுகள் பாறைகளுக்கு இடையே உள்ள இடுக்குகளில் தஞ்சம் அடைகின்றன. செம்பாறைகளில் (Laterite rocks) நீர் தேங்கியுள்ள துளைகளைப் பயன்படுத்துகின்றன. மரங்களில் உள்ள ஈரமான பொந்துகளுக்குள்ளும் சில நண்டுகள் காணப்பட்டன. இவை பசுமைமாறா மற்றும் பகுதி பசுமைமாறா ஈரப்பதக் காடுகளின் சூழலுக்கு ஏற்ப தங்களை முழுமையாகத் தகவமைத்துக் கொண்டுள்ளன. காட்டின் தரைப்பகுதியில் கிடைக்கும் கரிமப் பொருட்களையே (organic material) இவை உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக அழுகும் தாவரக் கழிவுகள், மரப்பட்டைகள் மற்றும் பாசிகளை (algae) உண்கின்றன. வறண்ட காலங்களில், காட்டின் ஈரப்பதம் மிக்க பாதுகாப்பான இடங்களுக்கு இவை நகர்ந்து விடுகின்றன. இந்த நடத்தை மாறுபட்ட ஈரப்பத சூழலிலும் உயிர்வாழ உதவுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு மேலும் புதிய உயிரினத்தைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் ‘காட்டியானா’ (Ghatiana) பேரினத்தில் அறியப்பட்ட இனங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. மேலும், அறிக்கையின்படி கர்நாடகாவில் பதிவுசெய்யப்பட்ட 8-வது ‘காட்டியானா’ நண்டு இனம் இதுவாகும். அறிவியல் ஆய்வுகளில் களப்பணியாற்றும் வனத்துறை ஊழியர்களின் முக்கிய பங்கை இக்கண்டுபிடிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு வழக்கமான ரோந்துப் பணி கூட, விஞ்ஞானிகளால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத அரிய வனவிலங்குகளை வெளிக்கொண்டுவர உதவும் என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

கர்நாடகாவின் கொல்லூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காவலர், இதுவரை அறிவியலுக்கு தெரியாத புதிய வகை நன்னீர் நண்டு ஒன்றை கண்டறிந்துள்ளார். மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயத்தில் நிகழ்ந்த இந்த முக்கிய கண்டுபிடிப்பை, ஆய்வாளர்கள் தற்பொழுது புதிய இனமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய வகை நண்டுக்கு ‘காட்டியானா கர்நாடகா’ (Ghatiana karnataka) என்று பெயரிடப்பட்டுள்ளது. வனத்துறையினரின் வழக்கமான பாதுகாப்புப் பணியின்போது கிடைத்த இந்த நண்டு, அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது.