PulseNews
தொழில்நுட்பம்

வெறும் 5 நிமிடங்களில் 70% சார்ஜ்: 2026 இறுதிக்குள் 20,000 சார்ஜிங் நிலையங்கள்; உலக நாடுகளுக்கும் வரப்போகும் சீன டெக்னாலஜி

சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான BYD, தனது அதிவேக ‘ஃப்ளாஷ் சார்ஜிங்’ (Flash Charging) நிலையங்களின் எண்ணிக்கையில் 10,000 என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் 10,000-வது சார்ஜிங் நிலையம் ஆகஸ்ட் 28 அன்று ஷென்சென் (Shenzhen) நகரில் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது சீனாவின் நூற்றுக்கணக்கான நகரங்களில் விரிவடைந்துள்ள இந்த சார்ஜிங் நெட்வொர்க், இதுவரை 18.3 லட்சத்திற்கும் அதிகமான (1.83 மில்லியன்) பயனாளர்களுக்குச் சேவையாற்றியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026 இறுதிக்குள் சீனாவில் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ள BYD, இத்தொழில்நுட்பத்தை சர்வதேச நாடுகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. BYD ஃப்ளாஷ் சார்ஜிங் என்றால் என்ன? BYD-ன் இந்த அதிவேக சார்ஜிங் கட்டமைப்பு அதிகபட்சமாக 1,500 kW (1.5 மெகாவாட்) வரை சார்ஜிங் ஆற்றலை (Charging Power) வழங்கும் திறன் கொண்டது. பொது இடங்களில் பயன்பாட்டில் உள்ள வழக்கமான மின்சார வாகன சார்ஜர்களை விட பல மடங்கு கூடுதல் வேகமாகும். இந்த கட்டமைப்பு BYD நிறுவனத்தின் நவீன 2-ம் தலைமுறை ‘பிளேட் பேட்டரி’ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இணக்கமான மின்சார வாகனங்கள், சாதகமான சூழலில்: 10% முதல் 70% வரை வெறும் 5 நிமிடங்களிலும், 10% முதல் 97% வரை சுமார் 9 நிமிடங்களிலும் அதிவேகமாக சார்ஜ் ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனி மற்றும் குளிர்காலத்தில் செயல்பாடு எப்படி இருக்கும்? பொதுவாக மிகக் குறைந்த வெப்பநிலை நிலவும் குளிர்காலங்களில் பேட்டரியின் வேதியியல் செயல்பாடு பாதிக்கப்பட்டு, சார்ஜிங் வேகம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், கடுமையான உறைபனி நிலவும் சூழலிலும் இந்த அமைப்பு தனது அதிவேக சார்ஜிங் திறனைத் தக்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று BYD கூறுகிறது. -30°C உறைபனி சூழலில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்படி, சாதாரண சூழலை விட வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே கூடுதலாக எடுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக சார்ஜிங் நெட்வொர்க் மூலம் இதுவரை 21 கோடி kWh-க்கும் அதிகமான (210 மில்லியன் kWh) மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (nearly one-third) பிற நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் ஆவர். BYD வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டாளர்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சார்ஜ் ஆகும் வேகம் அந்தந்த வாகனத்தின் பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் கட்டமைப்பைப் பொறுத்து மாறுபடும். 20,000 நிலையங்கள் என்ற இலக்கை BYD எட்டுமா? சீனாவில் 2026 இறுதிக்குள் 20,000 ஃப்ளாஷ் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் தனது இலக்கில் BYD நிறுவனம் தற்போது பாதியை எட்டியுள்ளது. இந்த இலக்கை அடைய மீதமுள்ள காலத்தில் மேலும் 10,000 நிலையங்களை அந்நிறுவனம் அமைக்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையை எட்டுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும், இதற்கு மிக வேகமான விரிவாக்கப் பணிகள் தேவைப்படும் என்றும் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வெறும் 5 நிமிடங்களில் 70% சார்ஜ்: 2026 இறுதிக்குள் 20,000 சார்ஜிங் நிலையங்கள்; உலக நாடுகளுக்கும் வரப்போகும் சீன டெக்னாலஜி
PulseNews சுருக்கம்

சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான பி.ஒய்.டி (BYD), தனது அதிவேக ‘ஃப்ளாஷ் சார்ஜிங்’ நிலையங்களின் எண்ணிக்கையில் 10,000 என்ற இலக்கை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28 அன்று ஷென்சென் நகரில் இந்த 10,000-வது நிலையம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

தற்போது சீனாவின் பல்வேறு நகரங்களில் பரவியுள்ள இந்த நெட்வொர்க் மூலம் 18.3 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பயன்பெற்றுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும், வெறும் 5 நிமிடங்களில் 70% சார்ஜ் செய்யும் இந்த சீன தொழில்நுட்பத்தை உலக நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology