5 விநாடிகளில் 800 கி.மீ. வேகம் செல்லும் விமானத்தை மிஞ்சும் பறக்கும் ரயில்; சீனாவில் சோதனை ஓட்டம் வெற்றி..!
விமானத்தின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு சீனா புதிய அதிவேக ரயில் சோதனையை செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஃபு சோதனை மையத்தில் ‘மேக்லெவ்’ அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனையின் முடிவில், சுமார் 1.1 மெட்ரிக் டன் எடை கொண்ட சோதனை வாகனம் வெறும் 05 விநாடிகளுக்குள் மணிக்கு 800 கி.மீ. வேகத்தை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் முக்கியமான சோதனைச் சாதனையாக பார்க்கப்படுகிறது. பயணிகள் விமானங்களின் வேகம் பொதுவாகவே, மணிக்கு சுமார் 800 முதல் 900 கி.மீ. வரை இருக்கும். ஆனால், இந்த 'மேக்லெவ் 'தொழில்நுட்பத்தின் மூலம் தரையில் விமான வேகத்தில் பயணிக்கும் ரயிலை உருவாக்கும் நோக்கில் சீனா செயல்பட்டு சாதனை செய்துள்ளது. வழக்கமான ரயில்களைப் போல தண்டவாளத்தின் மீது சக்கரங்கள் உராய்ந்து செல்லாமல், சக்திவாய்ந்த மின்காந்த விசையைப் பயன்படுத்தி ரயில் தண்டவாளத்திலிருந்து சிறிது உயரத்தில் மிதந்தபடியே இயக்கப்படுகிறது. இதனால் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படாது. இதன் காரணமாகவே இது 'பறக்கும் ரயில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிவேக தொழில்நுட்பத்துடன் கூறிய பயணிகள் ரயில் எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தால், முழுமையான போக்குவரத்துக்குப் பயண நேரங்கள் மிகப்பெரிய அளவில் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வழக்கமான ரயில் அல்லது சாலைப் பயணத்தில் பல மணி நேரம் ஆகும் நிலையில், மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் இயங்கும் ரயில் நடைமுறைக்கு வந்தால், இந்தப் பயணத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். தற்போது இது சோதனை மற்றும் ஆராய்ச்சி கட்டத்திலேயே உள்ளது. தொழில்நுட்பம் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அதிவேக 'மேக்லெவ்' தொழில்நுட்பம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால், எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஃபு சோதனை மையத்தில், 'மேக்லெவ்' வகை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் 1.1 மெட்ரிக் டன் எடை கொண்ட வாகனம், வெறும் 5 விநாடிகளுக்குள் மணிக்கு 800 கி.மீ வேகத்தை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் விமானங்களின் வேகத்திற்கு நிகராக பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதிவேக ரயில் போக்குவரத்து துறையில் இந்த சோதனை ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.