PulseNews
தொழில்நுட்பம்

ஹார்ட் அட்டாக் வருமா வராதா? 20 வருஷத்துக்கு முன்னாடியே கணிக்கும் மிரட்டல் கண்டுபிடிப்பு: சென்னை ஐ.ஐ.டி. அசத்தல்

நாம் அனைவரும் நமது பிறந்தநாளைக் கொண்டு வயதை எளிதாகக் கணக்கிடுகிறோம். ஆனால், நமது உடலுக்குள் இருக்கும் ரத்த நாளங்களுக்கும் (Arteries) ஒரு தனி வயது உண்டு. அது உங்கள் உண்மையான வயதை விட அதிகமாக இருந்தால், எதிர்காலத்தில் இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். தற்போது சென்னை ஐஐடி (IIT Madras) ஆராய்ச்சியாளர்கள் ஆர்ட்சென்ஸ் (ARTSENS) என்ற புதிய சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது வெறும் 5 நிமிடங்களில் உங்களது ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையைக் கண்டறிந்து, அதன் உண்மையான வயதைக் துல்லியமாகக் கணித்துக் கூறிவிடும். ரத்த நாளங்கள் ஏன் வயதாகின்றன? ஆரோக்கியமான ரத்த நாளங்கள் ரப்பர் பேண்ட் போல நெகிழும் தன்மை கொண்டவை. அவை இதயத் துடிப்பின் அழுத்தத்தைச் தாங்கி, சீரான ரத்த ஓட்டத்தை உறுதி செய்கின்றன. 20 அல்லது 30 வயதிலேயே, கொழுப்பு அதிகரிப்பது அல்லது ரத்த அழுத்தம் உயர்வதற்கு முன்பே, இந்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை குறையத் தொடங்குகிறது. உதாரணமாக, உங்கள் வயது 40 ஆக இருக்கலாம். ஆனால், முறையற்ற வாழ்க்கை முறையால் உங்கள் ரத்த நாளங்களின் வயது 60 ஆக மாறியிருக்க வாய்ப்புள்ளது. ஆர்ட்சென்ஸ் (ARTSENS) சாதனம் எவ்வாறு செயல்படுகிறது? மருத்துவமனைக்குச் செல்லாமல், மிக எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது: இது ஒரு வலி இல்லாத பரிசோதனை (Non-invasive). ஊசிகளோ அல்லது ரத்தப் பரிசோதனையோ தேவையில்லை. கழுத்துப் பகுதியில் வைக்கப்படும் சிறிய அல்ட்ராசவுண்ட் சென்சார் (Probe), கை மற்றும் தொடைப் பகுதிகளில் கட்டப்படும் பிரஷர் கஃப் (Cuffs) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ரத்த நாளங்களின் கடினத்தன்மை மற்றும் இதயத்திலிருந்து ரத்த அலைகள் பாயும் வேகம் (Pulse Wave Velocity) ஆகியவற்றை நேரடியாகக் கணக்கிட்டு, ரத்த நாளங்களின் வயதை திரையில் காட்டுகிறது. வெஸ்பா (VESPA) திட்டம்: இந்தியர்களுக்கான புதிய வழிகாட்டி சென்னை ஐஐடி 'ஹெல்த்கேர் டெக்னாலஜி இன்னோவேஷன் சென்டர்' (HTIC) பேராசிரியர் ஜெயராஜ் ஜோசப் மற்றும் அவரது குழுவினர், வெஸ்பா (Vascular health based Early Screening for Public health Adoption- VESPA) என்ற தேசிய அளவிலான திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 1,00,000 மக்களிடம் பரிசோதனை செய்து, இந்திய உடலமைப்பிற்கு ஏற்ற ரத்த நாள ஆரோக்கிய அளவுகோலை (Indian Reference Values) உருவாக்குவது இந்த குழுவின் முக்கிய நோக்கம் இதுவரை 10 மாநிலங்களில் 6,400-க்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏய்ம்ஸ், ஜிப்மர், சிஎம்சி வேலூர் போன்ற முன்னணி மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அமைப்பு இதனுடன் இணைந்து செயல்படுகின்றன. எதிர்காலப் பயன் இந்தியாவில் மாரடைப்பு ஏற்படும் பலருக்கு 40 முதல் 50 வயதிற்குள்ளேயே நோய் பாதிப்பு தீவிரமடைகிறது. இந்நிலையை மாற்ற, அடுத்த 2-3 ஆண்டுகளில் இக்கருவியை எளிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) வரை கொண்டு செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பதே சிறந்தது. ரத்த நாளங்கள் கடினமாவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மருந்துகள் ஏதுமின்றி எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமே இதய நோய்களில் இருந்து நம்மை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஹார்ட் அட்டாக் வருமா வராதா? 20 வருஷத்துக்கு முன்னாடியே கணிக்கும் மிரட்டல் கண்டுபிடிப்பு: சென்னை ஐ.ஐ.டி. அசத்தல்
PulseNews சுருக்கம்

ஒருவர் பிறந்தநாளைக் கொண்டு வயதைக் கணக்கிடுவது போல, உடலின் ரத்த நாளங்களுக்கும் தனி வயது உண்டு. இந்த ரத்த நாளங்களின் வயது உண்மையான வயதை விட அதிகமாக இருந்தால், எதிர்காலத்தில் இதய நோய்கள் வருவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

இதனை முன்கூட்டியே கண்டறிய சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் 'ஆர்ட்சென்ஸ்' (ARTSENS) என்ற புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். வெறும் 5 நிமிடங்களில் ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை ஆய்வு செய்யும் இந்த கருவி, அவற்றின் உண்மையான வயதைத் துல்லியமாகக் கணித்து இதய நோய் பாதிப்புகளை முன்கூட்டியே எச்சரிக்க உதவுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology