“சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்” - பேரவையில் இ.பி.எஸ். பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை துறை தொடர்பான மானியக் கோரிக்கை இன்று (18.08.2026) நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேர், 15.08.2026 அன்று சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காணாமல் போன தங்களது கால்நடையைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது கர்நாடக வனத்துறையினரால் அந்தோணிசாமி, ஜான், ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய நான்கு பேரில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், நான்காவது நபர் படுகாயமடைந்து மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மான் வேட்டையில் ஈடுபட்டதால் இந்நிகழ்வு ஏற்பட்டதாக கர்நாடக அரசு மற்றும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், கர்நாடக வனத்துறையினரால் அப்பாவி தமிழர்கள் மூன்று பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது ஒரு துயரமான சம்பவமாகும். இந்த துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய சதி நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நடைபெற்ற இடம் இரண்டு மாநிலங்களின் எல்லைப் பகுதியாகும். நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், இதை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த உரிய நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவம் குறித்து கர்நாடக சட்டமன்றத்தில் மிகப்பெரிய வாதம் ஏற்பட்டு, சபையை ஒத்திவைக்கின்ற அளவுக்கு நிலைமை சென்றது. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூபாய் 5 லட்சம் நிதி மிகவும் குறைவு. எனவே, தமிழக அரசின் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்த அரசை வலியுறுத்துகிறேன். இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடராத வகையில், கர்நாடக அரசுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும். இப்பிரச்சினையின் உண்மை நிலையை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 15 அன்று நடந்த இச்சம்பவத்தில் தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்ட நான்கு பேர் பாதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தினால் மட்டுமே உண்மை நிலவரம் வெளிவரும் என்று அவர் வலியுறுத்தினார்.