ரீல்ஸ் ஓட்டும் 100 நாள் தவெக ஆட்சி; வாரி வாரி உயர்த்தப்படும் வரிகள்'-கொதித்த எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த, தவெக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இதனை வலியுறுத்தியே இந்த மக்கள் போராட்டத்தை அதிமுக முன்னெடுத்துள்ளது. புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் 100 நாள் ஆட்சி ரீல்ஸ் ஓட்டும் ஆட்சி. பொதுவாக எந்தவொரு புதிய அரசும் பொறுப்பேற்ற முதல் நூறு நாட்களில்தான் மக்களுக்கான அதிமுக்கியத் திட்டங்களைத் தீட்டும். அதன் மூலமே மக்கள் அந்த ஆட்சியின் எதிர்காலத்தை மதிப்பிடுவார்கள். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் வராமல், வெறும் சமூக ஊடக விளம்பரங்கள் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. தவெக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தில் விவசாயிகள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் குறைகளைத் தீர்க்காமல் போராட்டக் களமாகவே மாநிலத்தை மாற்றியிருப்பதுதான் இந்த அரசின் 100 நாள் சாதனை. இந்த அரசு தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டிலும், வேளாண் பட்ஜெட்டிலும் எந்தவொரு புதிய தொலைநோக்குத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, ஏற்கனவே இருக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி, அதையே தங்களின் மிகப்பெரிய வெற்றியாகக் காட்டி நாடகம் ஆடுகிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் மூன்று மாதங்களிலேயே இந்த அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் வரை கடன்பெற்றுள்ளனர். அரசின் வருவாய் செலவு 14,000 முதல் 17,000 கோடியாக இருக்கும் நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெரிய தொகையைக் கடனாக வாங்கியிருப்பது நிதி நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது'' என்றார். கட்சியிலிருந்து நீக்கிய சில நிர்வாகிகளை குறிப்பாக சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்ற கருத்துக்கள் குறித்த கேள்விக்கு ''சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் தடைபடாது" என்று கூறி, கட்சிக்குள் பேச வேண்டிய உள் விவகாரங்களைப் பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்று பதிலளித்தார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தவெக அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக ஆட்சியின் முதல் 100 நாட்களை 'ரீல்ஸ் ஓட்டும் ஆட்சி' என்று சாடியுள்ள எடப்பாடி பழனிசாமி, மக்கள் மீது வரிகள் தொடர்ச்சியாக உயர்த்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இந்த மக்கள் போராட்டத்தை அதிமுக முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.