PulseNews
அரசியல்

“தமிழ் என்றால் கெத்து... பவர்” - முதல்வர் விஜய் பேச்சு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தை இன்று (10.08.2026) தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் விஜய் பேசுகையில், “மொழி என்பது தொடர்பு காணுவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகத்தில் இருக்கின்ற அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். அதையும் யாரும் மறக்க முடியாது. ஆனால், நம் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. திரும்பவும் சொல்கிறேன், தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அது பாசமும், சொந்தமும். நம்மை அறியாமலேயே உயிராக, உறவாக, உணர்வாக, தானாக உள்ளுக்குள் தோன்றுவது. அதேமாதிரி இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொல்லலாம். தமிழன் என்று சொன்னாலே எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று சொல்லத் தேவையில்லை. தாய் என்ற ஒரு முகம் பெரியப் புனிதமோ, அப்படித்தான் தாய்மொழியும். அதனால்தான் நம்முடைய தாய்மொழி, தமிழ்மொழி என்று சொல்வதே போதும். எல்லோருக்கும் நம்முடைய தாய்மொழி உணர்வைப் புரிய வைக்கும் என்று நினைக்கிறோம். நம்முடைய தாய்மொழி நமக்கு மிகப்பெரிய புனிதம். நாம் நம்முடைய எல்லோருக்குமான தமிழ்த்தாயைப் பற்றி சொல்லவா வேண்டும்?தாயைப் போற்றுகிற, வாழ்த்துகிற தமிழ்நாடு தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விட்டுவிட முடியும்? விடமாட்டோம்; விடவும் மாட்டோம். நம் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய இந்தியத் துணைக்கண்டத்தின் இந்திய ஒன்றியத்தின் அழகிய முகமாகச் சொல்லப்படும் மணோன்மணியம் சுந்தரனார், அந்த முகத்தின் நெற்றியில் வைக்கிற பொட்டுதான் திலகம், தமிழ்நாடு என்று சொல்லியிருக்கிறார். இந்தியாவின் நெற்றியில் இந்தியாவின் பொட்டு மாதிரி, ஒரு வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. அந்தப் பொட்டின் நறுமணம் உலகம் பூராவும் பரவுவது போல, தமிழின் புகழும் உலகம் பூராவும் பரவ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். உண்மைதானே அது? இன்றைக்கு தமிழ் பேசுகிற மக்கள் இல்லாத நாடுகள் மிகவும் குறைவுதானே? தமிழும் தமிழனும் இல்லாத நாடுகள் மிகக் குறைவு. திரும்பவும் சொல்லலாம். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அது ஒரு பண்பாடு, அது ஒரு நாகரிகம், அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாகச் சொன்னால், தமிழ் என்றால் கெத்து தமிழ் என்றால் பவர். தமிழனின் புகழைச் சொல்கிற தமிழ்த்தாய் வாழ்த்தில், “அனைத்து உலகும் இன்பமுற” என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்திப் பிடிக்கிறது. எந்த மொழியையும், எந்த மதத்தையும், எந்த இனத்தையும், ஏன் எந்த ஒரு தனி மனிதனையும் கூட தாழ்த்திப் பேசாமல், யாரையும் கொஞ்சம்கூட காயப்படுத்தாமல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு பெயர் இருக்கும். ஒரு கூட்டத்தில் நம்முடைய பெயரைச் சொன்னால், நாம் ஒருவராக மட்டும்தான் திரும்பிப் பார்ப்போம். ஆனால் தமிழ் என்று சொன்னால், ஒட்டுமொத்தமாக நாம் எல்லாருமே திரும்பிப் பார்ப்போம். அப்படி நம் எல்லோருக்கும் இருக்கிற பொதுப் பெயர்தானே தமிழ். நமக்கு தமிழன் என்ற அடையாளத்தைக் கொடுத்ததே தமிழ்தானே? ஒரு பெயரே, ஒரு சொல்லே, ஒரு மிகப்பெரிய வரலாறு என்றால் அது நம் தமிழ்தான். அந்தத் தமிழை உயர்த்திப் பிடிக்கிற தமிழ் பின்னால், தமிழ்நாடு எப்படி பொருத்தமாக இருக்கும்?. ஒரு கட்சிக்குப் பிரச்சனை என்றால் சம்பந்தப்பட்ட அந்தக் கட்சி மட்டும்தான். ஆனால் தமிழ் என்று சொன்னால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். அதனால்தான் சொல்கிறோம் தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு. உலகத்தில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்து போயிருக்கின்றன என்று சொல்லுவார்கள். ஆனால் நம் தமிழ் காலம் காலமாக நிலைத்து, நீடித்து நிற்கிறது. நம் தமிழில் என்ன இல்லை? இலக்கணம், இலக்கியம் எனப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பழமையான வரலாறு இருக்கிறது. நம்முடைய தாய்மொழிக்குத்தானே சொல், காப்பியம், சங்க இலக்கியம் என்று மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது? ஏன், உலகம் முழுவதும் தெரிந்த திருக்குறள் ஒன்று போதாதா தமிழின் பெருமையைச் சொல்வதற்கு?. இவ்வளவு பெருமை கொண்ட தமிழ் மொழிக்கு உரிய முதலிடத்தை நாம் வழங்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும், பண்பாட்டுக்கும், பாரம்பரியத்துக்கும் பாதுகாப்பு உரிமையை வழங்கியிருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டியது அவசியம். அதுதானே மாநில உரிமை?. அப்படிப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, 1970களில் இருந்தே அரச விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு, அரசாணை மூலம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற அரசாணையும் இருக்கிறது. மத்திய அரசின் கடிதத்தில் அரச விழாக்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டிருந்தாலும், அந்த ஆணையில் மாநிலப் பாடல் குறித்து எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்தது. நம் அரசு பொறுப்பேற்றதும், கடந்த மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடிக்கு மாநிலப் பாடல்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு வெளியிட்ட ஆணைக்கு திருத்தம் வெளியிட வேண்டும் என்றும், மாநில விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது ஒரு மரபாகவே இருக்கிறது. அதற்கான அரசாணையும் உள்ளது. தமிழ் நமது உயிர்மூச்சு. தமிழ் மொழி, நமது தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது அரசியலமைப்பில் இருக்கும் இந்திய ஒற்றுமைக்கு எதிரானது அல்ல. மாறாக, வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயர்ந்த கொள்கையையே வெளிப்படுத்துகிறது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று சொல்வதை அரசியல் சம்பந்தமான விவாதமாக மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. இது தமிழர்களின் பொது அடையாளம். நம்மை வேறுபடுத்துவது அல்ல; ஒன்றிணைப்பது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும், தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில், இந்த சட்டமன்றப் பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து, அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து தொடர்ந்து பேசினார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“தமிழ் என்றால் கெத்து... பவர்” - முதல்வர் விஜய் பேச்சு!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயமாக முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதலமைச்சர் விஜய் இன்று (10.08.2026) சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது தமிழர்களின் உணர்வு, பண்பாடு மற்றும் நாகரிகம் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மொழிக்கு உரிய முதலிடத்தையும் மரியாதையையும் வழங்க வேண்டியது மாநிலத்தின் உரிமை மற்றும் கடமை என்று கூறிய முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது இந்திய ஒற்றுமைக்கு எதிரானது அல்ல என்றும், அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். எனவே, கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics