“எனக்கு வருத்தமளித்தது” - ப. சிதம்பரம் எம்.பி. கருத்து!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், நேற்று (08.08.2026) நடைபெற்றது. முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இத்தகைய சூழலில் இந்தக் கூட்டத்தில் மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது. தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம். 2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், தொகுதி மறுவரையறை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்றது. மாநிலத்தின் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ், விசிக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திமுக, அதிமுக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கூறிய அவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த ஒற்றுமை தற்போது ஏன் சிதைந்தது என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும், அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதா குறித்த தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.