PulseNews
அரசியல்

கார்ப்பரேட் ஸ்டைல்; இயற்கை அழகு: முதல்வர் விஜய்க்கு தயாராகும் பிரம்மாண்ட அலுவலகம்

இந்திய அரசியலில் தலைமைச் செயலகக் கட்டடங்கள் வெறும் அரசு நிர்வாக மையங்கள் மட்டுமல்ல; அவை பல வரலாற்று நிகழ்வுகளுக்கும் மாற்றங்களுக்கும் சாட்சியாக அமைபவை. அந்த வகையில், தமிழக தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் அலுவலகத்தில் ஒரு முக்கியமான மாற்றம் செய்யப்படவுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோட்டை கட்டடத்தில்தான் இதுவரை முதலமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர், மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னாள் முதலமைச்சர்கள் இந்த பாரம்பரிய அறையிலிருந்தே தங்களது அரசுப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட தற்போதைய முதலமைச்சர் விஜய்யும் இந்த அறையிலேயே தனது நிர்வாகப் பணிகளைத் தொடங்கினார். இருப்பினும், தற்போதைய அலுவலக அறையானது வெளிக்காற்று வராத வகையிலும், வெளிப்புற நிகழ்வுகளைக் காண முடியாத படியும் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் மூடப்பட்ட அமைப்பாக உள்ளது. நவீன கார்ப்பரேட் பாணி அலுவலகங்களைப் போல, இயற்கைக் காட்சிகளையும், வெளியிலிருக்கும் மக்கள் மற்றும் வாகன நடமாட்டத்தையும் பார்த்தவாறே பணியாற்ற முதலமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, முதலமைச்சரின் அலுவலகத்தை கோட்டை கட்டடத்திற்கு அருகிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து பார்க்கும்போது சென்னை துறைமுகமும், அதன் பின்னணியில் பரந்து விரிந்துள்ள வங்காள விரிகுடா கடலும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இந்தப் புதிய அலுவலக அமைப்பிற்காக அரசு தரப்பில் ரூ.5.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, முதலமைச்சரின் முதன்மை அறை, தனிச் செயலாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான அறைகள், நவீன வசதிகளுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்கு போன்றவை உருவாக்கப்படவுள்ளன. மேலும், வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி இந்த அறைகள் வடிவமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. உயர் பாதுகாப்பு அம்சங்களுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. 10-வது தளத்தின் கண்ணாடிகள் மற்றும் மொட்டை மாடிப் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் நடைமுறைகளைப் பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை 3 மணி வரை பெறப்பட்டு, அன்றைய தினமே மாலை 4 மணிக்குத் திறக்கப்படவுள்ளன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள், அதாவது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து புதிய அலுவலகத்தை ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கார்ப்பரேட் ஸ்டைல்; இயற்கை அழகு: முதல்வர் விஜய்க்கு தயாராகும் பிரம்மாண்ட அலுவலகம்
PulseNews சுருக்கம்

தமிழக அரசு நிர்வாகத்தின் மையப்புள்ளியான சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகம், நவீன வசதிகள் மற்றும் இயற்கை அழகுடன் கார்ப்பரேட் பாணியில் பிரம்மாண்டமாக மாற்றப்பட தயாராகி வருகிறது.

எம்.ஜி.ஆர் முதல் மு.க. ஸ்டாலின் வரையிலான பல முதலமைச்சர்கள் பணியாற்றிய இந்த அலுவலகம், தமிழக அரசியலின் பல முக்கிய மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்துள்ளது. தற்போது இந்த அலுவலகத்தை நவீனமயமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics