சரக்கு இல்லை! திண்டாடும் மதுப்பிரியர்கள்! கல்லா கட்டும் கேரளா!
பு திதாக த.வெ.க. அரசு அமைந்தவுடன் டாஸ்மாக் நிர்வாகத்தை சீர்படுத்துகின்றேன் என்ற பெயரில் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்ஸை நிர்வாக இயக்குனராக நியமித்தது. அவரோ தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தனக்குக்கீழ் நியமித்துக்கொள்ள, அதன் விளைவாக டாஸ்மாக் வருமானங்கள் கேரளாவிற்கு செல்கிறது என்பது தான் ஹைலைட்டே! "பதவிக்கு வந்த உடனேயே அனைத்து மதுபான நிறுவனங்களுக்கும் சம அளவில் கொள்முதல் என இன்டெண்ட் எனப்படும் மதுபான கொள்முதல் முறையில் மாற்றங்களை கொண்டு வர முயற்சித்தார். அதன் அடிப்படையில் உத்தரவையும் பிறப்பித்தார். இதில் தான் இப்போது சிக்கல் உருவாகியுள்ளது. மதுப்பிரியர்கள் அதிக அளவில் விரும்பி அருந்தும் ஃபாஸ்ட் மூவிங் மது வகைகள் தற்போது எங்கும் இல்லையென்பதால் திண்டாடி வருகிறார்கள் மதுப்பிரியர்கள். இதனால் எங்கள் மீது தான் பழி வருகின்றது'' என்கின்றனர் டாஸ்மாக் கொள்முதல் அதிகாரிகள் சிலர். டாஸ்மாக் சூப்பர்வைசர் ஒருவரோ, "டைமன்ட் ரம், எம்சி பிராந்தி, ஹனிபி, மென்ஸ் கிளப் பிராந்தி, எம்ஜிஎம் ஓட்கா, மார்பியஸ் பிராந்தி, 1848 பிராந்தி, கிங்பிஷர் பீர், பிரிட்டிஷ் பீர், எக்ஸ்பிரஸ் பிராந்தி, பிளாக் பியர்ல் பிராந்தி போன்ற எந்த மது வகைகளும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பப்படுவதில்லை. இதனால் மதுப்பிரியர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறோம் நாங்கள்'' என புலம்புகிறார் அவர். இன்டெண்ட் எனப்படும் மது கொள்முதலை முழுமையாகப் பார்த்துக்கொள்வது டாஸ்மாக் அட்மின் ஜி.எம். ஷர்மிளாவே. "கொள்முதலை சீர்படுத்து கிறோம்; அனைத்து கம்பெனிகளிடமும் ஒரே அளவில் கொள்முதல் செய்கிறோம்' எனும் பெயரில், விற்பனையாகாத சரக்குகளை கொள்முதல் செய்வதால் சரக்குகள் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைத்து கம்பெனிகளிலும் சரிசமமாக கொள்முதல் செய்வது நல்ல முடிவு தான். அந்த கொள்முதலில் எப்பொழுதும் விற்பனையாகும் சரக்குகள் இருந்தால் இந்த நிலை வராதே! கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தேக்கமடைந்த சரக்குகளை என்ன செய்வது? யாரை திருப்திப்படுத்த இந்த செயல்?' என்ற கேள்விகளும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன. டாஸ்மாக் கொள்முதல் என்பது மிகவும் கூர்நோக்குவாய்ந்த ஒரு சப்ஜெக்ட். மாநில வருவாய் ஆதாரத்திற்கு நேரடியாக தொடர்பு படுத்தக்கூடிய இந்த விஷயத்தில் இவ்வளவு கவனக்குறைவோடு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையையே அசைத்துப்பார்க்கும் என்பது கடந்த கால வரலாறு. இதுகுறித்து கீழ்நிலை அலு வலர்களும் நேரடியாக எம்.டி.யை தொடர்பு கொள்ள முடியாமல் ஜி.எம். அட்மின் சர்மிளா மூலம் கொள்முதல் சிக்கல்களை தெரியப்படுத்தி வருகின்றனர். ஆனால், எம்.டி. புதிதாக பொறுப்புக்கு கொண்டுவந்த அந்த அதிகாரிக்கு கொள்முதல் குறித்து எவ்வித புரிதலும் இல்லை என்பதுதான் நிதர்சனம். இது தான் தருணமென மாவட்ட மேலாளர்களும், நிர்வாகத் தலைமையில் இருந்து எவ்வித தெளிவான உத்தரவுகளும் வராததால், குறுநில மன்னர்கள் போல் தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் மதுபான ஆலைகளிடம் பர்ச்சேஸ் செய்வது நடைமுறையில் காணக்கூடிய ஒன்று. "புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷோ, "அண்டை மாநிலங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வகை மதுபானங்களும் தமிழ்நாட்டின் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்க வழிவகை மேற்கொள்ளப் படும்' என்றார். ஆனால் இன்றைய நிலையோ தலைகீழாக உள்ளது. கோவை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டாஸ்மாக் சரக்கிருப்பு நிலை இன்னும் படுமோசம். நமது டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கேட்கும் சரக்குகள் கிடைக்காத காரணத்தால் அண்டை மாநிலமான கேரளாவை நோக்கி செல்கின்றார்கள். குறிப்பாக, பொள்ளாச்சி மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள எல்லையோர டாஸ்மாக் கடைகளில் சரக்கு பற்றாக்குறையால் கேரளாவிற்கு ஆட்டோ மற்றும் பேருந்துகளில் ஏறிச் சென்று, அங்கு போய் விரும்பிய சரக்குகளை வாங்குகிறார்கள் மதுப்பிரியர்கள். அதேபோல் ரம் வகைகளை அதிகம் விரும்பி உட்கொள்ளும் மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு ரம் வகைகளுக்கு தட்டுப்பாடு என்பதால் திருவனந்தபுரம், பாறசாலா, நெய்யாற்றங்கரை கடைகளுக்கு சென்று ரம் வாங்கி அருந்துகிறார்கள். இதனால் தினசரி ரூபாய் 1 முதல் ரூபாய் 1.5 கோடி அளவிற்கு நமது விற்பனை சரிந்து கேரளாவிற்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமின்றி, எஃப்.எல். 2 கிளப்புகளிலும், எஃப்.எல். 3 ஹோட்டல்களிலும் இதே சூழ்நிலைதான் நிலவுகிறது'' என்கின்றது நடப்பு புள்ளிவிபரங்கள். நிலைமை இன்னும் மோசமடைவதற்கு முன்பு கொள்முதல் விவகாரங்களில் தான்தோன்றித்தன மாக செயல்படும் எம்.டி. மற்றும் ஜி.எம். அட்மின்களின் போக்கிற்கு கடிவாளம் போட்டு கீழ்நிலையில் பணியாற்றும் அனுபவம் கொண்ட டாஸ்மாக் நிர்வாகிகளின் யோசனைகளையும் கேட்டு, கொள்முதல் நடவடிக்கைகளில் ஆக்கப் பூர்வமான மாற்றங்களை கொண்டுவர வேண்டும். மேலும், மதுப்பிரியர்கள் விரும்பிய மது வகைகளை உடனுக்குடன் கிடைக்க சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதல் கொள்முதல் மேற்கொண்டு மதுவகை களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்." என்பதே துறை அலுவலர்களின் கோரிக்கை. இந்நிலையில், சமீபத்தில் VSOP Exshaw, Louis Vernant, McDowells (VSOP & No.1), Mensclub, Honey Bee, மற்றும் என்ரிகா தயாரிப்பு களான(VSOP Select, Platinum Reserve XO, Premium French) பிராந்திகள், மேலும் வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி டார்க் ரம் உள்ளிட்ட 11 வகை மதுபான வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி, ஆபத்தான இயற்கையான மற்றும் செயற்கையான சுவையூட்டிகள் (Natural Identical and Artificial flavouring Substances) சேர்க்கப்பட்டுள்ளது எனத் தடை செய்தது டாஸ்மாக் நிர்வாகம். 13ஆம் தேதி தடைவிதிக்க, ஆனால் தடை விதித்த மறுநாளே தடைக்கு தடை போட்டது டாஸ்மாக்! எதனால் இந்த மறு உத்தரவு? இது குறித்து பேசிய தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் கஜலட்சுமியோ, "என்ரிகா நிறுவனத்துக்கு எநநஆஒ ஏன் தடை விதித்தது? ஏன் தடையை நீக்கியது? என்பது எங்களுக்குத் தெரியாது'' என்றார் அப்பாவியாக. ஒன்றியத்தின் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்து, மறுநாளே தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து தெரியாதென்று விளக்கம் தருகிறார்கள். மதுவிலக்கு ஆயத்தீர்வை பணி என்ன என்பது துறையிலுள்ள அனைவருக் கும் தெரியுமா என்பதுதான் கேள்விக்குறியே! -இந்திரஜித்

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு, டாஸ்மாக் நிர்வாகத்தை சீரமைப்பதாகக் கூறி நந்தகுமார் ஐ.ஏ.எஸ் அதன் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு நெருக்கமான அதிகாரிகளைப் பணியமர்த்தியதால், டாஸ்மாக் வருவாய் கேரளாவுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரத்திற்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர நந்தகுமார் முயற்சித்தார். இதற்காக அனைத்து மதுபான நிறுவனங்களிடமும் சம அளவில் கொள்முதல் செய்யும் 'இன்டெண்ட்' முறையை அமல்படுத்த உத்தரவிட்டதன் விளைவாகவே, தற்போது மதுபானத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.