பாவ-சாபம் தீர்க்க அகத்தியர் கூறும் வழிமுறைகள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி
"அ தர்ம மென்றும் தர்ம மென்றும் இரண்டுண்டாக்கி ஒழிந்திடுவா ரென்று சொல்லிப் பிறப்புண் டென்றும் உத்தமனாய் பிறப்பானென்று முலகத்தோர்கள் தெரிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீடரென்றும் சீவனத்துங் கங்கல்லோ தெளிந்து காணே.' (அகத்தியர்) பெரிய பக்திமான் போன்ற தோற்றத்துடன் சுமார் 75 வயதுடைய ஒருவர் நாடியில் பலனறிய வந்திருந்தார். அவரை. அமரவைத்து, "எதைப் பற்றி பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன். "ஆசான்அகத்தியரிடம் நான் என்னைப் பற்றி எந்தப் பலனும் கேட்க வரவில்லை. முற்பிறவி பாவம் - சாபம் தீர பணம், பொருளை தானம், தர்மம் செய்யச் சொல்கின்றார்கள். என் வாழ்வில் பல பிரச்சினைத் தடைகளை சந்தித்து அனுபவித்து வருகின்றேன். இவர்கள் கூறியதை நம்பி பலவகையில் நிறைய தானம், தர்மம் செய்துள்ளேன். ஆனால் பொருள் சொத்துகள்தான் அழிந்ததே தவிர கஷ்டம் தீரவில்லை. அதனால்தான் தானம், தர்மம் செய்தால் பிரச்சினை தீருமா? பாவ-சாபம் நிவர்த்தியாகுமா?இது உண்மையா அல்லது பொய்யான வார்த்தையா என்பதற்கு உண்மையான விளக்கம் அறிய ஆசானை நாடி வந்தேன்'' என்றார். இதுநாள்வரை மனிதர்களின் பாவ-சாப பதிவுகளையும், அதனால் உண்டாகும் பாதிப்புகள், தடைகள். அவை நிவர்த்தியாக வழிமுறைகளை நாடிமூலம் படித்துக் கூறியுள்ளேன். நீங்கள் கேட்பது போன்று விளக்கங்களைக் கேட்டது இல்லை. உங்கள் கேள்விக்கு அகத்தியர் பதில் சொல்வாரா என்று தெரியவில்லை என்றேன். அகத்தியர் இதற்கு விளக்கம் கூறினால் நாமும் தெரிந்து கொள்வோம் என்ற எண்ணம் மனதில் தோன்றியதால், ஓலையைப் பிரித்துப் பார்த்தேன். அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கினார். இவன் இவ்வளவு வயதுவரை ஜோதிடர்கள், குருமார்கள் கூறியதை கேட்டும், பல நூல்களைப் படித்துவிட்டு, கோவில், கோவிலாக குரு, மடம், பீடம் என்று அலைந்து அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தன் பாவம் சாபம் தீர பணம், பொருள், சொத்துகளை தானம் செய்து, ஞானம் இல்லாத தற்குறியாக வாழ்ந்துவிட்டு இப்போது உண்மையைத் தேடி என்னிடம் வந்துள்ளான். உண்மை விளக்கத்தையறிந்து இனிமேல் என்ன செய்யப் போகின்றான் என்றுகூறியவர் தானம், தர்மம் பற்றிய விளக்கத்தைக் கூறினால், அது பெரிதாக நீண்டு கொண்டேபோகும். ஆனாலும் சுருக்கமாக கூறுகின்றேன் புரிந்து கொள்ளட்டும். தானம் தானம் என்பது நமது குடும்ப உறவுகளுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் பணம், பொருள், சொத்துகளைக் கொடுப்பது, தானம் கொடுத்தவரும் அதைத் திரும்பக் கேட்கக்கூடாது. யாருக்கு தானம் கொடுத்தால் பாவம்- சாபம் தீரும் என்பதை அறிந்து அவர்களுக்கு தானம் தரவேண்டும். ஒருவன் தனது முன் பிறவியில் தனது குடும்ப உறவுகள் தன்னை நம்பியவர்கள் சமுதாயத்தில் சார்ந்து வாழ்பவர்களுக்கு செய்த பாவங்கள், துரோகங்கள் இந்த பிறவி வாழ்வில் சிரமம், தடைகளை தண்டனையாகத் தந்து அனுபவிக்கச் செய்யும். மூலத்தை அறிந்து இப்பிறவியில் எந்த உறவுகளுக்கு எந்த தானத்தைச் செய்தால் முன் பிறவி பாவ - சாப - தோஷத்தால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுத்துக்கொண்டு நல்ல வாழ்வை அடையலாம். பித்ரு சாபம், தாய் சாபம், புத்திர சாபம், களத்திரதோஷம், சகோதர சாபம், பாமர சாபம் இவை தன் முற்பிறவி தாக்கத்தின் காரணத்தை அறிந்து, எந்த சாபத்தால் பாதிக்கப்படுகின்றோம் என்பதை தெரிந்து குடும்பத்தில் இப்பிறவியிலுள்ள அந்த உறவுகளுக்கு எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தான உதவிகளை செய்ய வேண்டும். ஒருவனுக்கு பெற்ற தந்தைவிட்ட சாபம் (பித்ரு தோஷம்) இருந்து பாதிப்பை தந்தால் இப்பிறவியில் அவன் தன் தந்தைக்கு ஒரு மகன் முறையாகச் செய்தால் தானத்தால் நன்மை கோவில், குரு க்கள், மடம் மற்றவர்களுக்கு தானம் செய்தால் பாவ- சாபம் தீராது. தர்மம் தர்மம் என்பது ஒருவன், தன்னையறிந்து, தன் விதியறிந்து முன் பிறவியின் பாவ- சாப நிலையறிந்து தன் வாழ்வில் நன்மை எது? தீமை தருவது எது? எதை எப்படி செய்யவேண்டும் என்பதை புரிந்து தன் நடைமுறை வாழ்வின் செயல்களில் கடைபிடித்து வாழ்வதே அவரவர் தர்மமாகும். பணம், பொருள், சொத்து, நிலம் இவற்றை தனக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு கொடுப்பது தர்மம் அல்ல, இதனால் நன்மையும் இல்லை. தர்மம் என்பது ஒருவர் தன்னையறிந்து, தன் விதியறிந்து தன் வாழ்வில் நன்மை எது? தீமை தருவது எது? அனைத்திலும் வெற்றி பெற வழி அறிந்து செயல்படுதல் பணம், பொருள், சொத்துகளை சம்பாதித்தல் அதை காப்பாற்றுதல் போன்று அனைத்தையும் தெரிந்து புரிந்து வாழ்தலே அவரவர் தர்ம வாழ்வு ஆகும். தர்மம் என்பது மற்றவர்கள் வாழ்க்கையை கெடுக்காமல், பிறர் பொருள் சொத்துக்கு ஆசைப் படாமல், அபகரிக்காமல், நம்பியவர்களுக்கு துரோகம் செய்யாமல் வாழ்வது தர்ம நிலையாகும். ஒரு அரசன் தன் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிசெய்து காப்பாளனாக இருப்பது ராஜ தர்மம். ஒரு குடும்ப தலைவன் தனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ அவர்களை காப்பாற்றுவது, பொருள் சேர்த்து வைப்பதும் ராஜ தர்மம் ஆகும். தானம் வேறு, தர்ம நிலை வேறு. குடும்ப உறவுகளுக்கு செய்யும் தானம் பாவ- சாப- தோஷம் நீக்கி புண்ணியத்தை தரும். தர்மம் என்பது வாழ்வில், மகிழ்ச்சி, நிம்மதி, காரிய வெற்றியைத் தந்து வாழ்வை உயர்த்தும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார். இன்றைய நாளில் கடவுள், குரு, ரிஷி, முனிவர், சித்தர் எனக் கூறிக்கொண்டு, அவர்கள் பிழைக்க, மக்களிடையே மதம், சாதி, இனம் என பிரித்து அவரவர் மனதில் பட்டதையெல்லாம் எழுதி வைத்து விட்டார்கள். மதரீதியாக தர்ம வாழ்வு மாறு பட்டதே தவிர, அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் வாழ்வில் உயர்வை தரும் வாழ்க்கை முறையே தர்மம் ஆகும். செல்: 99441 13267.

சுமார் 75 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர், அகத்தியர் நாடி ஜோதிடம் மூலம் தனது முற்பிறவி பாவங்கள் மற்றும் சாபங்களிலிருந்து விடுபட வழிகேட்டு சித்தர் தாசன் சுந்தர்ஜியை அணுகினார். தர்மம் மற்றும் அதர்மம் குறித்த அகத்தியரின் வரிகளை மேற்கோள் காட்டி, பணம் அல்லது பொருள் தானம் அளிப்பதன் மூலம் இத்தகைய பாவங்கள் தீருமா என்று அவர் வினவினார்.
அகத்தியர் அருளிய பாடல்களின்படி, பிறப்பு, இறப்பு மற்றும் குரு-சீடர் உறவின் மகத்துவத்தைப் புரிந்துகொள்வதே வாழ்க்கையின் தெளிவு எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. முற்பிறவி வினைகளைத் தீர்ப்பதற்கான சரியான வழிமுறைகளைத் தேடி வந்த அந்த முதியவருக்கு, நாடி ஜோதிடத்தின் வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டது.