ஏல முறைகேட்டில் அமைச்சரின் அண்ணன்! -அந்தியூர் சலசலப்பு !
"அ. தி.மு.க., தி.மு.க.வினர் ஆளுங்கட்சியா இருக்கறப்பகூட இப்படியொரு ஏல முறைகேடு நடந்ததில்ல. ஆனால் த.வெ.க. அமைச்சருடைய ஆட்கள் இந்த முறைகேட்டை வெளிப்படையா செஞ்சிருக்காங்க...'' என கொதித்தெழுந்து பேசுகிறார்கள் அந்தியூர் பகுதி பொதுமக்கள். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்றது, வருடத்திற்கொரு முறை நடக்கும் குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழா. கர்நாடகா, கேரளா, ஆந்திரா என வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த தேர்த்திருவிழாவுக்கு வந்து செல்வார்கள். இந்தத் திருவிழா வில் குதிரை, ஆடு மற்றும் மாட்டுச்சந்தை பிரபலமானது. இந்த கோயிலையொட்டி யுள்ள கெட்டிசமுத்திரம், சங்கராபுரம், மைக்கேல்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் தேர்த்திருவிழா தற்காலிகக் கடைகள் ஆயிரக்கணக்கில் அமைக்கப்படும். 10-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை என ஒரு வார திருவிழாவிற்கு சுமார் 30 லட்சம் மக்கள் வந்துசெல்வார்கள். இந்த தற்காலிகக் கடைகள் அமைக்க கட்டணம் வசூல்செய்ய ஏலம்விட்டதில்தான் த.வெ.க. அமைச்சர் விஜய்பாலாஜி நேரடியாகத் தலையிட்டு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது ஈரோடு மாவட்டத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. த.வெ.க.வின் ஈரோடு மா.செ.வாகவும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கைத்தறித்துறை அமைச்சராகவும் இருப்பவர் விஜய்பாலாஜி. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என எங்கு ஏலம் நடைபெற்றாலும் அதில் தலையிட்டு தனக்கு ஆதாயம் தேடுவது விஜய் பாலாஜியின் வழக்கமான நடவடிக்கை. அது மட்டுமல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறுகிற பல்வேறு செயல்பாடுகளிலும் தலையிட்டு பங்கு, கமிஷன் வாங்குவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என இப்படி ஏராளமான முறைகேடான விஷயங்களில் விஜய்பாலாஜி பல ஆண்டுகளாகச் செயல்பட்டார் என விஜய் ரசிகர்மன்றத்தைச் சேர்ந்தவர்களே கூறுகிறார்கள். அந்தியூர் தேர்த்திருவிழா தற்காலிக கடைகளை ஏலம் எடுக்கச் சென்ற மாதம் 16-ஆம் தேதி அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில் என்ன நடந்தது என்பதை அந்தியூர் பா.ம.க. செயலாளர் உமாநாத் நம்மிடம் விளக்குகிறார். "10,000 வைப்புத் தொகை கட்டி பலரும் ஏலத்தில் கலந்துகொண்டோம். ஏலம் எடுப்பவர்கள் அடுத்த நாளுக்குள் ஏலத் தொகையை யூனியன் அலுவலகத்தில் செலுத்தவேண்டும். இதுதான் விதி. இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த த.வெ.க. அமைச்சர் விஜய்பாலாஜி தரப்பிலிருந்து நாங்களே ஏலம் எடுத்துக்கொள்கிறோம் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்ற மிரட்டல் வந்தது. விஜய்பாலாஜியின் சொந்த அண்ணனான பிரபு, அந்தியூர் பயணியர் விடுதி மற்றும் நெடுஞ் சாலைத்துறை கெஸ்ட்ஹவுஸில் வந்து தங்கிக்கொண்டு அதிகாரிகளை வரவழைத்து இப்படி செய், அப்படி செய் என கூறினார். விஜய்பாலாஜியின் ஆட்கள் இங்கு முகாமிட்டு ஏலத்தில் நேரடியாகக் கலந்துகொண் டார்கள். அமைச்சரின் அண்ணன் பிரபு தரப்பில் யுவராஜ் என்பவர் 27,01,000 ஏலத்தொகையைக் கூறினார். எங்கள் தரப்பில் அய்யன்பெருமாள் என்பவர் 28,01,000 கூறினோம். உடனே அமைச்சர் தரப்பிலிருந்து ஒருவர் ஒருகோடி ரூபாய் என ஏலம் கேட்டார். அத்துடன் ஏலம் முடிந்தது. ஆனால் அடுத்தநாள் அவர்கள் ஏலம் கேட்டபடி தொகை கட்டவில்லை. இந்த நிலையில் விதிப்படி அந்த ஏலத்தை ரத்து செய்துவிட்டு மறுஏலம் நடத்தியிருக்க வேண்டும். அதிகாரிகள் அப்படிச் செய்யவில்லை. அமைச்சரின் நிர்பந்தத்தால் இரண்டாவதாக அதிக தொகை கேட்ட அய்யன்பெருமாளுக்கு கொடுக்காமல் அமைச்சரின் சகோதரர் பிரபுவின் ஆளான யுவராஜுக்கு, அய்யன்பெருமாள் கேட்ட தொகையிலிருந்து ஒருலட்சம் குறைவாக 27,01,000 ரூபாய்க்கு ஏலத்தை உறுதிசெய்து வழங்கி விட்டார்கள்.. அமைச்சரின் அழுத்தத்துக்கு அடிபணிந்து அதிகாரிகள் இப்படி முறையின்றி ஏலம் விட்டதைக் கண்டித்து போராட்டம் செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஏலத்தில்தான் முறைகேடு என்றால் தற்காலிகக் கடைகள் அமைத்து வசூலில் ஈடுபடுவதில் அடித்துப் பிடுங்குவதுபோல் கொள்ளையடிக்கிறார்கள் அமைச்சரின் ஆட்கள்.. கோயிலுக்கு மேல்புறம் கீழ்புறம் என இரண்டு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட கடைகளில் ஒரு கடைக்கு 50,000, 80,000, ஒரு லட்சம் என வசூல் செய்வதோடு திருவிழாவுக்கு ராட்டினம், தூரி அமைப்பவர்களிடமும் முறையின்றிப் பிடுங்குகிறார்கள்.. கண்முன்னே ஒரு கொள்ளைக் கும்பல் ஈரோட்டிலிருந்து வந்து அந்தியூரில் கொள்ளையடிப்பதை வேடிக்கைதான் பார்க்கமுடிகிறது. எதுவும் செய்யமுடியவில்லை. அமைச்சரின் அண்ணன் பிரபு கெஸ்ட் ஹவுஸில் அமைச்சரைப்போல அமர்ந்துகொண்டு இந்த கொள்ளை வசூலில் ஈடுபட்டு வருகிறார்'' என ஆதங்கத்தோடு கூறினார். ஏற்கனவே ஈரோடு மாநகராட்சி உட்பட நகராட்சி, பேரூராட்சிகளில் எல்.இ.டி. சோலார் லைட் அமைக்கும் ஏலத்தில் தலையிட்டு அதில் கமிஷன் கேட்டதாகவும் தோல், சாய ஆலை அதிபர்கள் தன்னை கவனிக்கவேண்டுமென அழுத்தம் கொடுத்ததாகவும் உளவுத்துறை அரசின் மேலிடத்திற்கு ரிப்போர்ட் வைத்துள்ளது. இந்த ஏல விவகாரத்திலாவது விஜய்பாலாஜி அன்ட் கோ மீது முதல்வர் விஜய்யின் த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழா ஏலத்தில் முறைகேடு நடந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் சகோதரர் ஆதரவாளர்களுடன் இணைந்து இந்த முறைகேட்டை வெளிப்படையாகச் செய்ததாக அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முந்தைய காலங்களில் அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் கூட இத்தகைய ஏல முறைகேடுகள் நடந்ததில்லை எனப் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரும் இந்த பிரசித்தி பெற்ற திருவிழாவின் ஏல நடவடிக்கையில் முறைகேடு நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.