PulseNews
லைஃப் ஸ்டைல்

இந்த மழைக்காலம் கவலையே வேண்டாம்... வீட்டை இப்படி சட்டுனு ரெடி பண்ணுங்க

மழைக்காலம் என்றாலே பலரின் மனதில் முதலில் தோன்றுவது சூடான தேநீர், ஜன்னல் வழியே வீசும் குளிர்ந்த காற்று, மழைத்துளிகளின் இனிய ஓசை, பசுமையாக மாறும் இயற்கை ஆகியவையே. ஆனால் இந்த இனிமையை முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனில், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வீட்டை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் தயார் செய்து வைப்பது மிகவும் அவசியம். சிறிய அலட்சியம்கூட மழைக்காலத்தில் பெரிய சேதங்களாக மாறக்கூடும். எனவே, பருவமழை வருவதற்கு முன்பே வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்து தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால், மழைக்காலத்தை அச்சமின்றி நிம்மதியாக கழிக்க முடியும். கழிவு நீர் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை முதலில் சோதிக்கவும் வீட்டின் மழைநீர் வெளியேறும் குழாய்கள், கழிவு நீர் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் இலைகள், மண், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை அடைத்திருக்கிறதா என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். இவற்றை முன்கூட்டியே சுத்தம் செய்தால் மழைநீர் தேங்கி வீட்டிற்குள் புகும் அபாயம் குறையும். குறிப்பாக மொட்டை மாடி மற்றும் பால்கனியில் நீர் தேங்காமல் வெளியேறும் வசதி சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கூரை, சுவர் மற்றும் மாடி பராமரிப்பு அவசியம் மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதி கூரைகள்தான். ஓடுகள் உடைந்துள்ளனவா, கான்கிரீட் கூரையில் விரிசல்கள் உள்ளனவா, நீர் ஒழுகும் அறிகுறிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். தேவையான இடங்களில் வெதரிங் கோர்ஸ் அல்லது வாட்டர்ப்ரூஃப் பூச்சு அடித்தால் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அதேபோல் வீட்டின் சுவர்களில் சிறிய விரிசல்கள் இருந்தால்கூட மழைநீர் ஊடுருவி ஈரப்பதத்தை ஏற்படுத்தும். இதனால் சுவர் பெயிண்ட் உரிதல், பூஞ்சை வளர்ச்சி மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே சீலண்ட் அல்லது சிமெண்ட் கலவை கொண்டு விரிசல்களை அடைத்து பாதுகாக்க வேண்டும். மின் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் மழைக்காலத்தில் மின் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், மின் வயரிங், ஸ்விட்ச் போர்டுகள், பிளக் பாயிண்ட்கள், எர்திங் இணைப்புகள் ஆகியவற்றை ஒரு முறை எலக்ட்ரீஷியன் மூலம் பரிசோதிக்க வேண்டும். சேதமடைந்த வயர்கள், தளர்வான ஸ்விட்ச்கள், பழைய மின் சாதனங்கள் இருந்தால் உடனடியாக மாற்றுவது பாதுகாப்பானது. வெளிப்புற மின் இணைப்புகள் மழைநீர் படாதவாறு பாதுகாக்கப்பட வேண்டும். மின்வெட்டு ஏற்படும் சூழ்நிலைக்காக சார்ஜ் செய்யப்பட்ட அவசர விளக்குகள், டார்ச் லைட் மற்றும் கூடுதல் பேட்டரிகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும். கதவுகள், ஜன்னல்கள் சரியாக செயல்படுகிறதா? மழைநீர் வீட்டிற்குள் புகாமல் இருக்க கதவுகள் மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ரப்பர் சீல்கள் சேதமடைந்திருந்தால் மாற்றி பொருத்தலாம். காற்றோட்டம் கிடைக்கும் நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைப்பது வீட்டின் ஈரப்பதத்தை குறைக்க உதவும். வெயில் தெரியும் நேரங்களில் அறைகளுக்கு இயற்கை ஒளி கிடைப்பதும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. பூஞ்சை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவது எப்படி? மழைக்காலத்தில் வீட்டின் உள்ளே ஈரப்பதம் அதிகரிப்பதால் பூஞ்சை எளிதில் உருவாகும். குறிப்பாக அலமாரிகள், சுவர் மூலைகள், மரச்சாமான்கள், சோபாக்கள் மற்றும் படுக்கை அறைகளில் அதிக கவனம் தேவை. மரச்சாமான்களுக்கு முன்கூட்டியே வார்னிஷ் பூசினால் அவை ஈரத்தால் சேதமடைவது குறையும். ஃபோம் சோபாக்களுக்கு பாதுகாப்பு உறைகளை பயன்படுத்தலாம். அலமாரிகளில் சிலிகா ஜெல் பைகள் அல்லது ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருட்களை வைத்தால் ஆடைகள் மற்றும் ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும். கழிப்பறை மற்றும் சமையலறையை மறக்காதீர்கள் கழிப்பறை கதவுகள், தாழ்ப்பாள்கள், ஜன்னல்கள் போன்றவற்றில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை மற்றும் துருப்பிடிப்பு ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் அல்லது லூப்ரிகேண்ட் தடவினால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும். சமையலறை அலமாரிகள், மசாலா பொருட்கள், தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களை காற்று புகாத டப்பாக்களில் சேமிக்க வேண்டும். மழைக்காலத்தில் கரப்பான் பூச்சி, எறும்பு மற்றும் பூச்சித் தொல்லை அதிகரிக்கும் என்பதால் சமையலறையை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது நல்லது. தண்ணீர் தொட்டி மற்றும் குடிநீர் பாதுகாப்பு வீட்டின் மேல்தளம் மற்றும் தரைத்தளத்தில் உள்ள நீர் சேமிப்பு தொட்டிகளை மழைக்கு முன்பாக சுத்தம் செய்து மூடியை சரியாக பொருத்த வேண்டும். மழைநீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். குடிநீரை வடிகட்டி அல்லது கொதிக்கவைத்து குடிப்பது மழைக்கால தொற்று நோய்களைத் தவிர்க்க உதவும். அவசர கால பொருட்களை முன்கூட்டியே தயார் செய்யுங்கள் மழைக்காலத்தில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உருவாகலாம். எனவே வீட்டில் எப்போதும் கீழ்க்கண்ட பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. டார்ச் லைட் மற்றும் கூடுதல் பேட்டரிகள் குடை மற்றும் ரெயின் கோட் முதலுதவி பெட்டி கிருமி நாசினிகள் மற்றும் சானிடைசர் காய்ச்சல், சளி, இருமலுக்கான அடிப்படை மருந்துகள் குடிநீர் பாட்டில்கள் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி அல்லது ரீசார்ஜ் அவசர விளக்குகள் பவர் பேங்க் மற்றும் மொபைல் சார்ஜர்கள் அவசர தொடர்பு எண்களின் பட்டியல் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை இருப்பு கொசு மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துங்கள் மழைக்காலத்தில் தேங்கிய நீரில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும். வீட்டைச் சுற்றியுள்ள பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பூந்தொட்டிகள் மற்றும் திறந்த பாத்திரங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு வலை, கொசு விரட்டி மற்றும் ஜன்னல் வலைகளை பயன்படுத்துவது டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும். முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், நில ஆவணங்கள், வங்கி பதிவுகள், கல்விச் சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நீர் புகாத கோப்புறைகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவற்றின் டிஜிட்டல் நகல்களையும் பாதுகாப்பாக சேமித்து வைத்திருப்பது நல்ல பழக்கமாகும். வீட்டை சுற்றியுள்ள மரங்களையும் பராமரிக்கவும் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களின் உலர்ந்த கிளைகளை முன்கூட்டியே வெட்டிவிட வேண்டும். பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது கிளைகள் முறிந்து வீடு, மின் கம்பிகள் அல்லது வாகனங்கள் மீது விழும் அபாயம் இருக்கலாம். செல்லப்பிராணிகள் இருந்தால் கூடுதல் கவனம் வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் இருந்தால் அவற்றுக்கான உலர்ந்த படுக்கை, சுத்தமான குடிநீர், உணவு மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் இடத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். ஈரப்பதத்தால் அவற்றுக்கும் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றின் சுத்தத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பழைய பெட்டிகள், மரச்சாமான்கள், காகிதக் குவியல்கள் போன்றவை ஈரப்பதம் மற்றும் பூச்சிகளுக்கு தங்கும் இடமாக மாறும். எனவே மழைக்காலத்திற்கு முன்பே தேவையற்ற பொருட்களை அகற்றி வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. மழையின் இனிமையை கவலையின்றி ரசிக்க... 'வருமுன் காப்போம்' என்ற பழமொழிக்கேற்ப, மழை வருவதற்கு முன்பே வீட்டை முழுமையாக பராமரித்து பாதுகாப்பாக மாற்றிக் கொண்டால் எதிர்பாராத சேதங்கள், செலவுகள் மற்றும் சிரமங்களை பெருமளவில் தவிர்க்க முடியும். வீட்டில் ஈரம், பூஞ்சை, மின் விபத்து, நீர் கசிவு போன்ற பிரச்சினைகள் இல்லாமல், ஜன்னல் அருகே அமர்ந்து சூடான தேநீருடன் மழைத்துளிகளின் இசையையும் குளிர்ந்த காற்றின் இதத்தையும் முழு மனதுடன் ரசிக்கும் இனிய மழைக்கால அனுபவத்தை குடும்பத்துடன் நிம்மதியாக அனுபவிக்கலாம்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்த மழைக்காலம் கவலையே வேண்டாம்... வீட்டை இப்படி சட்டுனு ரெடி பண்ணுங்க
PulseNews சுருக்கம்

மழைக்காலத்தை அச்சமின்றி அனுபவிக்க, மழை தொடங்குவதற்கு முன்பே வீட்டைப் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் தயார் செய்வது அவசியம். கழிவுநீர் வடிகால்கள், மழைநீர் குழாய்கள், கூரை மற்றும் சுவர்களில் உள்ள விரிசல்களை முன்கூட்டியே ஆய்வு செய்து சரிசெய்வதன் மூலம் நீர் தேங்குவதையும், கசிவுகளையும் தடுக்கலாம். மேலும், மின் வயரிங், சுவிட்சுகள் மற்றும் எர்திங் இணைப்புகளை எலக்ட்ரீஷியன் மூலம் பரிசோதித்து, அவசர கால விளக்குகள் மற்றும் டார்ச் லைட்டுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது மின் விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

வீட்டின் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தி பூஞ்சை உருவாவதைத் தடுக்க, மரச்சாமான்களுக்கு வார்னிஷ் பூசுவது மற்றும் அலமாரிகளில் சிலிகா ஜெல் பயன்படுத்துவது சிறந்தது. குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிப்பதோடு, முதலுதவி பெட்டி, மருந்துப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை நீர் புகாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள நீர் தேங்கும் இடங்களைச் சுத்தம் செய்து கொசு உற்பத்தியைத் தடுப்பதும், மரங்களின் உலர்ந்த கிளைகளை வெட்டிப் பாதுகாப்பதும் அவசியம். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மழைக்கால பாதிப்புகளைத் தவிர்த்து வீட்டை நிம்மதியுடன் ரசிக்கலாம்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle