PulseNews
லைஃப் ஸ்டைல்

நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (14)

(14) நாணலுக்கு ஏற்பட்ட சோதனை.. "ஒ வ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் புதிதாக எதையோ கற்றுக்கொள்ள முயல்கிறான், அவன் கற்றுக்கொண்டேயிருக்கிறான். கற்றுக்கொள்வது பூர்த்தியாகும் முன்பே அவன் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. இது ஒரு தத்துவம். ஒரு திரைப்பட இயக்குனருக்கு இந்தத் தத்துவம் முற்றிலும் பொருந்தியிருப்பதாகவே கருதுகிறேன். பின்னோக்கி நினைத்துப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு திரைப்படத்தையும் இயக்கி வந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அத்தனையும் பாடங்கள்தான்'' என்று அப்பா சொல்வார். இதை இங்கு சொல்ல காரணம் அப்பாவின் 2ஆவது படம் "நாணல்'. அது சென்சாரில் சிக்கி பிரச்சினைகளைச் சந்தித்தது, அப்பாவுக்கு சில பாடங்களை கற்றுக் கொடுத்தது. அப்பா முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்தார். ஓரளவு வியாபார வெற்றியும் தான். ரசிகர்களின் பாராட்டும் ஒருசேரக் கிடைத்தது. திரை உலகில் ஒரு வழக்கம், ஒரு புதிய இயக்குனர் முதல் படத்தின் வெற்றியில் மயங்கி 2 வது படத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். இது பரவலான உண்மையும் கூட. விதிவிலக்குகள் சில இருக்கலாம். இரண்டாவதாக எந்த படம் எடுக்கலாம் என்று அப்பா யோசித்தாரா என்றால் இல்லை. அடுத்த நாடகத்தைப் பற்றிதான் யோசித்தார். 'desperate hours' என்ற ஆங்கிலப் படத்தின் கதைச் சுருக்கம் அவரை ஈர்த்தது. "அமைதியான ஒரு குடும்பத்தில் நான்கு கொலைக் குற்றவாளிகள் நுழைந்து அந்தக் குடும்பத்தின் அமைதியை நிலைகுலையச் செய்கிறார்கள். அதுதான் கதையின் "கரு'. இதை அடிப்படையாக வைத்து தமிழ் நாடக மேடைக்கு ஏற்றவாறு நாடகமாக்கத் தீர்மானித்தார். அதுதான் "நாணல்' நாடகம். "நாணல்' அரங்கேற்றுவதற்கு முன் பிரபல தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அப்பாவைச் சந்தித்து, அடுத்த நாடகம் பற்றிக் கேட்டார். அப்பா கதைச்சுருக்கம் சொன்னதும் அவருக்கு பிடித்துப்போய்விட்டது. "இதையே படமாக எடுக்கலாம் போலிருக்கிறதே' என்று கூறினார். "பாலும் பழமும்' போன்ற பெரிய வெற்றிப் படங்களைத் தயாரித்த அவரின் முடிவு அப்பாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நாடகக் கதையை சினிமாவுக்கேற்ற வகையிலும் எழுதி முடித்தார். நாடகம் அரங்கேறியது, மகத்தான வரவேற்பு பெற்றது. "நாணல்' அந்த நாளில் தமிழ் நாடக மேடைக்கு முற்றிலும் வித்தியாசமான துணிச்சலான நாடகம். நாடகத்தின் அத்தனை சம்பவங்களும் ஒரு பெரிய பங்களாவிலும் போலீஸ் ஸ்டேஷனிலும் நடப்பதாக கதை இருந்தது. வழக்கமாக இதற்கு தனித் தனியாக இரண்டு செட் போடுவார்கள். பங்களாவில் ஒரு காட்சி நடக்கும்போது, போலீஸ் ஸ்டேஷனில் இருக்காது. ஸ்டேஷனில் காட்சி நடக்கும்போது பங்களாவில் இருக்காது. இதுதான் பொதுவான நாடக முறை. ஆனால் அப்பா இதை மாற்றி ஒரே மேடையில் இரண்டு செட்டுகளை பக்கம் பக்கமாக அமைத்தார். பங்களாவில் சம்பவம் நடக்கும்போது போலீஸ் ஸ்டேஷன் இருட்டில் இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் சம்பவம் நடக்கும்போது பங்களா இருட்டில் இருக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இரண்டு செட்டுகளிலும் சம்பவங்கள் நடந்துகொண்டி ருக்கும். குற்றவாளிகளை பிடிப்பது எப்படி என்று போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். அதே நேரம் பங்களாவில் குற்றவாளிகள், குடும்பத்தினரை துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள். இந்தக் காட்சிகளுக்கெல்லாம் கைதட்டல். ரசிகர்கள் பங்களாவை பார்த்துக்கொண்டிருப்பார்கள் திடீரென்று தலையைத் திருப்பி போலீஸ் ஸ்டேஷனைப் பார்ப்பார்கள். நாடகம் அவர்களுக்கு வினோதமாக இருந்தது ... ஆனால் பிடித்திருந்தது. இதையே படத்திற்கான திரைக்கதையாக அமைத்தபோது பங்களா, போலீஸ் ஸ்டேஷன். தவிர வேறு இடங்களிலும் கதைக்கு தொடர்பான சம்பவங்கள் நடப்பதாக அமைத்தார் அப்பா. சினிமா வுக்காக சில மாறுதல்களைச் செய்யாவிட்டால் படம் எடுபடாது என்பதையும் உணர்ந்திருந்தார் அப்பா. கதையில் திகில் உணர்வைத் தவிர சென்டிமென்ட், நகைச்சுவை, பாடல் காட்சிகள் என்று பல விதமான சுவைகளுடன் திரைக்கதை அமைத்தார். நாடகத்திலும் படத்திலும் மூன்று குற்றவாளிகளாக சுந்தரராஜன், கோபாலகிருஷ் ணன், ஹரிகிருஷ்ணன் நடித்தனர். நீதிபதியாக இயக்குனர் கே.விஜயனும், அவரின் மனைவியாக சவுகார்ஜானகியும், அவரின் தம்பியாக ஸ்ரீகாந்த்தும், தங்கையாக கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். ஒரு காட்சியில் வெளியூரில் இருக்கும் குடும்பத் தலைவர் விஜயனை, உடனே ஊருக்கு வரும்படி டெலிபோன் செய்யச் சொல்லி ஒரு முரடன் சௌகார்ஜானகியை மிரட்டுவான். சௌகார் மறுத்துவிடுவார். உடனே விஜயனின் தம்பி ஸ்ரீகாந்தை அடிப்பான் முரடன். அந்த சித்ரவதை சில நிமிடங்கள் நீடிக்கும். அந்தக் காட்சியில் முரடனின் மூர்க்கத் தன்மை, ஸ்ரீகாந்தின் மனவலிமை, சௌகார் ஜானகியின் துயரம், கே.ஆர்.விஜயாவின் ஆத்திரம்... இப்படி பலதரப்பட்ட உணர்ச்சி களை சுவை குன்றாமல் கொண்டுவர வேண்டும். இந்த இடத்தில் சின்னச் சின்ன ஷாட்களாக அமைத்தால் காட்சியின் முழுமையான உணர்வு கிடைக்காது. எனவே காட்சியை மிகநீளமான ஷாட்டாக படமாக்கினார். அந்த ஒரு ஷாட் மட்டும் ஏறத்தாழ 150 அடி இருந்தது. படம் பார்த்த ரசிகர்கள், அந்தக் காட்சியோடு மிகவும் ஒன்றிப்போய் பார்த்தனர். இந்த நாணல் படம் திரைக்கு வருவதற்கு முன் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது. பின்னாளில் சென்ஸாரால் புன்னகை மன்னனில் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டாரோ, அந்த அளவுக்கு அன்றைக்கு "நாணல்' என்ற இரண்டாவது படத்தின்போது அவஸ்தைப்பட்டார் அப்பா. "நீதிபதி ஒருவரால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகள் தப்பி வந்து, அவர் வீட்டில் புகுந்து பழிவாங்கும் கதை. படத்தில் நீதிபதி என்று காட்டியிருக்கிறீர்கள். இதனால் நாட்டில் இப்போது உள்ள குற்றவாளிகளுக்கும், இத்தகைய பழிவாங்கும் உணர்ச்சி வந்துவிடும். எனவே நீதிபதி என்பதை மாற்றி பழிவாங்குவதற்கு வேறு காரணம் கூறுங்கள்' என்று சென்சாரில் உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். படம் முழுக்க முடிந்துவிட்ட நிலையில், இப்படிச் சொன்னதும் அப்பா இடிந்துபோனார், என்றாலும் என்ன செய்வது? ஏதோ பழைய விரோதம் என்று சொல்லவைத்து, அந்த காட்சியை மறுபடியும் எடுத்தார்கள். படம் வெளிவர வேண்டுமே என்ற நெருக்கடியால் நாணல் போல வளைந்து கொடுத்துவிட்டார் அப்பா. ஜட்ஜ் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் துரை என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். ஒரு வழியாக படம் முடிந்து ரிலீசானது. மாறுபட்ட கதையை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை அறிய படம் ரிலீஸான ஊர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். பொதுவாகவே நல்ல வரவேற்பு இருந்தது. சிலர் மாறுபட்ட இந்த கதையை முழுமையாக ரசிக்க முடியாமல் திணறினார்கள். பலர் "தமிழ் படம்கூட இத்தனை உயர்ந்த தரத்தில் அமைய முடியுமா?' என்று வியந்து பாராட்டினார்கள். "இன்னும் பத்து வருடங் களுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருந்தால் இன்னும் மகத்தான வெற்றி பெற்றிருக்கும்' என்று வேலுமணி அவர்கள் சொல்ல, "அப்போது இன்னும் அட்வான்ஸாக இருந்துவிட்டால் என்ன செய்வது?' என்று அப்பா வேடிக்கையாக சொல்ல... இருவரும் சிரித்து ரசித்தனர். அதே சமயத்தில் படத்தைப் பார்த்தவர்கள் "இன்னும் பத்து வருடங்கள் கழித்து வந்திருந்தால் இந்தப் படம் பிரமாதமான வெற்றியை பெற்றிருக்கும்' என்றார்கள். "ரசிகர்களின் ரசனைக்காகத்தான் படம் எடுக்கிறேன், அவர்கள் பின்னால் போய்விடாமல், அவர்களது ரசனையை உயர்த்தும் முன்னோடி யாக இருப்பதில்தான் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது'' என்று அப்பா சொன்னதை இறுதிவரை கடைப்பிடித்தார். கே.பி.யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க ஏவி.எம். கொடுத்த நம்பிக்கை... (சொல்கிறேன்...) -எழுத்தாக்கம் "கலைமாமணி' சபீதா ஜோசப்

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (14)
PulseNews சுருக்கம்

ஒவ்வொரு மனிதனும் வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறான் என்றும், கற்றல் முழுமையடைவதற்கு முன்பே வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்றும் கே. பாலசந்தர் கூறுவார். இந்தத் தத்துவம் ஒரு திரைப்பட இயக்குனருக்கு மிகச்சரியாகப் பொருந்தும் என்று அவர் கருதினார்.

திரைப்படங்களை இயக்கும்போது தனக்குக் கிடைத்த அனைத்து அனுபவங்களும் பாடங்களே என்று அவர் அடிக்கடி கூறிவந்துள்ளார். தனது கலைப்பயணத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், மறைந்த இயக்குனர் பாலசந்தரின் அந்த அனுபவங்களை புஷ்பா கந்தசுவாமி இங்கு நினைவு கூர்கிறார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle