PulseNews
லைஃப் ஸ்டைல்

திராவிட அரசியலில் எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (23)

(23) உச்சம் தொடவைத்த உலகம் சுற்றும் வாலிபன்! எ ம்.ஜி.ஆர். செய்த முன்னுதாரண செயல்... இதை ஆட்சிக்கு வரும் அத்தனை ஆட்சியாளர்களும் கடைப்பிடித்தால், மக்கள் முன் உத்தமர்கள் போல் நடிக்கும் சில உலுத்தர்களை மௌனிக்க வைத்துவிட முடியும். எப்ப பார்த்தாலும் எம்.ஜி.ஆரை குறை சொல்வதையும், அவரை ஏளனமாகப் பார்ப்பதையும் தொழிலாகக் கொண்ட ஒரு லோக்கல் தலைவர், கண்டபடி கூட்டங்களில் பேசுவார். "உன்னால் முடிந்தால் என்னை கைதுபண்ணிப் பார்... தமிழகத் தில் ரத்த ஆறு ஓடும்'' என்றெல் லாம் வீரமாகப் பேசுவார். எம்.ஜி.ஆர். இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. அதனால் இன்னும் கேவலமாகப் பேச ஆரம்பித்தார் அந்த "லோக்கல்'. ஒரு உயர் போலீஸ் அதிகாரி, இதையெல்லாம் தொடர்ந்து கவனித்து வந்தவர், பொறுக்க முடியாமல் எம்.ஜி. ஆரை சந்தித்தார். இதைப்பற்றி எடுத்துச் சொல்லி, "அய்யா அவர் உங்களைப் பற்றி கேவலமாகப் பேசுவதை நீங்கள் மன்னித்துவிடலாம். ஆனால் மக்கள் எங்கள் காவல் துறையைப் பற்றி தரக்குறைவாகப் பேசுகிறார்கள்... அது கஷ்டமாக இருக்கிறது'' என்று சொல்ல, சற்றுநேரம் யோசித்த எம்.ஜி.ஆர், "அவரை கைது செய்வதற்கான ஆதாரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் கைது செய்யுங்கள்'' என அனுமதி வழங் கினார். அந்த "லோக்கல்' கைது செய்யப்பட்டார். பிரளயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சின்ன சலசலப்பு கூட ஏற்படவில்லை. அந்த லோக்கல் சில வருடங்கள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையானார். அவரை இருநூற்று ஐம்பது கி.மீ. ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்துவந்தார்கள். எத்தனை லட்சங்கள் செலவாகியிருக்கும். இப்போது அவர் எங்கே? இந்த மாதிரி அரசியல் ஸ்டண்ட்கள் இப்போது எடுபடாது. ஆனால் எம்.ஜி.ஆரிடம் இந்த மாதிரி தில்லுமுல்லுகள் எடுபடாது. அரசியலில் தவறு செய்தவர்களை, ஊழல்வாதிகளை மன்னித்துவிட்டால் பயம் போய்விடும். மக்கள் கெட்டவர்கள் யார், நல்லவர்கள் யார் என்பதை நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும். ஆதலால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டே ஆகவேண்டும். இதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். ஆட்சிக்கு வரும் முன்பே அவர் தன் படங்களில் இதனை வெளிப்படையாக வசனங்களினாலும், பாடல்களினாலும் எடுத்துச் சொன்னார். 1972-க்குப் பின்னால் அதாவது தனிக்கட்சி ஆரம்பித்த பின்னால் அவர் படங்கள் எல்லாமே கட்சியின் எழுச்சிக்காக பயன்படுத்தப் பட்டன. தானே பெரும் பொருட்செலவில் "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை எடுத்தார். அதை தடுத்துவிட எத்தனை யோ முயற்சிகள் எதிர் வினையாற்றுவோரால் எடுக்கப்பட்டது. சிந்த னைக்கு சிறப்புக் கூட்டும் நல்ல பாடல்கள், நல்ல கதை, சிறப்பான வசனங்கள், புதுமை யான சண்டைக் காட்சிகள், சிங்கப் பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற பல நாடுகளின் அழகு... அங்கே படமாக்கப்பட்ட சூப்பர் காட்சிகள். பெரும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக படமாக்கப்பட்ட படம். ரசிகர்கள் திரையில் படத்தைப் பார்த்து பாராட்டினர். அன்றைய காலகட்டத்தில் அந்தப் படத்தின் வசூலை எந்தப் படத்தாலும் தாண்டிப் போக முடியவில்லை. அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பித்த தினம் இரவு இரண்டு மணி அளவில் தேவி தியேட்டர் பக்கம் போனேன். அலைமோதும் கூட்டம். தேவி தியேட்டரில் ஆரம்பித்த க்யூ அண்ணா சிலை வரை நின்றதை நானே பார்த்தேன். உடனே எம்.ஜி.ஆருக்கு போன்பண்ணி தெரிவித்தேன். அவர் தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். மறுநாள் தோட்டத்துக்கு வரும்படி அழைத்தார். இந்தப் படம் அவரை உச்சம் தொட வைத்தது. கலையுலகில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக அவரை ஏற்றிவைத்தது. அந்தப் படத்துக்காக அவர் உழைத்த உழைப்பு சாதாரணமானதல்ல. அதற்கு ஒரு உதாரணம் இந்தப் பாடல்... நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் இது படத்தின் டைட்டிலில் வரும். இன்னும் இது போராட்ட குணம் கொண்ட எல்லா மனிதர்களினதும் மனம் கவர்ந்த பாடலாக விளங்குவது அதிசயமான ஒன்று. "வாத்தியார்' என்பது எம்.ஜி.ஆருக்கு மக்கள் வைத்த நூற்றுக்கணக்கான பெயர்களில் ஒன்று. ஆனால் இந்தப் பெயருக்கு அவர் நூறு சதவீதம் பொருத்தமானவர். ஏனென்றால் ஏணி, தோணி, வாத்தியார். ஏணி ஏற்றிவிடும்... ஜாதி பார்க்காது, மதம் பார்க்காது, ஏழை பணக்காரன் என்றும் பார்க்காது. அதேபோல் தோணியும் பேதங்கள் பார்க்காமல் எல்லோரையும் மறு கரை சேர்க்கும். அதுபோல் வாத்தியாரும் கரை சேர்ப்பவர்தான். பாடம் சொல்லிக் கொடுத்து, நல்லதை சொல்லிக் கொடுத்து, அறிவை வளர்த்து, ஆற்றலை வளர்த்து, சமநீதி வழி வாழ சொல்லித் தந்து சமூகத்துக்கு பயன்படும் மனிதர்களாக உயர்த்தி விடுபவரே வாத்தியார். அதைத்தான் எம்.ஜி.ஆர். கலையுலகிலும், அரசியல் உலகிலும் செய்தார். ஆகவே வாத்தியார் பட்டம் அவருக்கு பொருந்துவதுபோல் வேறு யாருக்கும் பொருந்தாது என்பது என் கருத்து. என் முதல் படத்திலேயே இந்த வாத்தியார் என்ற வார்த்தையை 1967ல் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் முன்னரே பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு படத்தில் டாக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். மலைக்கிராமத்தில் ஒரு டிஸ்பென்சரி திறக்கிறார். அங்கு வந்த அந்த ஊர் தலையாரியின் மகளான ஜெயலலிதா, மருந்துகளை எடுத்து அடுக்கும் பணியில் ஒத்தாசை செய்கிறார். அப்போது அவர் டாக்டரிடம், "இனிமே நான்தான் இங்கே நர்சம்மா'' என்று சொல்ல, "அதுக்கு படிக்க வேணாமா?'' என எம்.ஜி.ஆர். கேட்க, "உங்ககிட்ட படிச்சுக்கிறேன்'' என பதிலளிப்பார் ஜெயலலிதா. உடனே எம்.ஜி.ஆர்., "நான் என்ன வாத்தியாரா?'' எனக் கேட்பார். "ஊருக்கு வைத்தியர், எனக்குமட்டும் வாத்தியார்'' என ஜெயலலிதா பட்டுன்னு பதிலளிப்பார். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா அரசியலுக்கு வருவார் என யாருமே சிந்திக்காத நேரம். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அந்த வசனம் உண்மையானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசியல் குருவானார். அவர் காலத்துக்குப் பின் அந்தக் கட்சிக்கு வாரிசு ஆனார் ஜெயலலிதா. இதைப் போல் பல படித்த, படிக்காத ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாத்தியாராக விளங்கியவர் நமது மக்கள் திலகம். சினிமாவில் எனக்கும் அவர்தான் வாத்தியார். இந்த ராமச்சந்திரன் என்ற பெயருக்குள்ளே பல வரலாறுகள் மறைந்திருப்பதை வருங்கால தமிழ் சமுதாயம் நிச்சயமாகத் தோண்டியெடுத்து பெருமை பேசும். மாண்பு என்பது தெய்வீகத்தால் வருவது. நடிப்பில் சொன்னதை, நாடாள வந்த பின்னால் நடத்திக்காட்டியவர் எம்.ஜி.ஆர். இங்க நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே நீங்க நினைச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே இதைப்போன்ற பல பாடல்கள் அவர் தேர்தலுக்கு வரும் முன்பே அதற்கான வலுவான தளத்தை அமைத்து வைத்ததை மறுக்க முடியுமா? "பலமில்லா மாடு, உழ முடியாத கலப்பை, அதிகார மில்லாத பதவி -இவைகளை நான் விரும்புவதேயில்லை' நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். பேசிய வசனம். இது கதாபாத்திரத்துக்காக எழுதப்பட்ட வசனமா? எம்.ஜி.ஆரின் எதிர்காலக் கனவுகளை காட்டிய வசனமா? அதேபோல் "நம் நாடு' என்ற படம். அவரின் அரசியல் வருகை எப்படியிருக்கும் என்பதை மக்களிடம் தெரிந்துகொள்ள அவர் தந்த சோதனை முன்னோட்டம். அப்படத்தின் அபரிமிதமான வெற்றி எம்.ஜி.ஆருக்கு மேலும் நம்பிக்கையைத் தந்தது. அதன் பின் அவர் எடுத்த முடிவுகள் மகத்தானவை. (வரும் இதழில்...)

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திராவிட அரசியலில் எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (23)
PulseNews சுருக்கம்

திராவிட அரசியலில் எம்.ஜி.ஆரின் எழுச்சி மற்றும் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இயக்குனர் வி.சி.குகநாதன் பகிர்ந்துள்ளார். எம்.ஜி.ஆரை தொடர்ந்து விமர்சித்து ஏளனமாகப் பேசி வந்த உள்ளூர் தலைவர் ஒருவர், தன்னை கைது செய்து பார்க்கும்படியும், அவ்வாறு செய்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றும் மேடைகளில் சவால் விடுத்து வந்தார்.

ஆட்சியாளர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் முன்னுதாரணமான செயல்களைப் பின்பற்றினால், போலியாக நடிக்கும் இத்தகைய நபர்களை மௌனமாக்கி விட முடியும் என்று குகநாதன் குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் அரசியல் செல்வாக்கையும், விமர்சனங்களை அவர் கையாண்ட விதத்தையும் இது விளக்குகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle