நவரச நாயகி சௌகார் ஜானகி! - "கலைமாமணி' சபீதா ஜோசப்
பா ர்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ மாலை பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி.. இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு! -இந்தப் பாடல்கள் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளை தலையாட்ட வைத்த பாடல்கள். இதுபோல் இன்னும் பல நம்பிக்கை தரும் பாடல்களின் நாயகியாக திகழ்ந்தவர்... மறைந்த புகழ்பெற்ற குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி. "நடிப்பில் தனக்கு ஒரு சரியான பார்ட்னர் (ஜோடி) என்றும், கொஞ்சம் அசந்தா நம்மையே நடிப்புல தூக்கி சாப்பிட்டு விடுவா' என்றும் சௌகார் ஜானகியின் நடிப்புக்கு சான்றிதழ் வழங்கியவர் கலை உலக நடிப்பு களஞ்சியம் நடிகர் திலகம் சிவாஜி தான். சிவாஜியுடன் "படிக்காத மேதை', "பாலும் பழமும்', "பார் மகளே பார்', "புதிய பறவை', "மகாகவி காளிதாஸ்', "உயர்ந்த மனிதன்', "மோட்டார் சுந்தரம் பிள்ளை', "பாபு' என 22 படங்களில் சேர்ந்து நடித்தவர். "பண்பட்ட நடிகை நீங்கள்' என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டவர். அவருடன் "ஒளி விளக்கு', "பணம் படைத்தவன்', "பெற்றால்தான் பிள்ளையா' என ஐந்து படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், எம்.ஆர்.ராதா, ரஜினிகாந்த், கமல், மம்முட்டி, ராஜ்குமார், நாகேஸ்வரராவ் என்று பல முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக நடித்தவர். 1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கிய டிசம்பர் மாதத்தில் பிறந்தவர் சௌகார் ஜானகி. 2020ல் கார்த்தி நடித்த "தம்பி' படம் அவர் நடித்த கடைசி படம். புரட்சிக் கவிஞரின் வசனங்களை "வளையாபதி' படத்தில் நடித்த இவரைப் பார்த்து கலைஞர் சொன்னார், "இந்த ஜப்பான் பொம்மையா அந்த தமிழை பேசியது?' என்று வியந்து பாராட்டினார். 1968ல் முதல்வர் அறிஞர் அண்ணா கையால் கலைமாமணி விருது பெற்றார். "தயாரிப்பாளர்கள் நிலை அறிந்த நல்ல நடிகை' என்று பெயரெடுத்தவர். தான் நடித்த ஒரு படம் சரியாக போகாததால், அந்த தயாரிப்பாளருக்கு தான் வாங்கிய சம்பளத்தில் பாதியை திருப்பிக் கொடுத்துவிட்டார் சௌகார் ஜானகி. கலைமேதை எல்.வி.பிரசாத் இவரை தெலுங்கில் "சௌகார்' படத்தில் அறிமுகப் படுத்தினார். பாலச்சந்தரின் "நாணல்', "நீர்க்குமிழி', "எதிர்நீச்சல்', "மெழுகுவர்த்தி', "இரு கோடுகள்', "பாமா விஜயம்', "காவியத் தலைவி' போன்ற படங்களிலும் நடித்து பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். தயாரிப்பாளராக "காவியத் தலைவி', "ரங்கராட்டினம்' என இரண்டு படங்களை தயாரித்தார். திரையுலக நடிகர் நடிகைகளிலே இவர் கொஞ்சம் மாறுபட்டவர். எதையும் நேருக்கு நேராகவே பேசிவிடுவார், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல பேசுவார். திரைப்பட நடிகர் நடிகைகள் யாரும் செய்யாத ஒரு விஷயத்தையும் அவர் செய்து வந்தார். தயாரிப்பாளரிடம் பெட்ரோலுக்கு பணம் பெற்றதில்லை. சொந்த காஸ்ட்யூம் போட்டு வருவார். பெரும்பாலும் வீட்டில் இருந்தே சமைத்து அதை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எடுத்து வந்து அவர் சாப்பிடுவார். அதோடு அந்த சம்பந்தப்பட்ட டைரக்டர், ஹீரோவுக்கும் அந்தச் சாப்பாட்டை பரிமாறுவார், அத்தனை சுவையாக சமைப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் சௌகார் ஜானகி அம்மாவின் சமையலுக்கு நல்ல ரசிகர்கள். நானும் கூட ஒரு தொலைக்காட்சித் தொடரின்போது அவர் வீட்டிலிருந்து சமைத்து வந்த சிற்றுணவை சாப்பிட் டது உண்டு. அது அத்தனை சுவையானது. 94 வயது வரை ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் எப்போதும் ஓய்ந்திருந்ததில்லை வீட்டு வேலைகள், வீட்டை டெகரேட் பண்ணுவது, தோட்டத்தை பராமரிப்பது, சமைப்பது, நடைப் பயிற்சி, யோகா... இப்படி ஏதேனும் ஒன்றை செய்து கொண்டுதான் இருப்பார். பசித்தால் மட்டுமே புசிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். அவர் ஏற்று நடித்த வேடங்களில் எதிர்நீச்ச லில் அவர் நடித்த பட்டு மாமி வேடம் அவருக்கு மிகவும் பிடிக்கும். எழுபது ஆண்டு திரைப்பயணத் தில் 390 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று இந்த ஐந்து மொழிகளிலும் மிக சரளமாக அழகாக பேசுவார். அதிலும் அவருடைய ஆங்கில உச்சரிப்பு அத்தனை நேர்த்தியாக அருமையாக இருக்கும் என்று பாலசந்தர் பாராட்டியிருக்கிறார். இவர் ரஜினிக்கு அன்னையாக "தீ', "தில்லு முல்லு', "சிவா' ஆகிய படங்களில் நடித்திருந்தார் ரஜினியை தன் மகன் போன்றவர் எனச் சொல்லுவார். 1970ல் "இரு கோடுகள்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதினை முதல்வர் கலைஞர் கையால் பெற்றார். அதே ஆண்டு "சம்சாரம் போக சதுரங்கம்' தெலுங்கு படத்தில் சிறந்த துணை நடிகைக்கான ஆந்திர அரசின் "நந்தி' விருதை என்.டி.ஆர். கையால் பெற்றார். 1985ல் அரிசோனாவின் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1989ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் "தியோனாரா கோல்டன் விருது' வழங்கியது. 1990ல் தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ எம்.ஜி.ஆர். விருதினை முதல்வர் கலைஞர் வழங்கினார். 2013ல் சைமா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். 2004ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். 2015இல் கர்நாடக அரசின் ராஜ்யோத்சா விருது, 2019 இந்திய சினிமாவின் பசுமையான பொழுதுபோக்கு வொண்டர் வுமன் விருது பெற்றார். 2022ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கிய "பத்மஸ்ரீ' விருது பெற்றார் சௌகார் ஜானகி. நல்ல நடிகை, மனிதாபிமானம் மிக்க நடிகை மறக்க முடியாத குணச்சித்திர நடிகை சவுகார் ஜானகி அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு நக்கீரன் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'மாலை பொழுதின் மயக்கத்திலே' உள்ளிட்ட பல காலத்தால் அழியாத பாடல்களின் நாயகியாகவும், பல தலைமுறைகளைத் தன் நடிப்பால் கவர்ந்தவராகவும் திகழ்ந்தவர் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி.
நடிப்புத் திறமையில் தனக்குச் சரியான இணை அவரே என்றும், சற்றும் கவனக்குறைவாக இருந்தால் தன்னையே நடிப்பில் விஞ்சிவிடுவார் என்றும் சக கலைஞர்கள் அவரது நடிப்பாற்றலைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.