அணிவகுப்பில் ‘டாப்’... இப்போது தேசியக்கொடி ஏற்றும் பெருமை; மாணவனுக்கு கிடைத்த ஸ்பெஷல் மரியாதை
புதுச்சேரி நகரப் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அரசு சார்பில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற அணிவகுப்பு போட்டியில் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக அணிவகுத்து முதலிடம் பிடித்தனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். இந்த அணிவகுப்பில் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர் ஐயப்பன் அணிவகுப்புக் குழுவுக்கு தலைமை தாங்கி, மாணவர்களை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். ஒழுக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் மாணவர்கள் அணிவகுத்த விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் மூலம் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையையும் பரிசையும் பெற்றனர். இந்நிலையில், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் பள்ளிக்கு முதலிடம் பெற்றுத் தந்த மாணவர்களை சிறப்பிக்கும் வகையில், அணிவகுப்புக்கு தலைமை தாங்கிய 12-ம் வகுப்பு மாணவர் ஐயப்பனுக்கு தேசியக் கொடியை ஏற்றும் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர் ஐயப்பன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அணிவகுப்பில் மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி பள்ளிக்கு பெருமை சேர்த்ததற்காக அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைத்தது மாணவர் ஐயப்பனுக்கும், சக மாணவர்களுக்கும் பெருமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. மேலும், அணிவகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களை பள்ளியின் துணை முதல்வர் சிவராம ரெட்டி, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர். மாணவர்களின் ஒழுக்கம், கடின உழைப்பு, குழு உணர்வு மற்றும் சிறப்பான அணிவகுப்பு திறனை ஆசிரியர்கள் பாராட்டினர். எதிர்காலத்திலும் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று பள்ளிக்கும் புதுச்சேரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நிகழ்ச்சியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றதுடன், அந்த வெற்றியைத் தொடர்ந்து பள்ளி வளாகத்திலேயே மாணவர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றி கவுரவிக்கப்பட்ட சம்பவம், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

புதுச்சேரியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின அணிவகுப்பில் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேரில் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
இந்த அணிவகுப்பில் சிறந்து விளங்கியதன் அங்கீகாரமாக, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தேசியக்கொடி ஏற்றும் சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.