PulseNews
லைஃப் ஸ்டைல்

ஒரு பழத்தின் விலை ரூ25 லட்சம், இதில் அப்படி என்ன தான் இருக்கிறது? உலகின் அதிக விலைக்கு விற்பனை ஆகும் டாப் 5 பழங்கள்

மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்தாலே, “விலைவாசி எங்கே போகிறது?” என்று நாம் கவலைப்படுகிறோம். ஆனால், உலகின் சில நாடுகளில் விளையும் குறிப்பிட்ட ரக பழங்களின் விலையை கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு பழத்தின் விலையிலேயே ஒரு புதிய சொகுசு காரை வாங்கிவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். சில நாடுகளில் விளையும் பழங்களில் ஒரு பழமே லட்ச கணக்கில் விலையாகும். அந்த வகையில், உலகின் விலை உயர்ந்த பழங்களில் சிலவற்றை மிகவும் பிரத்யேகமான முறையில் விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். அவற்றில் முக்கியமான 5 பழங்கள் குறித்து பார்க்கலாம். ஹெலிகன் பைனாப்பிள் – இங்கிலாந்து விலை உயர்ந்த பழங்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஹெலிகன் பைனாப்பிள் (Heligan Pineapple). ஒரு பழத்தின் விலை சுமார் ரூ.1.2 லட்சம் வரை இருக்கலாம். இங்கிலாந்தின் குளிரான காலநிலையில் இந்த அன்னாசிப் பழத்தை இயற்கையாக வளர்ப்பது கடினம். இதனால், விக்டோரியன் காலத்தைச் சேர்ந்த பிரத்யேகமான கிரீன்ஹவுஸ்களில் இந்த அன்னாசிகள் வளர்க்கப்படுகின்றன. பழைய காலத்தில் கிரீன்ஹவுஸை சூடாக வைத்திருக்க குதிரைச் சாணம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு அன்னாசிப் பழத்தை அறுவடைக்கு தயாராக பல ஆண்டுகள் மிகுந்த கவனத்துடன் வளர்க்க வேண்டியிருக்கும். இதுவே இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. தையோ நோ தமாகோ – ஜப்பான் ஜப்பானின் தையோ நோ தமாகோ (Taiyo no Tamago) என்ற புகழ்பெற்ற மாம்பழ ரகம் (மியாசகி). ஒரு ஜோடி மாம்பழங்களின் விலை சுமார் ரூ.2.5 லட்சம் வரை செல்லக்கூடும். இந்த மாம்பழங்களை சாதாரணமாக மரத்திலிருந்து பறிப்பதில்லை. ஒவ்வொரு பழமும் பிரத்யேக வலையில் தொங்கவிடப்பட்டு, முழுமையாக பழுத்தவுடன் தானாக கீழே விழும் வகையில் வளர்க்கப்படுகிறது. பழத்தின் அளவு, நிறம், சுவை மற்றும் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல தரநிலைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அது உயர்தரப் பழமாக சந்தைக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக, அதிக சர்க்கரைச் சத்து மற்றும் சரியான எடை கொண்ட பழங்களுக்கே அதிக விலை கிடைக்கிறது. டென்சுகே வாட்டர்மெலன் – ஜப்பான் ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் விளையும் டென்சுகே வாட்டர்மெலன் (Densuke Watermelon). இந்த கருப்பு நிறத் தோற்றம் கொண்ட தர்பூசணி மிகவும் அரிதானது. ஆண்டுதோறும் குறைந்த எண்ணிக்கையிலான பழங்களே உயர்தரமாக கிடைப்பதால், இதன் விலை பல லட்சம் ரூபாய் வரை செல்லக்கூடும். சில பிரத்யேக ஏலங்களில் ஒரு பழம் சுமார் ரூ.5 லட்சம் வரை விற்பனையாகியிருக்கிறது. அதன் தனித்துவமான கருப்பு தோல், இனிப்பு சுவை மற்றும் அரிதான தன்மை ஆகியவை இதை சாதாரண தர்பூசணிகளில் இருந்து முற்றிலும் வேறுபடுத்துகின்றன. ரூபி ரோமன் திராட்சை – ஜப்பான் ஜப்பானின் ரூபி ரோமன் திராட்சை (Ruby Roman) ஒரு உயர்தர திராட்சைக் கொத்தின் விலை சுமார் ரூ.8 லட்சம் வரை செல்லக்கூடும். இந்த திராட்சையின் ஒவ்வொரு பழமும் குறிப்பிட்ட அளவு மற்றும் எடையை அடைந்திருக்க வேண்டும். அதன் நிறம், இனிப்பு, தோற்றம் மற்றும் தரம் உள்ளிட்ட அம்சங்கள் மிகவும் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. அனைத்து தரநிலைகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும் திராட்சைக் கொத்துகள் மட்டுமே உயர்தரப் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஒரு கொத்தில் உள்ள ஒவ்வொரு திராட்சைப் பழத்திற்கும் கூட ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பு ஏற்படுகிறது. யுபாரி கிங் மெலன் – ஜப்பான் உலகின் விலை உயர்ந்த பழங்களில் மிகவும் பிரபலமானது ஜப்பானின் யுபாரி கிங் மெலன் (Yubari King Melon). இதன் ஒரு ஜோடி பழங்கள் பிரத்யேக ஏலங்களில் சுமார் ரூ.25 லட்சம் வரை விற்பனையாகியுள்ளன. இதனால், இந்த மெலன் உலகின் மிக விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹொக்கைடோவின் யுபாரி பகுதியில் பிரத்யேகமான கிரீன்ஹவுஸ்களில் இந்த மெலன்கள் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு பழத்தையும் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கிறார்கள். பழத்தின் தோலில் உருவாகும் வலை போன்ற வடிவம் அழகாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பழத்தின் தரம், வடிவம், நிறம் மற்றும் சுவை ஆகிய அனைத்தும் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதால், இதன் சாகுபடியில் அதிக உழைப்பும் நேரமும் செலவிடப்படுகிறது. இந்த பழங்களின் விலை நம்முடைய தினசரி சந்தை விலையுடன் ஒப்பிடும்போது நம்ப முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், இவை சாதாரண பழங்களாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அரிதான தன்மை, பிரத்யேக சாகுபடி முறை, தரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏலங்களில் உருவாகும் போட்டி ஆகியவை அவற்றின் விலையை பல லட்சம் ரூபாய் வரை உயர்த்துகின்றன. ஒரு பக்கம் சாதாரண பழங்களை வாங்கும்போது விலையை பார்த்து யோசிக்கும் நாம், மறுபக்கம் ஒரு பழத்தின் விலையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் உலகத்தையும் பார்க்க முடிகிறது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரு பழத்தின் விலை ரூ25 லட்சம், இதில் அப்படி என்ன தான் இருக்கிறது? உலகின் அதிக விலைக்கு விற்பனை ஆகும் டாப் 5 பழங்கள்
PulseNews சுருக்கம்

சாதாரண தக்காளியின் விலை சற்றே உயர்ந்தாலே கவலைப்படும் நமக்கு, ஒரு காரின் விலைக்கு இணையான தொகையில் விற்கப்படும் பழங்கள் குறித்த தகவல்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. உலகின் மிக விலையுயர்ந்த ஐந்து பழங்களை விவசாயிகள் மிகுந்த கவனத்துடன், பிரத்யேகமான சாகுபடி முறைகளைப் பின்பற்றி அறுவடை செய்கின்றனர்.

இங்கிலாந்தின் ஹெலிகன் அன்னாசி, ஜப்பானின் தையோ நோ தமாகோ மாம்பழம், டென்சுகே தர்பூசணி, ரூபி ரோமன் திராட்சை மற்றும் யுபாரி கிங் மெலன் ஆகியவை உலகின் அதிக விலை கொண்ட பழங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் யுபாரி கிங் மெலன் ஒரு ஜோடி சுமார் ரூ.25 லட்சம் வரை ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இந்த பழங்களின் அரிதான தன்மை, கடுமையான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வளர்ப்பு முறைக்கான நீண்டகால உழைப்பு ஆகியவையே இவ்வளவு அதிக விலைக்கான காரணங்களாகும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle