நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி
(13) எம்.ஜி.ஆர். படத்தை இயக்க மறுத்தது ஏன்? சி னிமா துறையில் இருப்பவர்களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் அப்பா. அப்பாவின் கடைசி மூச்சுவரை எம்.ஜி.ஆரை நன்றியுடன் நினைத்துக்கொண்டுதான் இருந்தார். இது தெரியாமல் சிலர் "கே.பாலசந்தர், தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர். படத்தை இயக்க மறுத்துவிட்டார். அவ்வளவு பெரிய ஆளா அவரு?' என்று பேசுவது உண்டு. இதுபற்றி பிரபல வார இதழ்களில் கேள்வி எழுப்பியதுண்டு. "சிவாஜியை வைத்து "எதிரொலி' படத்தை இயக்கியுள்ளீர்கள். உங்களை திரை யுலகில் அறி முகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே ஏன்?' என ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது... "எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னோடு தோழமையோடு இருக்கிற கமல்ஹாசன், ரஜினிகாந்த்தை வைத்துக்கூட ஒரு கட்டத்துக்கு மேல் நான் படம் இயக்கவில்லை ரஜினியை கூட எஸ்.பி.முத்துராமனையும், கே.எஸ்.ரவிக் குமாரையும் வைத்துத்தான் இயக்க வைத்தேன். ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதை முத்துராமன் செய்வது தான் சரியாக இருக்கும். என்னிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. நானும் ரஜினியும் சேர்ந்தால் அந்த எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும். அது ஒரு படத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். "எதிரொலி'யைப் பொறுத்தவரை அந்தக் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது, திரைக்கதையை ரொம்ப ரசித்தார். கதையில் சிவாஜிகணேசன் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதற்காக குற்ற உணர்வில் படம் முழுக்கத் தவிக்கிறார். மனசாட்சியால் கடைசி வரை தொல்லைப்பட்டுக்கொண்டே இருப்பார். அப்போது சிவாஜி பெரிய இமேஜ் உள்ள ஹீரோ. நேர்மறை குணங்களை கொண்டவர். அவர்போய் தவறு பண்ணிவிட்டதாகக் காட்டினால் ஒத்துக்கொள்வார்களா? அவரைப்போய் தப்பு பண்ணிட்டதாக காட்டிட்டாரே என்று என்னை குற்றம் சாட்டினார்கள். படம் சரியாகப் போகவில்லை. ஆனால் மிகவும் ரசித்து எடுத்த படம் அது. இப்போது பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும். அதை ஒரு புதுமுகத்தை வைத்து எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அப்படி எடுத்திருந்தால் அது பாலச்சந்தர் படமாக இருக்கும், அது சிவாஜி படம் ஆகிவிட்டது. இமேஜ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்கக் கூடாது என்பதை மறுபடியும் முடிவு செய்துகொண்டேன்.'' மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்க தயாரிப்பாளர் கோவை செழியன் வந்தார். இதற்குப் பின்னர் நடந்ததைச் சொல்கிறேன். "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் கோவை செழியன் படம் இயக்கச் சொல்லி அப்பாவை அணுகினார். வேறு யாராக இருந் தாலும் "கரும்பு தின்னக் கூலியா?' எனக்கேட்டு உடனே சம்மதித்திருப்பார்கள். எம்.ஜி.ஆர். பட இயக்குனர் என்றால் நட்சத்திர அந்தஸ்து அல்லவா! அதிலும் ஆரம்ப கட்டத்திலேயே இந்த வாய்ப்பு. ஆனால் அப்பாவுக்கு குழப்ப மும் பயமும்தான் ஏற்பட்டது. "தெய்வத்தாய்' படத் தயாரிப்பின்போது அவருக்கு, எம்.ஜி.ஆரின் படைப்புத் திறனும், மக்கள் செல்வாக்கும் எத்தகையது என்று விளங்கியது. மக்களின் நாடியை நன்றாக உணர்ந்து கொண்டிருந்ததாலும், அவர் கதைகளையும் பாத்திரப் படைப்பையும் எவ்வாறு கையாண்டு ஒவ்வொரு படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கினார் என்பதையும் நேரடியாக பார்த்ததினால் வந்த தயக்கம்தான் இது. வாய்ப்பை நழுவவிட தீர்மானித்தார். வளர்ந்து வரும் ஒரு கலைஞனுக்கு இந்த முடிவை எடுப்பது சுலபமல்ல. பொருளாதார ஏற்றமா? அல்லது தனித்தன்மையோடு செயல்படும் சுதந்திரமா? என்று தராசில் வைத்துப் பார்த்ததில் தனித்தன்மை தட்டே எடை கூடியது. பின்னாளில் அப்பா இந்த முடிவுக்கு வருந்தியதே கிடையாது. தமக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, அவர்களுடைய ரசனைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று இடைவிடாமல் இயக்கிய வண்ணம் இருந்தார். தமது கடமையாகவே இதைக் கருதினார். பல தருணங்களில் விருது விழாக்களில் "மக்கள் திலகம்' எம்.ஜி.ஆரை சந்திக்கக்கூடிய, பேசக்கூடிய வாய்ப்புகளும் அப்பாவுக்கு அமைந்தன. தன்னுடைய பட வாய்ப்பை நிராகரித்ததற்காக எந்த காழ்ப்புணர்ச்சியும் பொன்மனச் செம்மல் காட்டாமல் இருந்தார். தமிழக அரசின் விருதுகளை கூட புரட்சித்தலைவர் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து வெவ்வேறு படங்களுக்கு பெற்றிருக்கிறார் அப்பா. இறுதி வரை அவரிடம் நன்றிக்கடன் பட்ட ஒரு சக கலைஞ னாகவே வாழ்ந்தார் அப்பா. இதே தயாரிப்பாளர் கோவை செழியன் தயாரிக்க, பல வருடங்களுக்குப் பிறகு மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க "அழகன்' என்கின்ற படத்தை அப்பா இயக்கினார். சினிமாவா, ஆபீஸா.. அப்பாவுக்கு வந்த திடீர் பயம். அதென்ன...? (சொல்கிறேன்...) -எழுத்தாக்கம் "கலைமாமணி' சபீதா ஜோசப்

மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் மீது, எம்.ஜி.ஆர் படத்தை இயக்க மறுத்ததாக விமர்சனங்கள் எழுவது உண்டு. ஆனால், அவர் தனது கடைசி மூச்சு வரை எம்.ஜி.ஆர் மீது மிகுந்த மரியாதையும் நன்றியும் கொண்டிருந்தார் என்று புஷ்பா கந்தசுவாமி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரை அவமதித்ததாகச் சிலர் தவறாகப் பேசுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சிவாஜி கணேசனை வைத்து 'எதிரொலி' படத்தை இயக்கியது போன்ற விவகாரங்கள் குறித்து வார இதழ்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.