தமிழை தாழ்த்திப்பேசிய நிதியமைச்சர்! வலுக்கும் கண்டனங்கள்!
மு தல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் நடந்துவருகின்றன. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரியவில்சன், பட்ஜெட் உரையை வாசித்தபோது நிறைய சொற்களை பிழையாக உச்சரித்ததோடு, எண்களையும் தப்புத் தப்பாகக் குறிப்பிட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிகளை நடத்திவரும் கல்வியாளரான மரியவில்சன், தமிழில் பேசத் தடுமாறுவது பலராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக நாற்பதாயிரத்து நானூற்றி பன்னிரண்டு என்று சொல்வதைக்கூட நாற்பதாயிரத்தி நாற்பத்தி பன்னெண்டு என்று அவர் கூறினார். பட்ஜெட் குறித்த விவாதத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி, திங்களன்று கடையநல்லூர் எம்.எல்.ஏ. டி.எம்.ராஜேந்திரன் பேசும்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமைச்சர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். அவரது ஆங்கிலம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆனால் அவர் பட்ஜெட்டை வாசிக்கும்போது தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார். வருங்காலங்களில் நிதியமைச்சர் பிழையின்றி தமிழில் பேச வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். இதற்கு, இனிவரும் காலத்தில் சரி செய்துகொள்கிறேன் என்று நிதியமைச்சர் கூறியிருந்தால் அதோடு விவாதம் முற்றுப்பெற்றி ருக்கும்... ஆனால், தனது செயலை நியாயப்படுத்துவதற்காக, "25 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய கம்யூனிகேஷன் எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன. இந்த மாமன்றத்தில் கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களை கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள். கிறிஸ்தவம் எனக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதிப் பேருக்கு இது தெரியாது. நான் பைபிள் படித்திருக்கிறேன். நான் இப்படித்தான் பேசுவேன், என்னுடைய ஸ்டைல் இதுதான். எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது'' என்றவர், ஆவேசமாக மைக்கை தட்டிவிட்டு அமர்ந்தார். நிதியமைச்சர் மரிய வில்சன் தப்புத் தப்பாக தமிழ் மொழியை பேசியதோடு, கிறிஸ்தவத்தை இழுத்துவந்து பதிலளித்திருப்பதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி, "ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுகிறாரா? அல்லது தமிழை ஆங்கிலத் தோடு கலக்கிறாரா? இரு மொழிகளையும் கலந்துபேசும் போக்கிற்கு எதிராக ‘தனித்தமிழ்’ இயக்கத்தவர்கள் நூறாண்டு களாக செயல்பட்டுள்ளனர். நிதியமைச்சரின் ஆங்கில கலப்பு மொழிநடையை யாருக்காக வும் மாற்றிக்கொள்ள இயலாதென்பது அவரது இயலாமையை காட்டுகிறது. இப்படியாக ஆங்கில கலப்போடு பேசுவதை தனித்துவமானது என்கிறார். மொழி கலப்போடு பேசுவது ‘தனித்துவமானதல்ல.. அது மொழியை கொச்சைப்படுத்துவதாக ஆகும். ஓரிரு முறை எதார்த்த நிலைகளில் பேசுவது வேறு. தமிழ் மொழிதான் தமிழ்நாட்டரசின் மொழி எனும் நிலையில், அமைச்சர் பொறுப்பேற்பவர், தனது மொழி நடையை தகவமைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, ஒருமொழி நடையை தனித்துவமானது என்பது நகைப்பிற்குரியது'' என்று குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், "மரிய வில்சன் சொல்கிற “அன்பு மொழி, இரக்க மொழி” எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் முதன் முதலில் இவர் தமிழ்ச் சமூகத்துக்கு அறியப்பட்டதே ஒரு தெரு ரவுடிபோல, இவர் பொதுவெளியில் ஒரு வீட்டிலுள்ளவரை மோசமாக மிரட்டி, எச்சரித்த ஒரு காணொலியின் மூலம்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சரின் பேச்சு குறித்து, தி.மு.க. அயலக அணிச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.எம்.அப்துல்லா தனது முகநூல் பதிவில், "ஐரோப்பாவிலிருந்து வந்த பாதிரியார் கால்டுவெல் தமிழ் மொழியை கசடறக் கற்று.. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ப தனை ஆய்வுப் பூர்வமாக நிரூபித்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலையும் அளித்து தமிழின் தனித்தன்மையை உறுதிசெய் தார். மேல் ஜாதி மட்டும்தான் படிக்க முடியும் என்ற சாதியக் கொடுமையான அன்றைய சூழலில் மாவட்டங்கள் தோறும் பள்ளிகள் திறந்து ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்து தமிழர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமையும் கிருஸ்துவ சமூகத்திற்கே உண்டு. கிருஸ்துவம் அன்பு மொழி மட்டுமல்ல.. தமிழ் மண்ணில் தமிழையும் ஆழமாகச் சொல்லிக் குடுத்தே இருக்கிறது. கிருஸ்துவம் மட்டுமல்ல.. அத்தனை மதங்களின் அடிநாதமாக இருப்பதும் அன்பு மொழிதான். ஆனால் நான் பார்த்தவரை இந்து மதம் அன்பையே போதிக்கிறது என்று சொல்லி ஊருக்கு ஊர் கலவரங்களை உருவாக்கித் திரிந்த ராமகோபாலன், இஸ்லாம் அன்பை போதிக்கிறது என இயக்கம் வைத்து பிரச்சாரம் செய்து பின்பு குண்டும் வைத்த கோவை பாட்சா துவங்கி.. சமீபத்தில் சொந்த அண்ணன் வீட்டில் உருட்டு கட்டையோடு புகுந்து அவர்கள் குடும்பத்தினரை அடித்து கிழித்த இதே அமைச்சர் மரியவில்சன் வரை "என் மதம் அன்பைத்தான் போதிக்கிறது' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் எவரும் அடிப் படையில் வன்முறையாளர்களாகவே இருக்கிறார்கள்'' என்று சாடியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தபோது, அதில் இடம்பெற்ற சொற்களைத் தவறாக உச்சரித்ததுடன் எண்களையும் பிழையாகக் குறிப்பிட்டது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு கல்வியாளராகவும் கல்லூரி உரிமையாளராகவும் இருக்கும் அவர், பட்ஜெட் உரையை வாசிக்கும்போது தடுமாறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாற்பதாயிரத்து நானூற்றி பன்னிரண்டு போன்ற எண்களைக் கூட சரியாகக் குறிப்பிடத் தவறிய அமைச்சரின் செயல்பாட்டிற்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசின் முக்கிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழில் பிழையின்றிப் பேசாதது விவாதப் பொருளாக மாறியுள்ளது.