75 ஆயிரம் கோடி! குவாரிகளை வளைக்கும் விஷ்ணு ரெட்டி!
"ம க்கள் மத்தியில் தங்களது அரசை நேர்மையானதாகக் காட்டிக் கொண்டு, ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி டார்கெட் திட்டமிட்டு, மணல், சவுடு, கிராவல் மற்றும் கல் குவாரிகளில் விஞ்ஞான முறையில் திருட வருகின்றது த.வெ.க. அரசு'' என்ற தகவலால் வாயடைத்து நிற்கின்றனர் குவாரித்தொழிலில் உள்ளவர்கள். "குவாரி பிசினஸ் என்றாலே வளம் கொழிக்கக்கூடியது. இந்த குவாரித் தொழிலால் கடந்த கால அரசுகளுக்கு வருவாய் வந்ததோ இல்லையோ, மக்கள் மத்தியில் 'வசவுகளுக்கு' மட்டும் பஞ்சமில்லை. யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலுக்கு வரலாமென்று, கடந்த கால அரசுகள் தங்களை வெளிப்படையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், 'நாங்கள் கூறும் ஆட்களுக்குத் தான் குவாரி தொழிலுக்கான அனுமதியைக் கொடுக்க வேண்டும்' என மிரட்டி, குறிப்பிட்ட நபர்களுக்கே ராயல்டி வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்தனர் ஒருசில கும்பல்கள். அதனையும் மீறி நீதிமன்றம் ஏறி தொழிலுக்கான அனுமதி பெற்றாலும், அந்த குறிப்பிட்ட கும்பலுக்கு 'ராயல்டி'யை கொடுக்க வேண்டுமென்பது எழுதப்படாத சட்டம். இத்தகைய 'ராயல்டியை' கடந்த காலகட்டங்களில் கட்டாயமாக வசூலித்தது ஆறுமுகச்சாமி, பழ.படிக்காசு, முத்துப்பட்டணம் எஸ்.ராமச்சந்திரன், கரிகாலன், சர்வேயர் ரத்தினம் மற்றும் ராஜப்பா உள்ளிட்டோரே! அரசுக்கு முறையாக அனுமதிக் கட்டணம் கொடுத்தாலும், ஆட்சியாளர்களுக்கு மாதம் ரூபாய் இவ்வளவு கொடுக்கின்றோமே என அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் அள்ளிக் குவிப்பது இவர்களின் அன்றாட நடவடிக்கை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நீதிமன்றம் குட்டியும் அடங்கவில்லை. இந்நிலையில் த.வெ.க. ஆட்சி அமைந்ததும் தங்களுக்குத்தான் அந்த "வாய்மொழி உரிமம்' வேண்டுமென அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு வரை முட்டிப்பார்த்து வருகின்றனர். ஆனால் அரசு இதுகுறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை'' என்கின்றார் குவாரித்தொழில் செய்யும் திருவள்ளூர் மாவட்டத்துக்காரர். பாறைகளை உடைத்து கல் எடுக்கும் குவாரிகள் 4000, சவுடு மண் மற்றும் கிராவல் குவாரிகள் 12,000 உள்ளிட்டவை தான் தமிழ் நாட்டிலுள்ள குவாரிகளின் எண்ணிக்கை. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சவுடு மண் மற்றும் கிராவல் குவாரிகளுக்கு உரிமம் இன்றுவரை இல்லை. இருப்பினும் ஆங்காங்கே த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.செ.க்கள் ஆசியுடன் குவாரிகள் இயங்கி வருகின்றன. மணல் குவாரிகள் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில், கொரோனா காலத்திற்கு முன்புவரை தமிழ்நாட்டில் இயங்கிய மணல் குவாரிகளின் எண்ணிக்கை 48. தி.மு.க. ஆட்சியில் அது 23 ஆகக் குறைக்கப்பட்டது. தற்பொழுது சவுடு மண் மற்றும் கிராவல் குவாரிகள் 15,000 + மணல் குவாரிகள் 38 என்கின்ற எண்ணிக்கையுடன் இயங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவாரித் தொழில் செய்யும் செங்கல்பட்டுக் காரரோ, "த.வெ.க. ஆட்சி அமைந்தபிறகு எப்பொழுது குவாரி திறப்பார்கள்? யாருக்கு தமிழ்நாட்டிற்கான மொத்த உரிமை கிடைக்குமென்று என்னைப்போல் சிறிய அளவில் தொழில் செய்யும் பலரும் அலைந்தோம். எனக்குத்தான் அந்த வாய்ப்பு... இல்லை, அவனுக்குத்தான் அந்த வாய்ப்பு எனக் கூற, அவர்களுக்கு கிடைத்தால் இந்த மாவட்டத்திற்கான உரிமையை நமக்குக் கொடுத்து விடுவார்களென்று முன்தொகை யையும் கொடுத்துவைத்தோம். ஆனால் சேலம் பகுதியிலிருந்து வந்த அழைப்பு, அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டது. "ரஹிமா பானு' எனத் தன்னை அடையாளப்படுத்திய அந்த பெண்மணி "சமுத்ரா மைன்ஸ்' நிறுவனத்திலிருந்து பேசுகிறேன் என்றார். "நீங்க எத்தனை வருடமாக இந்த குவாரித்தொழில் செய்கிறீர்கள்? எவ்வளவு இடம் இருக்கிறது? கல், சவுடு, கிராவல் மற்றும் மண் குவாரியா? அரசியல் கட்சியில் இருக் கின்றீர்களா?' எனப் பல கேள்விகளை கேட்டார். அனைத்தையும் கூறிவிட்டு எதற்கு இந்த கேள்விகளென்று கேட்டேன். "பொறுத்திருங்கள், நாங்கள் தான் தொழில் செய்ய இருக்கின்றோம்' எனக்கூறிவிட்டு லைனை துண்டித்துவிட்டார். என்னைப்போல் நூற்றுக்கணக்கான நபர்களோடு இதே பெண் பேசியிருக்கிறார். அவர் சமுத்ரா மைன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதையும் உறுதிப்படுத்திவிட்டோம்'' என்கிறார் படபடப்பு குறையாமல்! சமுத்ரா மைன்ஸ் நிறுவனமானது, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பரும், தற்போதைய அரசில் பொது நிகழ்வுகள் மற்றும் அரசியல் ஆலோசகராகவுள்ள விஷ்ணு ரெட்டியின் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கனிம வளத்துறையில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சமுத்ரா மைன்ஸ் பிரசித்தம். இந்த நிறுவனம் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. "கனிம மற்றும் சுரங்கத்துறையானது கண்ணிவெடியில் கால் வைப்பது போன்றது! சற்று அசந்தாலும் துறை அமைச்சர் மற்றும் அரசையே சாய்த்துவிடும். அப்படியிருக்க, தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு இந்த குவாரி பிசினஸை எப்படி கொடுப்பார் முதல்வர் விஜய்? குவாரித் தொழிலில் வழக்குகள் இருக்கக்கூடாது. குவாரித்தொழிலுக்காக விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக த.வெ.க.வினராக இருக்கக்கூடாது. த.வெ.க.வினரின் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது. அதுபோக, இதற்குமுன் கொடிகட்டிப் பறந்த ஆறுமுகச்சாமி, பழ.படிக்காசு, முத்துப்பட்டணம் எஸ்.ராமச்சந்திரன், கரிகாலன், சர்வேயர் ரத்தினம் மற்றும் ராஜப்பா சார்ந்தோர்களுக்கு குவாரி இல்லை. முக்கியமான ஒன்று, அரசிற்கு மட்டும் அனுமதி சீட்டிற்கு பணம் செலுத்தினால் போதும்! அது தவிர ராயல்டி இங்கில்லை' எனக் கவர்ச்சிகரமான நிபந்தனைகளுடன் குவாரித் தொழிலில் இறங்கவுள்ளது விஷ்ணு ரெட்டியின் சமுத்ரா மைன்ஸ். அப்படியானால் சமுத்ரா மைன்ஸ் நிறுவனத்திற்கு என்ன லாபம்? "கல், சவுடு, கிராவல் மற்றும் ஆற்று மணல் குவாரிகளில் தவறுகள் ஏதும் நடைபெறவில்லை. தனியார் யாருக்கும் இது சிண்டிகேட்டாக கொடுக்கப்படவில்லை. குவாரித்தொழில் செய்பவர்கள் யாருக்கும் ராயல்டி கொடுக்க தேவையில்லை என்பது மக்கள் மத்தியில் த.வெ.க. அரசினை 'மாஸாக' காட்டும். ஆனால் உண்மையில் நடப்பது வேறு! கடந்த தி.மு.க. ஆட்சியில் குவாரித்தொழிலில் ஈடுபட்ட டாரஸ், டிப்பர் உள்ளிட்ட லாரி வகைகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. லாரிகள் கண்காணிக்கப்படுவதற்காக ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டதாகக் கூறியது கடந்த அரசு. இதற்காக ரூ.3500 பெறுமானமுள்ள ஜி.பி.எஸ். கருவிகளை ரூ.11 ஆயிரம் தொடங்கி, ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டரை கொடுத்தது. அவர்கள் கருவிகளை பொருத்தியதோடு சரி, கண்காணிக்கவில்லை. இந்நிலையில் அதே ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் திட்டத்தின்மூலம் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளது சமுத்ரா மைன்ஸ் நிறுவனம். வெளியில் ராயல்டி வாங்க மாட்டோமென்று உரக்கக்கூறினாலும், குவாரிகளுக்கு குறைந்த அளவு நடைச்சீட்டு மட்டுமே கொடுக்கப்படும். குறைந்த அளவு நடைச்சீட்டு பெற்றவர்கள், காலம் அதிகமாக இருந்தாலும் இரண்டு மூன்று நாட்களில் அங்கிருக்கும் கனிமத்தை எடுத்துவிடுவார்கள். அதன்பின் யார் நம்மைக் காண்காணிக்கப் போகிறார்கள் எனும் அசட்டு தைரியத்தில் மீதமிருப்பதை சுரண்ட ஆரம்பிக்கவும், அதனை ஜி.பி.எஸ். கண்காணிப்பது அவர்களுக்கே தெரியாது. அதன்பின், கொடுக்கப்பட்ட அனுமதிச்சீட்டை காட்டிலும் கூடுதலாக சுரண்டியுள்ளாய்... இதற்கு அரசு அபராதம் விதித்தால் பன்மடங்கு வரும்... தொழிலே செய்யமுடியாது. எனவே இவ்வளவு பணத்தை எனக்கு கொடுத்துவிடு' என சமுத்ரா மைன்ஸ் டீல் பேச, வேறுவழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். ஆக இதுபோல், ராயல்டி வாங்காமல், அரசிற்கு செல்ல வேண்டியதை செலுத்தாமல் மொத்தமாகக் கொள்ளையடிப்பதே சமுத்ரா மைன்ஸின் திட்டம். ஆண்டிற்கு ரூ.75 ஆயிரம் கோடிகளை ஆட்டையப்போடுவதே அவர்களின் திட்டம்." என்கின்றார் கனிமவளத் துறை அதிகாரி ஒருவர். கடந்த ஆட்சிக் காலத்தில் J Track Enterprises, Chandru, Iswak R உள்ளிட்ட 12 நிறுவனங்கள், லாரிகளுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளன. இந்த முறை சமுத்ரா மைன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் செல்லவுள்ளது. இனி ஒவ்வொரு லாரியையும் அவர்கள் கண்காணிப்பார்கள். இதன்மூலம் அவர்களின் டார்கெட் சாத்தியமாகும். இதே வேளையில், குறைந்த லாபத்தில் தொழில் செய்யும் குவாரி ஒப்பந்ததாரர்கள் சிலரோ, "இப்பொழுது என்ன இருக்கின்றதோ, அதன்படி தொழில் செய்கின்றோம். நாளை சிக்கல் வந்தால் யார் பொறுப்பு?'' என சமுத்ரா மைன்ஸிற்கு டாட்டா காண்பித்த கதையும் இங்குண்டு! வெளியில் தானும், இந்த அரசும் மக்களுக்கானதாக முதல்வர் ஜோசப் விஜய் காண்பித்துக்கொண்டாலும், "அதே டைலர்... அதே வாடகை!' என்கின்ற நிலையை மக்கள் அறியும் காலம் விரைவில் வரும்.

த.வெ.க. அரசு மணல், சவுடு, கிராவல் மற்றும் கல் குவாரித் தொழிலில் ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஷ்ணு ரெட்டி என்பவர் இந்தக் குவாரித் தொழிலைக் கைப்பற்ற முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகி குவாரித் தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நேர்மையானது என்று வெளிப்படையாகக் காட்டிக்கொண்டாலும், விஞ்ஞான ரீதியாகக் குவாரித் தொழிலில் முறைகேடுகள் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குவாரித் தொழில் எப்போதும் அதிக லாபம் தரக்கூடியது என்பதால், இத்துறை சார்ந்த நடவடிக்கைகள் மீண்டும் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.