PulseNews
வணிகம்

வங்கிக் கணக்குக்கு வாடகை! வலைவிரிக்கும் மோசடியாளர்கள்! தமிழர்கள் ஜாக்கிரதை!

"சி ல ஆயிரம் ரூபாய் கமிஷன் தருகிறோம்... உங்கள் வங்கிக் கணக்கை மட்டும் கொடுத்து உதவுங் கள்..." என வேலைதேடும் இளைஞர்கள், வருமானம் குறைந்த குடும்பங்கள், முடங்கிக்கிடக்கும் கணக்கு களை உடையவர்களைக் குறிவைத்து கள மிறங்கிய ஒரு குழுவை அதிரடி ஆபரேஷன் மூலம் முடக்கியிருக்கிறது சைபர் க்ரைம் போலீஸ். தமிழகத்தில் இப்படி தங்கள் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்ட 837 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். "என் கணக்கிற்கு பணம் வரும், அதை அவர் சொல்லும் வேறொரு கணக்கிற்கு மாற்றிவிடுவேன், எனக்கு கமிஷன் கிடைத்து விடும்'' என்ற அலட்சியமான எண்ணத்தில் இருப்பவர்கள், உடனடியாக மாற்றிக்கொள் ளுங்கள். கமிஷனுக்கு ஆசைப்பட்ட இவர் களில் பலரின் நிலைமை வழக்கு, சிறைச்சாலை என மாறியிருக்கிறது. இப்படி கணக்கை வாடகைக்கு விடுவது, உங்களை அறியாமலே சைபர் குற்றவாளிகளின் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஒரு முக்கியக் கண்ணியாக மாற்றிவிடுகிறது. மணி மியூலில் என்ன நடக்கிறது? ஆன்லைன் வர்த்தக மோசடி, போலியான முதலீட்டுத் திட்டங்கள், அல்லது 'டிஜிட்டல் கைது' மிரட்டல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களிடமிருந்து பறிக்கப்படும் பல நூறு கோடி ரூபாய் பணம், காவல்துறையின் கண்ணில் படாமலிருக்க "மணி மியூல்' (ஙர்ய்ங்ஹ் ஙன்ப்ங்) எனப்படும் இந்த வாடகை வங்கிக் கணக்குகள் மூலமே கை மாற்றப்படுகிறது. மியூல் என்ற வார்த்தைக்கு கழுதை என்று பொருள். கோவேறு கழுதைபோல அடுத்தவர் பணத்தை சுமக்கும் கணக்குகளாக இருப்பதால் இதற்கு இந்தப் பெயரை வைத்துள்ளனர் போலும். இப்படி பணத்தை மாற்றுபவர்கள் ஒரு கணக்கில் மட்டும் போடுவதில்லை. நாலைந்து மணி மியூல் கணக்குகளுக்கு மாற்றி, அதன்பின்பே யாரைச் சென்றடைய வேண்டுமோ அவரது கணக்குகளுக்கு மாற்றுகின்றனர். பொதுவாக, வங்கிப் பரிமாற்றம் நாலைந்து கணக்குகளுக்கு மாறிய பின் அதைத் தொடர்வது எளிதான ஒன்றல்ல. குற்றப் பின்னணி கொண்ட கும்பல், பணத்தின் ஆதாரத்தை மறைப்பதற்காகவும், ஒரு கணக்கி லிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணத்தைச் சுழற்சி முறையில் மாற்றி கறுப்பை வெளுப்பாக்கவும் இதனைச் செய்கிறது. இப்படி நடப்பது தெரியவந்தோ, அல்லது புகாரின் பேரிலோ காவல்துறையும் சைபர் க்ரைம் பிரிவும் விசாரணை வளையத்தை விரிக்கும்போது, முதலில் சிக்குவது மோசடி செய்த கும்பல் அல்ல; கமிஷனுக்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை வாடகைக்குக் கொடுத்த 'மணி மியூல்' கணக்காளர்கள்தான். இதுகுறித்து பரவலாக புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறை அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் 48 மணி நேரச் சிறப்பு அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. தேசிய சைபர் க்ரைம் புகாரளிப்பு இணைய தளத்தில் (சஈதட) பதிவான 9,804 புகார்களின் அடிப்படையில், சுமார் 545.27 கோடி ரூபாய் மோசடிப் பணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய 'மணி மியூல்' கணக்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த அதிரடி சோதனையில், மாநிலம் முழுவதும் 837 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பதிவான 601 வழக்குகளுடன் சேர்த்து, புதிதாக 157 முதல் தகவல் அறிக்கைகள் (எஒத) பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள், 114 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 29 காசோலைப் புத்தகங்கள், 73 ஏ.டி.எம். கார்டுகள், 4 மடிக்கணினிகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையின்போது, "நண்பர் கேட்டார் கொடுத்தேன்'', "கமிஷன் ஆசையில் கொடுத்தேன்'', "பணத்தின் ஆதாரம் எனக்குத் தெரியாது'' என்று பலரும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. உங்கள் கணக்கில் மோசடிப் பணம் நுழைந்தாலே, உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படுவதோடு, ஜாமீனில் வரமுடியாத கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் சிறைத் தண்டனையையும் எதிர்கொள்ளவேண்டி யிருக்கும். வங்கிக் கணக்கு, ஏ.டி.எம் கார்டு, இன்டர் நெட் பேங்கிங் லாக்-இன் விவரங்கள், ஓ.டி.பி (ஞபட) ஆகியவற்றை யாருடனும் பகிரக்கூடாது. குறுக்கு வழியில் வரும் சில ஆயிரம் ரூபாய் கமிஷனுக்காக வங்கிக் கணக்கை அடகுவைத்தால், நாளை லட்சக்கணக்கான ரூபாய் மோசடி வழக்கில் குற்றவாளிக்கூண்டில் நிற்க நேரிடும். ஒருவேளை நம் கணக்கில் சந்தேகத்திற்குரிய பணம் வந்தால், உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கும், 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணிற்கும் தகவல் தெரிவிப்பதே பாதுகாப்பானது. இதில் வேறொரு சிக்கலும் உள்ளது. வெறும் கணக்கு ஏய்ப்புக்காக பணம் பயன்படாமல், வேறு மாநிலத்திலுள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் கொண்டுசேர்க்க, நம் வங்கிக் கணக்குப் பயன்படுத்தப்பட்டது எனில் உங்கள் எதிர்காலம் தொலைந்தது. பின் காலத்துக்கும் உங்கள் மேல் விழுந்த தீவிரவாதக் கறையைத் தொலைக்க முடியாததோடு, தேசவிரோதியாக சிறையில் காலம் தள்ளவேண்டியதிருக்கும் என்பதையும் யோசித்துக் கொள்ளுங்கள். குற்றவாளிகள் ஸ்மார்ட்டாக மாறும்போது வேறு வழியின்றி போலீஸும் ஸ்மார்ட்டாக மாறவேண்டிய தேவை ஏற்படுகிறது. தற்போது போலீஸார் இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பான ஏ.ஐ.யின் உதவியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மியூல் ஹண்டர் ஏ.ஐ. பயன்பாட்டின் மூலம், ஒரு வங்கியின் கணக்குகளில் மணி மியூல் பரிமாற்றம் நடக்கிறதா என கண்டறிய முடியும். மனிதர்கள் ஒவ்வொரு கணக்காக பரிசோதித்துக் கொண்டிருக்க, ஏ.ஐ.யோ, ஒரு வங்கியிலுள்ள மொத்தக் கணக்கையும், அதிலிருந்து எந்தக் கணக்குகளுக்கெல்லாம் பரிமாற்றம் நடக்கிறது என பருந்துப் பார்வையில் கண்டறியமுடியும். இப்படி ஆர்.பி.ஐ. 20-க்கும் மேற்பட்ட வங்கிகளில் மியூல் ஹண்டர் ஏ.ஐ. துணையுடன் மணி மியூல் கணக்குகளின் இருப்பையறிய சோதனை மேற்கொண்டுள்ளது. இதனால், இனி ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய மணி மியூல் மோசடியாளர்கள் படிப்படியாக சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பலிகடா ஆகாமலிருக்க என்ன வழி? "எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் கணக் கைக் கொடுத்தால் போதும், பணம் கிடைக்கும்'' என்ற பேராசைக்கு இடம்கொடுக்காதீர்கள். சில நேரங்களில் வேலை கொடுக்கும் நிறுவனம், சில அத்தியாவசியத் தேவைகளுக்காக உங்கள் கணக்கைப் பயன்படுத்திக் கொள்கிறோம் எனக் கேட்கலாம். அதற்கு இடம்தராதீர்கள். பணி செய்பவரின் வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதி கோரும் நிறுவனம் நல்ல நிறுவனமாக இருக்க வாய்ப்பில்லை. நேரடியாக கமிஷன் தருகிறோம் என அணுகாமல் வொர்க் ப்ரம் ஹோம் ஜாப், பேமண்ட் புராஸஸிங் ஜாப், பார்ட் டைம் ஆன்லைன் ஜாப் என்ற பெயரிலும் அணுகுகிறார்கள். எனவே வேலைதேடும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆன்லைனில் பழகுபவர்களிடம் உங்கள் வங்கிக் கணக்கு, பாஸ்வேர்டு போன்றவற்றை எக்காரணம்கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள். ஒன்று உங்கள் பணத்தை இழப்பீர்கள் அல்லது மணி மியூல் குற்றவாளியாவீர்கள். முக்கியமாக டேட்டிங் சைட்டில் புழங்குபவர் கள், அந்த வழியில் அறிமுகமான பெண்ணோ, ஆணோ கேட்கிறார் என்று உங்கள் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். பெரும்பாலான இளைய வயதினர் சறுக்கிவிழும் இடம் இதுதான். மகாராஷ்டிராவிலும் மணி மியூல் வேட்டை! தமிழ்நாட்டைப் போலவே மகாராஷ்டிர மாநிலத்திலும் மணி மியூல் கணக்குகளை வேட்டையாடுவதற்கான பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது. மகாராஷ்டிரா சைபர் துறை கொடுத்த தகவலின்படி, "ஆபரேஷன் 1930: சைபர் பாதுகாப்பு' என்ற நடவடிக்கை மூலம், ஜூலை 1, 2026 அன்று வேட்டை தொடங்கியது. சுமார் ரூ.12.57 கோடி மதிப்பிலான சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய, 57 வங்கிகளிலுள்ள 2,717 'லேயர்-1' பணப் பரிமாற்ற இடைத்தரகர் கணக்குகள் (மணி மியூல் கணக்குகள்) அடையாளம் காணப் பட்டுள்ளன. தமிழகத்தைப் போலவே 17,014 வங்கிக் கணக்குகள் மற்றும் 10,075 ஏ.டி.எம். அடையாள எண்களையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ள னர். கூடுதலாக, ரூ. 89.30 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய காசோலை மோசடியுடன் தொடர்புடைய 3,597 வங்கிக் கணக்குகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சைபர் க்ரைம் பிரிவு தெரிவித்துள்ளது. 5,684 சந்தேகத்திற்கிடமான சிம் கார்டுகளை அடையாளம் கண்டுள்ளனர். -துரை.மகேஷ், மணி

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வங்கிக் கணக்குக்கு வாடகை! வலைவிரிக்கும் மோசடியாளர்கள்! தமிழர்கள் ஜாக்கிரதை!
PulseNews சுருக்கம்

வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களைக் குறிவைத்து, அவர்களின் வங்கிக் கணக்குகளை வாடகைக்குக் கேட்டு மோசடி செய்யும் கும்பல் செயல்பட்டு வருகிறது. சில ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு வந்த இந்த மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டதுடன், தங்கள் வங்கிக் கணக்குகளைப் பணத்திற்காக வாடகைக்கு விட்ட புகாரில் தமிழகத்தில் இதுவரை 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்கவும், வங்கிக் கணக்குகளைப் பிறருக்குப் பயன்படுத்தக் கொடுக்காமல் இருக்கவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business