PulseNews
தொழில்நுட்பம்

செவ்வாய்க்கு பாயும் அணுசக்தி விண்கலம்: ஒரே நேரத்தில் பறக்கப்போகும் 3 ஹெலிகாப்டர்கள்; நாசாவின் அடுத்த மெகா பிளான்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 3 புதிய பறக்கும் ஹெலிகாப்டர்களை நாசா (NASA) விரைவில் அனுப்பவுள்ளது. ஆனால், அவை வழக்கமான விண்கலங்கள் மூலமாக இல்லாமல், அணுசக்தி மூலம் இயங்கும் ஒரு விண்கலம் வழியே மிகவும் வித்தியாசமான முறையில் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைய உள்ளன. 'ஸ்பேஸ் ரியாக்டர்-1 ஃப்ரீடம்' (SR-1 Freedom) என்ற விண்கலத்தை 2028-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அணுக்கரு பிளவு உலை மூலம் இயங்கும் இந்த விண்கலம், 'ஸ்கைஃபால்' (SkyFall) எனப்படும் 3 சிறிய ஹெலிகாப்டர்களை சுமந்து கொண்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது. ஆழமான விண்வெளி ஆய்வுகளில் மனிதகுலத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இத்திட்டம் அமையவுள்ளது. NASA is advancing nuclear power and propulsion in space to accomplish President Trump’s national space objectives. With SR-1 Freedom, launching in 2028, we will demonstrate nuclear electric propulsion and deliver SkyFall helicopters to Mars. In collaboration with @Energy , these... pic.twitter.com/gkGLs7xiVu — NASA (@NASA) March 24, 2026 பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி 'அணுமின் உந்துவிசை' (Nuclear-Electric Propulsion) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டுவதே 'SR-1 ஃப்ரீடம்' விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த விண்கலத்தில் பொருத்தப்படும் அணுக்கரு பிளவு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அந்த மின்சாரம், விண்கலத்தின் மின்சார உந்துவிசை எஞ்சினை (Electric Thruster) இயக்கும். இந்த அமைப்பு சுமார் 20 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியை மட்டுமே நம்பியிருக்காமல், சூரியனிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஆழமான விண்வெளி பகுதிகளுக்கு எதிர்காலத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கு இந்த அணுசக்தி தொழில்நுட்பம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த விண்கலம் 'ஸ்கைஃபால்' (SkyFall) என்ற தொகுப்பைத் தாங்கிச் செல்லவுள்ளது. செவ்வாயில் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்த நாசாவின் பிரபல 'இன்ஜெனியூட்டி' (Ingenuity) ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, அதைவிட அதிநவீன வசதிகள் உடன் இந்த 3 புதிய ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் அதிநவீன கேமராக்கள், வெப்பநிலை உணரிகள் (Temperature Sensors) மற்றும் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார்கள் (Ground-Penetrating Radar) பொருத்தப்பட்டிருக்கும். செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில் மறைந்துள்ள பனி வடிவிலான நீர், புவியியல் அமைப்புகள் மற்றும் வானிலை ஆகியவற்றை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் முதன்மை இலக்காகும். பூமிக்கு அடியில் ஸ்கேன்: ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ரேடார்கள் மூலம் செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து சுமார் 3 மீட்டர் ஆழம் வரையிலும், சாதகமான சூழல் இருப்பின் அதற்கும் கீழேயும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். நிலத்தடியில் புதைந்துள்ள பனிப்படலங்கள், நிலத்தடி வெற்றிடங்கள் மற்றும் பாறை அமைப்புகளைக் கண்டறிவதன் மூலம், எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான இடங்களைத் தேர்வு செய்ய இந்தத் தகவல்கள் உதவும். செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர்களைப் பறக்கவிடுவது எளிதான காரியம் அல்ல. அங்கு வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், ஹெலிகாப்டரின் இறக்கைகள் தள்ளுவதற்குப் போதுமான காற்று மூலக்கூறுகள் இருக்காது. இதற்காக 'ஸ்கைஃபால்' ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகள் (Rotors) செவ்வாயின் சூழலுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒலியின் வேகத்தைத் தாண்டி (Mach 1) சுழலும் வகையிலான அடுத்த தலைமுறை சுழலி தொழில்நுட்பங்களை நாசா தனது ஆய்வகங்களில் வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. 'SR-1 ஃப்ரீடம்' என்பது வெறும் செவ்வாய் கிரக ஆய்வு மட்டுமல்ல; ஆழமான விண்வெளியிலும் அணுசக்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் செவ்வாய், நிலவு மற்றும் சூரியக் குடும்பத்தின் எல்லைகளை நோக்கிய பயணங்களுக்கும் இந்த அணுசக்தி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இம்முறை செவ்வாய் கிரகத்தின் தரையில் ஊர்ந்து செல்லும் ரோவர்கள் மட்டுமல்லாமல், அதன் வானில் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் பறந்து வலம் வரவுள்ளன.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
செவ்வாய்க்கு பாயும் அணுசக்தி விண்கலம்: ஒரே நேரத்தில் பறக்கப்போகும் 3 ஹெலிகாப்டர்கள்; நாசாவின் அடுத்த மெகா பிளான்
PulseNews சுருக்கம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மூன்று புதிய ஹெலிகாப்டர்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இவை வழக்கமான விண்கலங்களுக்குப் பதிலாக, அணுசக்தி மூலம் இயங்கும் 'ஸ்பேஸ் ரியாக்டர்-1 ஃப்ரீடம்' (SR-1 Freedom) எனும் விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.

அணுக்கரு பிளவு உலை தொழில்நுட்பத்தில் இயங்கவுள்ள இந்த விண்கலத்தை 2028-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விண்ணில் செலுத்த நாசா இலக்கு நிர்ணயித்துள்ளது. 'ஸ்கைஃபால்' (SkyFall) என்று அழைக்கப்படும் இந்த மூன்று சிறிய ஹெலிகாப்டர்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்தில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology