PulseNews
தொழில்நுட்பம்

வருங்கால விவசாயத்திற்கு புதிய நம்பிக்கை; கடும் வறட்சியையும் தாங்கும் பயிர்கள் கண்டுபிடிப்பு

அண்டார்ட்டிகாவின் உறைபனி நிலப்பரப்பில், உலகின் மிகக் கடுமையான தட்பவெப்ப நிலையைச் சமாளித்து வளரும் இரு பூக்கும் தாவரங்களில் ஒன்றுதான் 'கொலோபான்தஸ் குவிடென்சிஸ்' (Colobanthus quitensis). கடும் பனி, நீர் பற்றாக்குறை மற்றும் சூரியனில் இருந்து வரும் கடுமையான புறஊதா (UV) கதிர்வீச்சு ஆகியவற்றை எதிர்த்து இந்தச் சிறிய தாவரம் எவ்வாறு உயிர் வாழ்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாகவே ஒரு புதிர் நிறைந்த சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது இந்த ரகசியத்தின் கதவைச் சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் திறந்துள்ளனர். 'பொலாரிக்ஸ்' (Polarix) என்ற திட்டத்தின் கீழ், இந்தத் தாவரத்தின் முழுமையான மரபணு வரைபடத்தை (Full Genome Mapping) அவர்கள் வெற்றிகரமாக வரிசைப்படுத்தியுள்ளனர். இத்தாவரத்தின் 40 குரோமோசோம் அளவிலான அனைத்துக் கட்டமைப்புகளையும் அவர்கள் கண்டறிந்து தொகுத்துள்ளனர். இந்தத் தகவல்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் 'ஜெனோம் பயாலஜி அண்ட் எவொலூஷன்' (Genome Biology and Evolution) என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன. உலகளவில் பருவநிலை மாற்றத்தால் நீடிக்கும் வறட்சி, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கடும் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயத் துறையும் உணவு உற்பத்தியும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தத் தாவரத்தின் மரபணு ஆராய்ச்சி மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்துச் சிலியின் கேப் ஹார்ன் சர்வதேச மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவருமான எட்வர்டோ காஸ்ட்ரோ கூறுகையில், தாவரத்தின் முழு மரபணுவையும் தங்களால் வெற்றிகரமாக வரிசைப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மரபணு வரைபடத்தின் மூலம், உறைபனியைத் தாங்கும் திறன், நீரைச் சேமிக்கும் முறை மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிடமிருந்து த பாதுகாத்துக் கொள்ளும் பண்பு ஆகியவற்றுக்குக் காரணமான குறிப்பிட்ட மரபணுக்களை அறிவியலாளர்களால் அடையாளப்படுத்த முடியும். எதிர்காலத்தில் மேம்பட்ட மரபணுத் திருத்தத் தொழில்நுட்பங்கள் (Gene-editing technologies) மூலம் இத்தகையப் பண்புகளை நம்மூர் உணவுப் பயிர்களிலும் வளர்த்தெடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதேவேளையில், வேறொரு உயிரினத்தின் மரபணுவை பயிர்களுக்குள் செலுத்தி மரபணு மாற்றப்பட்ட (Transgenic/GMO) பயிர்களை உருவாக்குவது தங்கள் நோக்கமல்ல என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். "நாங்கள் புதிய மரபணுக்களைச் செருகும் தாவரங்களை உருவாக்க விரும்பவில்லை; மாறாக, அதிக சத்துமிக்கப் பயிர்களின் சொந்த மரபணுவிலிருந்து அவற்றின் தாங்கு திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் மரபணுத் திருத்தம் செய்யவே திட்டமிட்டுள்ளோம்," என காஸ்ட்ரோ விளக்கியுள்ளார். இருப்பினும், இந்த ஆராய்ச்சி உடனடியாக விவசாயிகளின் கைகளுக்கு வந்துவிடாது. இதில் உள்ள முக்கிய மரபணுக்களைக் கண்டறிந்து, அவற்றைச் சந்தைப்படுத்தக்கூடிய பயிர் வகைகளாக மேம்படுத்தக் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் உலக உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சூழலில், அந்தார்ட்டிகாவின் இந்தச் சிறிய தாவரம் எதிர்கால உலகிற்கான உணவு ஆதாரத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய திறவுகோலாக மாறியுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வருங்கால விவசாயத்திற்கு புதிய நம்பிக்கை; கடும் வறட்சியையும் தாங்கும் பயிர்கள் கண்டுபிடிப்பு
PulseNews சுருக்கம்

அண்டார்டிகாவின் அதீத குளிர் மற்றும் கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் உயிர்வாழும் 'கொலோபான்தஸ் குவிடென்சிஸ்' என்ற பூக்கும் தாவரத்தின் ரகசியத்தை சிலி நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பனி, வறட்சி மற்றும் அதிகப்படியான புறஊதா கதிர்வீச்சுக்கு மத்தியிலும் இந்தத் தாவரம் எவ்வாறு வளர்கிறது என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாவரத்தின் பண்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், எதிர்கால விவசாயத்தில் கடுமையான வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு விவசாயத் துறைக்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology