விண்வெளியில் ஆபத்தான ரிப்பேர் வேலை பார்க்கும் அனில் மேனன்: வைரல் வீடியோ
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பராமரிக்கும் முக்கியப் பணிக்காக 10 நாட்களில் 2வது முறையாக விண்வெளி நடை மேற்கொண்டுள்ளார். அவருடன் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் (ESA) சேர்ந்த விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோவும் விண்வெளி நிலையத்துக்கு வெளியே சென்று இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் 6.5 மணி நேரம் இந்த விண்வெளி நடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் உள்ள நாசா கட்டுப்பாட்டு மையத்துக்கு குரல், காணொலி மற்றும் தரவுகளை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஸ்பேஸ்-டு-கிரவுண்ட் ஆன்டெனாவை மாற்றுவது இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய ஆன்டெனாவை அகற்றி, விண்வெளி நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள புதிய ஆன்டெனாவை பொருத்த உள்ளனர். இந்தப் பணியில் மின்சார இணைப்புகள் மற்றும் தரவு இணைப்புகளை மிகக் கவனமாக இணைக்க வேண்டும். புதிய ஆன்டெனா செயல்பாட்டுக்கு வந்த பிறகு, விண்வெளி நிலையத்துக்கும் பூமிக்கும் இடையிலான தகவல் தொடர்பு மேலும் நம்பகமானதாகும். ரோபோடிக் கையில் பயணிக்கும் அனில் மேனன் இந்த விண்வெளி நடைப்பணியின் முக்கியமான கட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் கனடார்ம்2 (Canadarm2) ரோபோடிக் கையைப் பயன்படுத்தி அனில் மேனன் நிலையத்தின் வெளிப்புறப் பகுதிக்குச் செல்ல உள்ளார். எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் உள்ள ஆன்டெனாவை மாற்றுவதற்கு இந்த ரோபோடிக் கை அவருக்கு உதவும். இதற்கிடையில் சோஃபி அடெனோ விண்வெளி நிலையத்துடன் பாதுகாப்புக் கயிற்றால் இணைக்கப்பட்ட நிலையில் இருந்து பணியில் ஒருங்கிணைந்து செயல்படுவார். அனில் மேனனுக்கு 2வது விண்வெளி நடை எக்ஸ்பெடிஷன் 75 (Expedition 75) குழுவின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள அனில் மேனனுக்கு இது 2வது விண்வெளி நடை ஆகும். அதே நேரத்தில், சோஃபி அடெனோவுக்கு இது முதல் விண்வெளி நடை. இதன் மூலம் விண்வெளி நடை மேற்கொண்ட முதல் பிரெஞ்சு பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைக்கிறார். புதிய ஆன்டெனா பொருத்தப்பட்ட பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் தகவல் தொடர்பு வசதி மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி நிலையத்தில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகளின் தரவுகள், செயல்பாட்டு தகவல்கள் மற்றும் விண்வெளி வீரர்களின் நேரடி தொடர்புகள் ஆகியவற்றை பூமிக்கு தடையின்றி அனுப்புவதற்கு இந்த மேம்பாடு உதவும். மருத்துவரும் விண்வெளி பொறியாளருமான அனில் மேனனை நாசா கடந்த 2021-ம் ஆண்டு விண்வெளி வீரராகத் தேர்வு செய்தது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் அவரது பங்களிப்பு தொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது. இந்த 2வது விண்வெளி நடை, விண்வெளி நிலையத்தின் முக்கிய தகவல் தொடர்பு அமைப்பை நீண்ட காலத்துக்கு வலுப்படுத்தும் பணியாக பார்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்தை பராமரிக்கும் பணிக்காக 10 நாட்களில் இரண்டாவது முறையாக விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவருடன் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த வீராங்கனை சோஃபி அடெனோவும் இணைந்து இந்த சவாலான பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விண்வெளி நடைப்பயணம் சுமார் 6.5 மணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பராமரிப்பு பணிகள் குறித்து நாசா கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.