சென்னை மெட்ரோ - பறக்கும் ரயில் சேவை இணைப்பு; ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்
தமிழ்நாடு அரசால் முதல்முறையாகக் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரியில் அனுப்பப்பட்ட முன்மொழிவுக்குத் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து, எம்.ஆர்.டி.எஸ் ரயில் சேவையின் சொத்துக்கள், ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகக் கைமாறுகின்றன. சென்னை பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) சேவையைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (சி.எம்.ஆர்.எல்) இணைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியம் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாகச் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்குப் புதுடெல்லியில் உள்ள ரயில்வே வாரியம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், சென்னை மெட்ரோவிடம் எம்.ஆர்.டி.எஸ் சேவைகளைக் கையளிப்பது, இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்துத் தெற்கு ரயில்வேக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் காலவரிசை: நீண்ட கால நடவடிக்கை: கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த இணைப்பு தற்போது சாத்தியமாகியுள்ளது. இரண்டு ஆண்டு இடைக்காலப் பகுதி: தெற்கு ரயில்வே தன் வசம் உள்ள சொத்துக்கள் மற்றும் பொது பராமரிப்புப் பணிகளை 90 நாட்களுக்குள் கையளிக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகள் வரையிலான இடைக்காலப் பகுதியில், பறக்கும் ரயில்களின் முழுமையான இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் படிப்படியாகச் சென்னை மெட்ரோவிடம் ஒப்படைக்கப்படும். சொத்துக்கள் கையளிப்பு: 19 ரயில் நிலையங்கள், நிலங்கள், மின் தூக்கிகள் (Lifts), நகரும் படிகட்டுகள் (Escalators), நடைமேம்பாலங்கள், தண்டவாளங்கள், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் மின்சார ரயில்கள் (EMU) அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் மெட்ரோ நிறுவனத்திற்கு மாற்றப்படும். ரயில் நிலையங்களின் கட்டமைப்பு மற்றும் வழித்தட மாற்றங்கள்: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள 9 மற்றும் 10 எண் நடைமேடைகள் எம்.ஆர்.டி.எஸ் ரயில் சேவைக்கென ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்கள் பாதையை மாற்றிக் கொள்ள வசதியாகக் கடக்கும் நிலையத்தை தமிழ்நாடு அரசு கட்டமைக்கும். கடற்கரைக்கும் கோட்டைக்கும் இடையே தற்போது ஒரே தண்டவாளம் மட்டுமே உள்ள நிலையில், இரட்டைத் தண்டவாளம் அமைப்பது தொடர்பாகத் தெற்கு ரயில்வே பரிசீலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் சீராகச் செயல்படுத்தத் தெற்கு ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகச் சென்னை ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து அதிகார அமைப்பின் (சி.யு.எம்.டி.ஏ) ஒருங்கிணைப்பாளர் செயல்படுவார். இணைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ள நுகர்வோர் ஆர்வலர்கள், இது ரயில்களின் இயக்கத் திறனை மேம்படுத்தும் என்றாலும், வேளச்சேரியிலிருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வரை நேரடியாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவைகளுக்கான கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) சேவையைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (சி.எம்.ஆர்.எல்) இணைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியம் தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
தமிழக அரசு 2011-ம் ஆண்டு ஜனவரியில் இதற்கான முன்மொழிவை முதன்முதலில் சமர்ப்பித்திருந்தது. தற்போது கிடைத்துள்ள இந்த ஒப்புதலின் அடிப்படையில், எம்.ஆர்.டி.எஸ் ரயில் சேவை தொடர்பான சொத்துக்கள், ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் இனி சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் முறையாகக் கைமாறுகின்றன.