அண்டார்டிகாவின் ‘ரத்த அருவி’ மர்மம்: பனிக்குள் வாழும் பண்டைய கடல் உயிரினங்கள்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
அண்டார்டிகாவின் மிக விசித்திரமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான 'ரத்த அருவி' குறித்த சுவாரசியமான உண்மை தற்போது உறுதியாகி உள்ளது. கடலில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த அருவியில் உள்ள நீர் கடலில் இருந்து உருவானதுதான் என்று பல ஆண்டுகளாகக் கணித்துவந்த விஞ்ஞானிகள், தற்போது அதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். சுமார் பல லட்சம் ஆண்டுகளாக பனிப்பாறைக்கு அடியில் சிக்கியிருந்த பண்டைய கடல்வாழ் உயிரினங்களின் வழித்தோன்றல்கள் இந்த மர்மமான ரத்த அருவியில் இன்னும் வாழ்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அரிய சிவப்பு நிற நீர் 'டெய்லர்' பனிப்பாறையிலிருந்து (Taylor Glacier) வெளியேறி 'போனி' ஏரிக்குள் (Lake Bonney) கலக்கிறது. பனிக்கு அடியில் இருந்து வெளிவரும் அதிக உப்புத்தன்மை கொண்ட இந்நீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேரும்போது செந்நிறமாக மாறுகிறது; இதனால் பார்ப்பதற்கு ரத்தம் வழிந்தோடுவது போல காட்சியளிக்கிறது. இந்தப் பனிப்பாறைக்கு அடியில் கடல்வாழ் டையட்டம்கள் (marine diatoms), ஹாப்டோபைட்டுகள் (haptophytes), டைனோஃப்ளாஜலேட்டுகள் (dinoflagellates) மற்றும் சிலியேட்டுகள் (ciliates) உள்ளிட்ட தனித்துவமான நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. பொதுவாக கடலில் மட்டுமே வாழக்கூடிய இந்த நுண்ணுயிரிகள், பல காலங்களுக்கு முன்பு பனிப்பாறைகள் நகர்ந்து கடல்நீரைத் தனியாகத் துண்டித்தபோது உள்ளேயே சிக்கிக்கொண்டன. 'நேச்சர் ஜியோசயின்ஸ்' (Nature Geoscience) ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பனிப் பாறைக்கு அடியில் உப்புநீர் அமைப்பானது கடலில் இருந்து பிரிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் கடல்சார்ந்த உயிரியல் அடையாளங்கள் அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும், இது ஒரு "அரிய கடல்சார் புகலிடம்" என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெய்லர் பள்ளத்தாக்கு பகுதி வெப்பமாக இருந்த காலத்தில் கடல் நீரால் நிரம்பியிருந்ததாகவும், பின்னர் கடல் மட்டம் குறைந்து பனிப்பாறைகள் அதனை மூடிக்கொண்டதாகவும் பல ஆண்டுகளாக நிலவி வந்த கருத்துக்கு, தற்போது உயிரியல் ரீதியான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது. ஆய்வுக்குழுவினர் மக்முர்டோ உலர் பள்ளத்தாக்குகள் (McMurdo Dry Valleys) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 167 நீர், வண்டல், பனி மற்றும் காற்று மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். டி.என்.ஏ வரிசைமுறை ஆய்வின் மூலம், ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் இங்கு வசிப்பது உறுதியானது. ரத்த அருவியில் உள்ள நுண்ணுயிரிகளில் 9.34 சதவீதம் அருகிலுள்ள கடல் மாதிரிகளோடு ஒத்துப்போகின்றன. ஆனால், அண்டார்டிகாவின் பிற உலர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இந்த ஒற்றுமை வெறும் 1.15% மட்டுமே இருந்தது. உறைபனி மற்றும் கடுமையான உப்புத்தன்மை கொண்ட மிகக் கொடூரமான சூழலிலும், இந்த நுண்ணுயிரிகள் பல உயிரியல் ரீதியாகச் செயல்பட்டு வருவதுடன், ஒளிச்சேர்க்கையிலும் ஈடுபட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலை எதிர்கொள்ள அவை சேதமடைந்த செல்களைத் தாமாகவே சரிசெய்து, அழுத்த எதிர்வினை அமைப்புகளைத் தூண்டுகின்றன; சில இனங்கள் தங்களுக்குச் சாதகமான சூழல் வரும் வரை செயலற்ற நிலைக்குச் (dormant) சென்றுவிடுகின்றன. பூமியில் ஏற்பட்ட தீவிர பருவநிலை மாற்றங்களைக் கடந்து உயிரினங்கள் பல மில்லியன் ஆண்டுகளாக எவ்வாறு தப்பிப் பிழைத்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது என்றும், அண்டார்டிகா கண்டத்தின் வரலாற்றை முழுமையாக மறுகட்டமைப்பு செய்ய இந்தத் தரவுகள் பெரிதும் பயன்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் உள்ள 'ரத்த அருவி' குறித்த நீண்டகால மர்மத்திற்கு விஞ்ஞானிகள் தற்போது தீர்வு கண்டுள்ளனர். பல ஆண்டுகளாகக் கருதப்பட்டதைப் போலவே, இந்த அருவி நீர் கடலில் இருந்து உருவானது என்பதை ஆய்வுகள் மூலம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
பல லட்சம் ஆண்டுகளாகப் பனிப்பாறைக்கு அடியில் கடலில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்து இருந்தபோதிலும், பண்டைய கடல்வாழ் உயிரினங்களின் வழித்தோன்றல்கள் இந்த அருவிப் பகுதியில் இன்றும் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.