PulseNews
தொழில்நுட்பம்

மனித மூளை வளர்ச்சிக்கு இறைச்சி மட்டுமே காரணமல்ல... பல தசாப்த கால நம்பிக்கையை உடைக்கும் புதிய ஆய்வு

மனித மூளையின் அசுர வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் இறைச்சி உணவே பிரதான எரிபொருளாக விளங்கியது என்ற கருத்து பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் மற்றும் உணவு ஆர்வலர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆனால், புகழ்பெற்ற சர்வதேச ஆய்விதழான சயின்ஸில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவு ஒன்று, இந்த நீண்ட கால நம்பிக்கையை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. மனித அறிவாற்றலை வடிவமைப்பதில் இறைச்சிக்கு இணையாக, ஏன் அதைவிட ஒரு படி மேலாகவே பழங்கள், தேன் மற்றும் சமைத்த மாவுச் சத்து நிறைந்த உணவுகள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளன என்பதை இந்த ஆய்வு அழுத்தமாக நிறுவுகிறது. கடந்த 40 லட்சம் ஆண்டுகளில் மனித மூளை அடைந்த வியக்கத்தக்க பரிணாம வளர்ச்சிக்கு, உடலுக்குத் தடையின்றி கிடைத்த குளுக்கோஸ் விநியோகமே முதன்மைக் காரணம். உடலின் மிகச் சிக்கலான உறுப்பான மூளை இயங்குவதற்கு குளுக்கோஸே முதன்மைத் தேர்வாகும். விலங்கு வழி உணவுகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கிய அதே வேளையில், நாளுக்கு நாள் ஆற்றல் தேவை அதிகரித்துக்கொண்டே சென்ற மூளையின் தேவையைப் பூர்த்தி செய்தது கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து) தான். ஆஸ்ட்ரலோபிதேகஸ் அபாரென்சிஸ் (Australopithecus afarensis) மூளையின் எடை சுமார் 300 கிராம். நவீன ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens): மூளை எடை சுமார் 1,500 கிராம். ஒரு வயது வந்த மனிதனின் மொத்த உடல் எடையில் மூளை வெறும் 2% மட்டுமே இருந்தாலும், உடல் ஓய்வில் இருக்கும்போது செலவிடும் மொத்த ஆற்றலில் 20%-ஐ மூளையே உறிஞ்சுகிறது. இதுவே வளரும் குழந்தைகளிடத்தில் 66% வரை ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. மனித பரிணாமத்தின் 6 வெவ்வேறு காலகட்டங்களை மாதிரியாகக் கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த சுவாரசியமான தகவல்கள்; ஆரம்பகால மனிதர்கள் பழங்கள் மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகளையே பெரிதும் சார்ந்திருந்தனர். அவர்களின் மொத்த ஆற்றல் தேவையில் 65%-க்கும் அதிகமான பங்கு இயற்கை சர்க்கரைகளில் இருந்தே பெறப்பட்டது. மனிதன் நெருப்பைக் கட்டுப்படுத்தி உணவைச் சமைக்கக் கற்றுக்கொண்ட பிறகு, பழச் சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டார்ச் நிறைந்த மாவுச்சத்து உணவுகள் நம்பகமான குளுக்கோஸ் ஆதாரமாக மாறின. இது மூளை வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. தொல்லியல் புதைபடிவ பற்கள், ஐசோடோப் ஆய்வுகள், மனிதனின் வண்ணப் பார்வைத் திறன், பற்குழிகள் மற்றும் நவீன மனித மரபியல் ஆகியவை ஆரம்பகால மனிதர்கள் இறைச்சியை விட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கே அதிகம் தகவமைத்துக் கொண்டிருந்ததை நிரூபிக்கின்றன. நமது நாவில் உள்ள இனிப்புச் சுவை மொட்டுகள், சிறிய தாடை, சிறிய பற்கள், சிறிய குடல் அமைப்பு மற்றும் குளுக்கோஸை செரிக்கும் மரபணு மாற்றங்கள் என அனைத்துமே கார்போஹைட்ரேட் உணவுகளால் உந்தப்பட்ட மரபியல் தேர்வுகள்தான் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வு இறைச்சி உணவுகளின் நன்மைகளை ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. மாறாக, மனித பரிணாமம் என்பது ஒரு சமநிலையான உணவுப் பழக்கத்தால் உருவானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இயற்கையின் இனிப்புப் பழங்கள், தேன் மற்றும் சமைத்த மாவுச்சத்துக்கள் பூமியின் அதிபுத்திசாலித்தனமான மனித மூளை உருவாவதற்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்துள்ளன. மனிதகுலத்தின் மாபெரும் பரிணாம வளர்ச்சி என்பது வேட்டையாடுதலுக்கு மட்டுமல்ல, இயற்கையின் இனிப்பான மாவுச்சத்து உணவுகளுக்கும் சம அளவில் கடமைப்பட்டுள்ளது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மனித மூளை வளர்ச்சிக்கு இறைச்சி மட்டுமே காரணமல்ல... பல தசாப்த கால நம்பிக்கையை உடைக்கும் புதிய ஆய்வு
PulseNews சுருக்கம்

மனித மூளையின் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் இறைச்சி உணவே முக்கியக் காரணமாக இருந்தது என்ற பல தசாப்த காலக் கருத்து தவறானது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புகழ்பெற்ற சயின்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த முடிவுகள், நீண்டகாலமாக நிலவி வந்த நம்பிக்கையை மாற்றியமைத்துள்ளன.

மனித மூளையின் பரிணாம வளர்ச்சிக்கு இறைச்சிக்கு இணையாக, பழங்கள், தேன் மற்றும் சமைத்த மாவுச்சத்துள்ள உணவுகளும் பெரும் பங்காற்றியுள்ளன என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் மனித அறிவாற்றலை வடிவமைப்பதில் பிற உணவுப் பொருட்களின் முக்கியத்துவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology