PulseNews
தொழில்நுட்பம்

பால்வெளி மண்டலம் எப்படி உருவானது? ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்த அரிய ரகசியம்

நாம் வாழும் இந்த பால்வெளி மண்டலம் (Milky Way) இன்றைக்குப் பல நூறு பில்லியன் நட்சத்திரங்களுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. ஆனால், நமது விண்வெளி வீடான இந்த பால்வெளி மண்டலம் எப்படி உருவானது? அதன் ஆரம்பக்கால ரகசியம் என்ன? இந்த மர்மத்திற்கு விடை காணும் வகையில், நாசாவின் சக்திவாய்ந்த 'ஹப்பிள்' விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope) ஒரு பிரமிப்பூட்டும் தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுமார் 1,180 கோடி ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது பிரபஞ்சம் உருவான 'பெருவெடிப்பு' நிகழ்ந்து வெறும் 200 கோடி ஆண்டுகளிலேயே, இளம் பால்வெளி மண்டலம் தனக்கு அருகில் இருந்த குள்ள விண்மீன் மண்டலத்தை (Dwarf Galaxy) அப்படியே விழுங்கித் தன்னுள் இணைத்து கொண்டு உள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் அஸ்ட்ரானமி இதழில் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பால்வெளி மண்டலத்தின் உருவாக்க வரலாறு, இதுவரை கணிக்கப்பட்டதை விட மேலும் 180 கோடி ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்துள்ளது. விழுங்கப்பட்ட அந்தக் குள்ள விண்மீன் மண்டலத்திற்கு 'LKH' (Low-energy-Kraken-Heracles) என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது அளவில் சிறியதாக இருந்தாலும், நமது சூரியனைப் போல 50 கோடி மடங்கு (500 மில்லியன் சூரிய நிறை) பிரம்மாண்டமான நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது. பால்வெளி மண்டலம் மிகச் சிறியதாக இருந்த காலத்திலேயே இந்த இணைப்பு நிகழ்ந்ததால், ஆரம்பக்கட்ட பால்வெளியின் எடையில் இது மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. பால்வெளி மண்டலம்தான் நமது வீடு; ஆனால் நமது வீடு எப்படி கட்டப்பட்டது என்பது நமக்கே சரியாகத் தெரியாது. வளர்ந்து வந்த பால்வெளி மண்டலத்தை கட்டி எழுப்ப ஆரம்பத்தில் கிடைத்த வலிமையான 'செங்கல்தான்' இந்த LKH மண்டலம் என்று இத்தாலியின் போலோக்னா வானியற்பியல் ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளர் டேவிட் மஸாரி சுவாரசியமாக விளக்குகிறார். பால்வெளி மண்டலம் பிற விண்மீன் மண்டலங்களை விழுங்கி வளர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்? அதற்குக் கைகொடுத்தவைதான் 'குளோபுலர் கிளஸ்டர்கள்' (Globular Clusters) எனப்படும் அடர்த்தியான பழங்கால விண்மீன் கூட்டங்கள். லட்சக்கணக்கான பழமையான நட்சத்திரங்களை கொண்ட இந்த விண்மீன் கூட்டங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகள் அழியாமல் நீடிப்பதால், பிரபஞ்சத்தின் வரலாற்றுப் பதிவேடுகளாக (Cosmic Records) திகழ்கின்றன. பால்வெளி மண்டலத்தின் உட்புறத்தில் உள்ள 20,000 ஒளி ஆண்டுகள் தூரத்திற்குள் அமைந்த 39 விண்மீன் கூட்டங்களை ஹப்பிள் தொலைநோக்கி மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் 'கையா' (Gaia) விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் துல்லியமாக ஆராய்ந்தனர். அவற்றின் வயது மற்றும் உலோகத் தன்மையை ஆய்வு செய்தபோது 3 பிரிவுகள் வெளிப்பட்டன. இளம் பால்வெளி மண்டலத்திற்குள்ளேயே சொந்தமாக உருவான நட்சத்திரங்கள். 1,000 கோடி ஆண்டுகளுக்கு முன் பால்வெளியால் விழுங்கப்பட்ட 'கையா-சாசேஜ்-என்செலடஸ்' மண்டலத்தின் நட்சத்திரங்கள். இது முந்தைய இணைப்பை விடப் பழமையானதாகவும், அதேசமயம் பால்வெளியின் சொந்த நட்சத்திரங்களை விட சற்று இளமையாகவும் இருந்தது. இந்த 3-வது விண்மீன் கூட்டம்தான், பால்வெளி மண்டலம் 'LKH' மண்டலத்தை விழுங்குவதற்கு முன்பே அதனுள் உருவான விண்மீன்கள் என்பதை விஞ்ஞானிகள் திட்டவட்டமாக உறுதி செய்துள்ளனர். பால்வெளி மண்டலம் தொடர்ந்து பிற மண்டலங்களை ஈர்த்து விழுங்கி வருகிறது. Sagittarius விண்மீன் மண்டலம்: 600 கோடி ஆண்டுகளுக்கு முன் இணையத் தொடங்கி, இன்றும் பால்வெளியுடன் இணைந்து கொண்டிருக்கிறது. கையா-சாசேஜ்-என்செலடஸ் 1,000 கோடி ஆண்டுகளுக்கு முன் விழுங்கப்பட்டு பால்வெளியின் வடிவத்தையே மாற்றியது. LKH மண்டல: தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1,180 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மிகத் தொடக்கக்கால இணைப்பு. தொடக்கக் காலத்தில் பால்வெளி மண்டலம் தனது சொந்த வாயுக்களிலிருந்து உருவான நட்சத்திரங்களால் மட்டுமே உருவானது என்ற பழைய கருத்தை இக்கண்டுபிடிப்பு முழுமையாக மாற்றியுள்ளது. பிற விண்மீன் மண்டலங்களை வேட்டையாடி, அவற்றின் நட்சத்திரங்களையும் வாயுக்களையும் தனதாக்கிக் கொண்டதன் மூலமே நமது பிரம்மாண்ட பால்வெளி மண்டலம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பால்வெளி மண்டலம் எப்படி உருவானது? ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்த அரிய ரகசியம்
PulseNews சுருக்கம்

நூறு பில்லியன் கணக்கிலான நட்சத்திரங்களைக் கொண்ட பால்வெளி மண்டலம், ஆரம்பத்தில் எப்படி உருவானது என்பது குறித்த மர்மத்திற்கு விடை காணும் வகையில் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்ந்த 200 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது சுமார் 1,180 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பால்வெளி மண்டலத்தின் ஆரம்பக்கால பரிணாம வளர்ச்சி குறித்த வியக்கத்தக்க தகவல்களை இந்த விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology