PulseNews
தொழில்நுட்பம்

இலவசப் பேருந்துப் பயணத்தின் அதிக விலை: கேரளத்தில் இருந்து ஒரு பாடம்

எழுத்து: முகம்மது ரியாஸ் மொழியாக்கம்: எம். கோபால் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயண வசதியை வழங்குவது என்ற கேரளத்தின் முடிவு, பாராட்டுக்குரிய ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பயணம் அல்லது போக்குவரத்து என்பது வெறும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது மட்டுமே என்று அர்த்தம் இல்லை; அது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுவாழ்வில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்க ஒரு காரணமாகவும் அமைகிறது. பல பெண்களுக்கு, குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, போக்குவரத்துச் செலவுகள் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்திருக்கக் கூடும். அந்தச் சுமையைக் குறைப்பதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய சமூகச் சூழலையும் பெண்களுக்கு பயணிக்கும் சுதந்திரத்தையும் ஊக்குவிக்க மாநில அரசு முயல்கிறது. இவை மிகச் சிறந்த நோக்கங்களாகும். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் ஆனால், ஒரு நலத்திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தை மட்டும் சார்ந்ததல்ல; அது வடிவமைக்கப்பட்ட விதத்தையும் சார்ந்திருக்கிறது. கேரளத்தின் அனுபவம் ஒரு சிக்கலான சூழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது: இலவசப் பயணம் என்பது போக்குவரத்து வசதியை விரிவுபடுத்தினாலும், அதே வேளையில் அது மாநிலத்தின் பயணிகள் போக்குவரத்துச் சந்தையின் பொருளாதாரக் கட்டமைப்பையே மாற்றி அமைத்திருக்கிறது; இது போட்டி, வாழ்வாதாரம் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றின் மீது தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் போக்குவரத்து அமைப்பு, கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (KSRTC) மட்டுமே மையமாகக் கொண்டு கட்டமைக்கப் படவில்லை. தனியார் பேருந்துகள், குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையேயான மற்றும் கிராமப்புற வழித்தடங்களில், நீண்ட காலமாக மாநில போக்குவரத்து சேவைகளுக்குத் துணையாக இருந்து வருகிறது. சிறு தொழில்முனைவோரால் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பழுது பார்ப்பவர்கள் மற்றும் பிற துணைப் பணியாளர்களுக்கும் ஆதரவளிக்கின்றன. பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. கே.எஸ்.ஆர்.டி.சி (KSRTC) மூலம் மட்டுமே வழங்கப்படும் இலவசப் பயணம், இந்தச் சூழலமைப்பின் அடிப்படையையே மாற்றுகிறது. நுகர்வோர் தேர்ந்தெடுப்பதில் விலை என்பது ஒரு சக்திவாய்ந்த தீர்மானிக்கும் காரணி என்று பொருளாதாரம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. ஒரு நிறுவனம் ஒரு சேவையை இலவசமாக வழங்கும்போது, மற்றொரு நிறுவனம் அதற்குக் கட்டணம் வசூலித்தால், எதிர்பார்த்தபடியே பயணிகள் மலிவான/ இலவச சேவையை நோக்கிச் செல்கின்றனர். இது திறமை அல்லது சேவைத் தரத்தின் அடிப்படையிலான போட்டி அல்ல; விலைகளில் உள்ள மாற்றங்கள் அரசின் கொள்கையால் உருவாக்கப்பட்டதாகும். இதன் விளைவால் ஏற்பட்ட சந்தைச் சிதைவு ஒரு உன்னதமான உதாரணமாகும். இதனால் தனியார் பேருந்து நிறுவனங்கள் கணிசமான வருவாய் இழப்புகளைச் சந்தித்துள்ளன, இது மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கும் போக்குவரத்து அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளுக்கும் வழிவகுத்தது. அவர்களின் கவலை, பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பயணத்திற்கு எதிரானது அல்ல, மாறாக அனைவருக்கும் சமமான போட்டிகள் இல்லாததே ஆகும். தாங்கள் இழக்கும் பயணிகளுக்குப் பதிலாக எந்த இழப்பீடும் வழங்காமல், கட்டணமில்லா சேவைக்கு எதிராகப் போட்டியிடுமாறு அவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இதனால் வியாபார இலாபத்தைத் தாண்டி மற்ற சேவை பயனாளிகள் மீதும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கேரளத்தின் தனியார் பேருந்துத் துறை ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது. தொடர்ச்சியாக வருவாய் இழப்பு ஏற்பட்டால், தனியார் பேருந்து நிறுவனங்கள் அவைகளின் சேவைகளைக் குறைக்கவோ, வழித்தடங்களை விலக்கிக்கொள்ளவோ, பராமரிப்பை ஒத்திவைக்கவோ அல்லது சந்தையை விட்டே வெளியேறவோ நிர்பந்திக்கப் படலாம். ஆகவே, ஒரு பிரிவினரின் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கொள்கை, மற்றொரு பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது. கே.எஸ்.ஆர்.டி.சி-யிலும் இதற்கான பாதிப்புகள் தெரிகின்றன. பயணிகள் அரசுப் பேருந்துகளை அதிகம் நாடுவதால், பல வழித்தடங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்தப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு பெண்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை; பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய முடிவதால் குடும்பங்கள் ஒன்றாகப் பயணிக்கின்றன, இதனால் அவர்களுடன் வரும் ஆண்களும் அதே பேருந்துகளில் பயணிக்கின்றனர். பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பது, நீண்ட காத்திருப்பு நேரம், குறைந்த வசதி, பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் ஏற்கனவே அதிக பயன்பாட்டில் உள்ள பேருந்துத் தொகுப்பின் (fleet) தேய்மானம் அதிகரிக்கும் சிக்கல்களை உருவாக்குகிறது. இது மேலும் ஒரு நிதிச் சிக்கலை உருவாக்குகிறது. தேவை அதிகரித்தால், அரசு கே.எஸ்.ஆர்.டி.சி-யின் பேருந்து எண்ணிக்கை, பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டு வசதிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும். கே.எஸ்.ஆர்.டி.சி-க்கு வரலாற்று ரீதியாகவே கணிசமான அரசு உதவி தேவைப்படுகிறது; இந்நிலையில், மீண்டும் மீண்டும் ஏற்படும் இலவசப் பயணச் சுமையைச் சேர்ப்பது அரசுக்கு நிதி நெருக்கடியை அதிகரிக்கக்கூடும். எனவே, ஒரு நலத்திட்டம் இத்தகைய சுழற்சியை உருவாக்கலாம்: இலவசப் பயணம் தேவையை அதிகரிக்கிறது, தேவை கூட்டத்தை உருவாக்குகிறது, கூட்டம் கூடுதல் வசதிகளைத் தேவைப்படுத்துகிறது, கூடுதல் வசதிகள் நிதித் தேவையை அதிகரிக்கின்றன. ஆகவே, பெண்களுக்குக் குறைந்த செலவில் அல்லது இலவச பயண வசதி தேவைதானா என்பது கேள்வியல்ல; நிச்சயமாக அவர்களுக்கு அது தேவை. கேள்வி என்னவென்றால், அரசுகள் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிறுவனத்திற்கு மட்டும் மானியம் வழங்க வேண்டுமா அல்லது பயணிகளுக்கு மானியம் வழங்க வேண்டுமா என்பதுதான். கே.எஸ்.ஆர்.டி.சி மற்றும் உரிமம் பெற்ற தனியார் பேருந்துகள் என இரண்டையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் பொருந்தும் 'பூஜ்ஜியக் கட்டண' (zero-ticket) முறையை கேரளம் பரிசீலிக்கலாம். எந்த நிறுவனத்தின் பேருந்தாக இருந்தாலும் பெண்களுக்கு இலவசப் பயணச் சீட்டு வழங்கப்படும்; அதேவேளையில், சரிபார்க்கப்பட்ட பயணிகள் தரவுகளின் அடிப்படையில் அரசு அந்த நிறுவனங்களுக்குத் தொகையை ஈடுசெய்ய வேண்டும். இது போக்குவரத்து சந்தையில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதோடு, சமூக நல நோக்கத்தையும் பாதுகாக்கும். கட்டணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், கிடைக்கும் பேருந்து அரசோ அல்லது தனியாரோ, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் பயணிகள் தொடர்ந்து பேருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம். தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டப்படாமல் இயங்க முடியும், இருக்கும் போக்குவரத்து வசதிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படும், மேலும் கொள்கை முடிவால் ஏற்படும் கூடுதல் பயணத் தேவையைச் சமாளிக்க அரசு கே.எஸ்.ஆர்.டி.சி-யை விரிவுபடுத்த வேண்டியிருக்காது. இந்தியா முழுவதும் இலவசப் போக்குவரத்துத் திட்டங்கள் பரவி வரும் நிலையில், கேரளம் ஒரு முக்கிய பாடத்தை நம் முன்வைக்கிறது: நலத்திட்டத்தின் முக்கிய நோக்கத்தைப் போலவே, அதைக் கொடுக்கும் முறையும் முக்கியமானது. அனைவரையும் உள்ளடக்கிய பயண வசதி என்பது, ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்குத் துணையாக இருக்கும் போக்குவரத்து அமைப்பைச் சிதைப்பதன் மூலம் கிடைக்கப்பெறுவதாக இருக்கக்கூடாது. அரசின் ஒரு சிறந்த கொள்கை என்பது, மானியம் யாருக்குக் கிடைக்கிறது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அந்த மானியம் எந்தச் சந்தை வழியாக வழங்கப்படுகிறதோ அந்தச் சந்தையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கேரளத்தின் நோக்கம் சிறப்பானது. அடுத்தகட்டமாக, மானியம் பேருந்து நிறுவனத்தைச் சென்றடைவதற்குப் பதிலாகப் பயணியைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். கட்டுரையாளர் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இலவசப் பேருந்துப் பயணத்தின் அதிக விலை: கேரளத்தில் இருந்து ஒரு பாடம்
PulseNews சுருக்கம்

கேரளத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயண வசதியை அறிமுகப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரிய முயற்சியாகும். போக்குவரத்து என்பது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது மட்டுமல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொதுவாழ்வில் பெண்கள் பங்கேற்பதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமைகிறது.

குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, இத்தகைய இலவசப் பயண வசதி அவர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பங்கேற்பு மேம்படும் என்பது இதன் நோக்கமாகும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology