உளவு சாட்டிலைட்டுகளுக்கு செக் மேட்: பொக்ரான் காலத்து கதையை முடிவுக்கு கொண்டு வரும் இந்திய ஸ்டார்ட்அப்
ஒரு காலத்தில் இந்தியா அணு ஆயுத சோதனைகளை நடத்தும்போது, வெளிநாடுகளின் உளவு செயற்கைக்கோள்களின் பார்வையில் சிக்காமல் இருப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. இந்தியாவைச் சுற்றி விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் என்ன செய்கின்றன, அவை எப்போது இந்தியாவின் மீது கடந்து செல்கின்றன என்பதை அறியும் திறனை இந்தியாவே உருவாக்கி வருகிறது. இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பது பெங்களூரைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான டிகந்தரா (Digantara). அந்த நிறுவனம் உருவாக்கி வரும் மொசைக் (MOSAIC) என்ற புதிய விண்வெளி கண்காணிப்பு அமைப்பு, இந்தியாவுக்கு மேலே நகரும் செயற்கைக்கோள்கள், விண்வெளிக் குப்பைகள் உள்ளிட்ட பொருட்களை தானாகக் கண்டறிந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் தொடங்கிய விண்வெளி கண்காணிப்பு லடாக்கின் குளிரான இரவு நேரத்தில் வானத்தை நோக்கி ஒரு சிறிய கருவி அமைதியாக செயல்படுகிறது. குறிப்பிட்ட செயற்கைக்கோளைத் தேட வேண்டும் என்று அதற்கு முன்கூட்டியே சொல்ல வேண்டியதில்லை. வானத்தின் ஒரு பகுதியை அது தொடர்ந்து கண்காணிக்கும். நட்சத்திரங்கள், செயற்கைக்கோள்கள், விண்வெளிக் குப்பைகள் என அதன் பார்வைக்குள் நகரும் பொருட்களை கண்டறிந்து, அவற்றைத் தனித்தனியாக அடையாளம் காணும். இதன் மூலம், ‘இந்தியாவுக்கு மேலே இப்போது எந்த செயற்கைக்கோள் இருக்கிறது?’, ‘அது மீண்டும் எப்போது வரும்?’, ‘அந்த செயற்கைக்கோள் எந்தப் பகுதியை கண்காணிக்கிறது?’ போன்ற கேள்விகளுக்கு பதில் தேட முடியும். போக்ரானில் இருந்து விண்வெளி கண்காணிப்பு வரை இந்தியாவுக்கு விண்வெளி கண்காணிப்பின் முக்கியத்துவம் புதிதல்ல. போக்ரான் அணு ஆயுத சோதனைகளுக்கான தயாரிப்பின்போது, வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள்கள் இந்தியாவின் நடவடிக்கைகளை கவனிக்காமல் இருப்பது முக்கியமானதாக இருந்தது. இன்று அந்த நிலை தலைகீழாக மாறி வருகிறது. ஒரு நாட்டின் முக்கியமான ராணுவ அல்லது உள்கட்டமைப்பு பகுதியை ஒரு குறிப்பிட்ட செயற்கைக்கோள் மீண்டும் மீண்டும் கடந்து சென்றால், அந்த செயற்கைக்கோளின் இயக்கத்தை கண்காணிப்பதன் மூலம் அதன் கண்காணிப்பு முறையைப் பற்றி ஒரு அளவுக்கு புரிந்துகொள்ள முடியும். ஒரு செயற்கைக்கோள் எப்போது குறிப்பிட்ட இடத்தின் மீது வரும் என்பதை தெரிந்துகொள்வது, அந்தப் பகுதி எப்போது விண்வெளியில் இருந்து கண்காணிக்கப்படலாம் என்பதை கணிக்க உதவும். மொசைக் எப்படி செயல்படும்? பொதுவாக விண்வெளி கண்காணிப்பு கருவிகள், எந்த செயற்கைக்கோளை கண்காணிக்க வேண்டும் என்பது முன்கூட்டியே தெரிந்த பிறகு, அந்தப் பொருள் இருக்கும் இடத்தை கணித்து அதை நோக்கி திருப்பப்படும். ஆனால் மொசைக் -ன் அணுகுமுறை வேறுபட்டது. வானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி கருவியை அமைத்துவிட்டால், அந்தப் பகுதியில் நகரும் பொருட்களை அது தானாகவே தேடும். செயற்கைக்கோள் எது, நட்சத்திரம் எது, விண்வெளிக் குப்பை எது என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம் மூலம் பிரித்தறிய முடியும். அதாவது, ஒவ்வொரு பொருளையும் மனிதர்கள் உட்கார்ந்து தனித்தனியாக தேட வேண்டிய அவசியம் குறைகிறது. ஒரு மொசைக் அமைப்பு ஒரு இரவு நேரத்தில் சுமார் 400 முதல் 500 தனித்துவமான பொருட்கள் குறித்த தகவல்களை சேகரிக்க முடியும் என Digantara தெரிவிக்கிறது. பல இடங்களில் இதுபோன்ற கருவிகளை அமைத்தால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொருட்களை கண்காணிக்கும் திறனை உருவாக்க முடியும். செயற்கைக்கோள்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும். அதனால், அவை எங்கு செல்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் சுற்றுப்பாதையை புதுப்பிக்க வேண்டும். அப்போதுதான் அந்த செயற்கைக்கோள் எதிர்காலத்தில் எப்போது, எங்கு தோன்றும் என்பதை கணிக்க முடியும். இதுதான் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வின் (Space Situational Awareness (SSA) முக்கிய நோக்கம். இந்தியாவில் மட்டும் கண்காணித்தால் போதுமா? விண்வெளி கண்காணிப்பில் இன்னொரு முக்கிய சவாலும் இருக்கிறது. இந்தியாவுக்கு மேலே செல்லும் ஒரு செயற்கைக்கோள், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா அல்லது பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மேலே இருந்திருக்கலாம். எனவே, உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஒரே செயற்கைக்கோளை கண்காணித்தால்தான் அதன் இயக்கத்தை இன்னும் துல்லியமாக புரிந்துகொள்ள முடியும். இதற்காக டிகந்தரா (Digantara) தனது கண்காணிப்பு வலையமைப்பை இந்தியாவுடன் சேர்த்து நமீபியா, சிலி, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ உள்ளிட்ட இடங்களிலும் அமைத்து வருகிறது. மேலும் ஹவாய் பகுதியில் அமைப்பை நிறுவும் திட்டமும் உள்ளது. தெளிவான வானம் மற்றும் குறைந்த ஒளி மாசு உள்ள இடங்கள் இதற்காக தேர்வு செய்யப்படுகின்றன. அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க வேண்டிய நிலை குறையும் உலகளாவிய விண்வெளி கண்காணிப்பு தகவல்களில் அமெரிக்காவின் பங்கு மிகப்பெரியது. பல நாடுகள் பல்வேறு அளவில் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களுக்கு ஒரு வெளிநாட்டை முழுமையாக நம்பியிருப்பதில் சில வரம்புகள் உள்ளன. இந்தியாவுக்குச் சொந்தமான விண்வெளி கண்காணிப்பு திறன் இருந்தால், இந்தியாவே தகவல்களை சேகரிக்க முடியும். அதே நேரத்தில், மற்ற நாடுகளுடன் விண்வெளி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடியும். விண்வெளிக் குப்பைகளை கண்காணிப்பதற்கும் பயன்படும் மொசைக்-ன் பயன்பாடு உளவு செயற்கைக்கோள்களை கண்காணிப்பதில் மட்டும் முடிவதில்லை. விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன. அவற்றுடன் விண்வெளிக் குப்பைகளும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவை ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். தொலைத்தொடர்பு, வானிலை கணிப்பு, வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள்களின் பாதுகாப்புக்கும் விண்வெளி கண்காணிப்பு அவசியமாகிறது. மனிதர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை மொசைக் அமைப்பு தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி, கணினி செயலாக்க வசதி மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இதில் உள்ளன. கண்காணிப்பு தகவல்களை சேகரித்த பிறகு, அவற்றை சில நிமிடங்களிலேயே அனுப்பும் திறனும் இதற்கு உள்ளது. இதில் ‘Lost in Space’ எனப்படும் மற்றொரு தொழில்நுட்பமும் உள்ளது. நட்சத்திரங்களின் அமைப்பை பயன்படுத்தி, தனது இருப்பிடத்தை இந்த அமைப்பு தானாகவே கண்டறிய முடியும். இதற்கு முன்கூட்டியே புவியியல் ஆயத்தொலைவுகளை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்காலத்தில், GPS கிடைக்காத சூழ்நிலையில் அல்லது GPS சிக்னல் தடுக்கப்பட்டால், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிகாட்டும் தொழில்நுட்பத்துக்கும் இது பயன்படக்கூடும். செயற்கைக் கோளின் கேமராவை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும் முயற்சி டிகந்தரா மேலும் ஒரு புதிய திறனையும் ஆராய்ந்து வருகிறது. ஒரு கண்காணிப்பு செயற்கைக்கோள் முக்கியமான இடத்தை படம் எடுக்கும்போது, அதன் ஒளியியல் கேமராவை லேசர் மூலம் தற்காலிகமாக பாதிக்கும் தொழில்நுட்பம் குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இதனை செயற்கைக்கோளை அழிக்கும் ஆயுதமாக அல்லாமல், தற்காலிகமாக அதன் கண்காணிப்பு திறனை பாதிக்கும் ‘Soft Kill’ முறையாக நிறுவனம் குறிப்பிடுகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பில் புதிய அத்தியாயம் பூமியைச் சுற்றி தற்போது 15,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விண்வெளி முன்பைவிட அதிகமாக நெரிசல் கொண்ட பகுதியாக மாறியுள்ளது. இந்த சூழலில், இந்தியா செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றி விண்வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. போக்ரான் காலத்தில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் கண்காணிப்பில் இருந்து இந்தியா தன்னை மறைத்துக்கொள்ள முயன்றது. இன்று, அதே விண்வெளியை இந்தியாவே கண்காணிக்கும் திறனை வளர்த்து வருகிறது. மொசைக் போன்ற முயற்சிகள் மூலம், இந்தியாவின் முக்கியமான பகுதிகளுக்கு மேலே எந்தெந்த செயற்கைக்கோள்கள் செல்கின்றன, அவை எப்போது திரும்பி வருகின்றன, விண்வெளியில் என்னென்ன பொருட்கள் நகர்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் திறன் அதிகரிக்கலாம். விண்வெளியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதே, இனி இந்தியாவின் பாதுகாப்பில் ஒரு முக்கியமான பகுதியாக மாறப்போகிறது.

இந்தியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்ட காலத்தில், வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள்களின் கண்காணிப்பில் சிக்காமல் இருப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலை முற்றிலும் மாறி வருகிறது.
இந்தியாவின் வான்வெளியைக் கண்காணிக்கும் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் எப்போது, எந்தப் பகுதியில் பயணிக்கின்றன என்பதைத் துல்லியமாக அறியும் தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த டிகந்தரா (Digantara) என்ற விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த முக்கிய முயற்சியில் முன்னிலை வகித்து வருகிறது.