டைட்டன் நிலவின் மீத்தேன் கடல்கள், மர்மக் குகைகள்: நாசா அனுப்பும் விநோத 'பந்து' வடிவ ரோபோக்கள்
சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் அமைந்துள்ள மறைக்கப்பட்ட நிலத்தடி குகைகளை ஆராய்வதற்கான எதிர்காலத் திட்டம் ஒன்றிற்கு நாசா நிதி உதவி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 'ஸ்பார்க் ஏரோபோட்கள்' (SPARK Aerobots) எனப்படும் சிறிய, கோள வடிவிலான பறக்கும் ரோபோக்கள் உருவாக்கப்பட உள்ளன. இவை எதிர்காலத்தில் டைட்டனின் குகைகள் மற்றும் நிலத்தடி அமைப்புகளுக்குள் பறந்து சென்று ஆய்வு செய்யக்கூடும். நாசாவின் 'புதுமையான மேம்பட்ட கருத்துக்கள்' (NIAC - Innovative Advanced Concepts) திட்டத்தின் மூலம் இத்திட்டம் முதற்கட்ட நிதியைப் பெற்றுள்ளது. இது ஆரம்பக் கட்ட ஆய்வு மட்டுமே தவிர, நாசாவால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விண்வெளித் திட்டம் அல்ல. இத்திட்டத்திற்கு 'ஸ்பார்க்' (SPARK - Solid-state Propulsion for Autonomous Reconnaissance of Karst) என்று பெயரிடப்பட்டுள்ளது. மனோவாவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் ட்ரூ என்பவர் இத்திட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். நாசா வழங்கியுள்ள இந்த நிதி உதவியானது 9 மாத கால ஆரம்பக்கட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும். இதன் மூலம், டைட்டனின் கடுமையான சூழலில் இந்தத் தொழில்நுட்பம் செயல்படுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்வர். டைட்டன் நிலவானது அடர்த்தியான வளிமண்டலத்தையும் சிக்கலான நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. அங்கு மீத்தேன் மற்றும் ஈத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன்களால் உருவான ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்கள் உள்ளன. மேலும், அங்குள்ள விநோதமான நிலப்பரப்பில் புதைகுழிகள் மற்றும் குகைகள் போன்ற அமைப்புகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சாதாரண ரோவர்களால் இதுபோன்ற இடங்களைச் சென்றடைவது மிகவும் கடினம். இதற்கு மாற்றாக 'ஸ்பார்க்' தொழில்நுட்பம் பயன்படும். ஒரு பெரிய விண்கலத்திலிருந்து ஏவப்படும் இந்த சிறிய பறக்கும் ரோபோக்கள், நிலத்தடி இடைவெளிகளுக்குள் நுழைந்து பாதையைக் கண்டறிந்து ஆய்வு செய்ய இயலும். ஸ்பார்க் ரோபோக்கள் எவ்வாறு பறக்கும்? இந்த ரோபோக்கள் 'எலக்ட்ரோஹைட்ரோடைனமிக் உந்துவிசை' (Electrohydrodynamic Propulsion) எனப்படும் அயன் உந்துவிசை முறையைப் பயன்படுத்தி இயங்கும். இதில் மின்சாரப் புலங்களைப் பயன்படுத்தி மின்னூட்டம் பெற்ற துகள்களை நகர்த்துவதன் மூலம் உந்துவிசை உருவாக்கப்படுகிறது. இதற்கு வழக்கமான சுழலும் இறக்கை தேவையில்லை. இத்தொழில்நுட்பம் டைட்டனின் வளிமண்டல சூழலில் ரோபோக்கள் எளிதாகத் திரும்பிப் பறக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும், இதன் கோள வடிவமைப்பு கடினமான குறுகிய இடைவெளிகளிலும் தடையின்றி நகர உதவும். டிராகன்ஃபிளை (Dragonfly) திட்டத்துடன் இணைக்கப்படுமா? நாசாவின் டிராகன்ஃபிளை விண்கலத் திட்டம், சுழலிறக்கைத் திறன் கொண்ட ஊர்தி மூலம் டைட்டனை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2028-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இருப்பினும், ஸ்பார்க் திட்டம் தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளதால், டிராகன்ஃபிளை திட்டத்திற்குள் இது முழுமை பெற்று தயாராகுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனத் திட்டத் தலைவர் டேனியல் ட்ரூ தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட நகர்வு என்ன? தற்போதைய நிதியுதவி திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கு மட்டுமே போதுமானது. முதலில் இந்தத் தொழில்நுட்பம் நடைமுறையில் சாத்தியமானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்தகட்ட நிதியுதவி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பரிசீலிக்கப்படும். அதேவேளையில், NIAC திட்டங்கள் அனைத்தும் ஆரம்பக்கட்ட தொழில்நுட்பக் கருத்துருக்கள் மட்டுமே என்றும், அவை நாசாவின் அதிகாரப்பூர்வ விண்வெளித் திட்டங்கள் அல்ல என்றும் நாசா தெளிவுபடுத்தியுள்ளது.

சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் உள்ள மர்மமான நிலத்தடி குகைகளை ஆய்வு செய்ய நாசா புதிய திட்டத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. இதற்காக 'ஸ்பார்க் ஏரோபோட்கள்' (SPARK Aerobots) என்று அழைக்கப்படும் சிறிய, கோள வடிவிலான பறக்கும் ரோபோக்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரோபோக்கள் எதிர்காலத்தில் டைட்டனின் வளிமண்டலம் மற்றும் நிலத்தடி குகைகளுக்குள் பறந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். நாசாவின் 'புதுமையான மேம்பட்ட கருத்துக்கள்' (NIAC) திட்டத்தின் கீழ் இந்த ஆய்வு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.