செவ்வாயில் ராட்சத சிலந்திகளா? சிவப்பு கோளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் விசித்திர நிகழ்வு
செவ்வாய் கிரகம் வெறும் பாறைகளும் தூசியும் நிறைந்த கோள் மட்டுமல்ல; அது பல இயற்கை அதிசயங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. பூமியில் நாம் நீரூற்றுகளைப் பார்த்திருப்போம், ஆனால் செவ்வாயில் 'வாயு ஊற்றுகள்' சீறிப்பாய்கின்றன. அவை உருவாக்கும் நிலப்பரப்போ பார்ப்பதற்குப் பிரம்மாண்ட சிலந்திகள் போலக் காட்சியளிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் நீண்ட குளிர்காலத்தில், வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு உறைந்து, துருவ பகுதிகளில் தடிமனான பனிப் போர்வை போல படிகிறது. வசந்த காலம் தொடங்கியதும், சூரியனின் கதிர்கள் இந்தப் பனிக்கட்டியை ஊடுருவிச் சென்று அதன் அடிப்பகுதியை மெதுவாக வெப்பப்படுத்துகின்றன. அங்கேதான் ஒரு விசித்திரம் நடக்கிறது. பனிக்கட்டிக்கடியில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடு நேரடியாக வாயுவாக மாறி, வெளியேற வழியில்லாமல் பெரும் அழுத்தத்துடன் சிக்கிக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்க முடியாமல், மேலிருக்கும் பனி அடுக்கு "படார்" என்று வெடிக்கிறது. அப்போது, அடியில் தேங்கியிருந்த வாயுவும், கரும் துகள்களும் எரிமலை போலச் சீறிக்கொண்டு வெளியே வருகின்றன. இந்த வாயு ஊற்றுகள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பாய்கின்றன. இவை சுமார் 1 கி.மீ விட்டம் வரை கரும் துகள்களை விசிறி அடிக்கின்றன. இந்த வாயு வெடிப்புகள் முடிந்து பார்த்தால், அந்த இடம் பார்ப்பதற்கு ராட்சத சிலந்தியின் கால்களைப் போலக் காட்சியளிக்கும். பனிக்கடியில் இருக்கும் விரிசல்கள் வழியாக வாயு தப்பிச் செல்லும்போது, அது தரையில் நீண்ட கோடுகளை உருவாக்குகிறது. நாசாவின் ஆய்வாளர் லாரன் மெக்கியோன் இதனை விவரிக்கும்போது, இந்தச் சிலந்தி வடிவங்கள் தனித்துவமான அழகு கொண்டவை. இவை செவ்வாயின் நிலப்பரப்பு எப்படி பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுகிறது என்பதை நமக்கு உணர்த்துகின்றன என்கிறார். பூமியில் நிலப்பரப்பு மாறுவதற்குத் தண்ணீர், காற்று மற்றும் நிலத்தட்டுகள் நகர்வதுதான் முக்கியக் காரணம். ஆனால் செவ்வாயில் திரவ நீர் கிடையாது. அங்கே வாயுதான் சிற்பியாகச் செயல்பட்டு நிலப்பரப்பைச் செதுக்குகிறது. பனிக்கட்டியை வாயுவே தூக்கி எறிந்து, மணல் துகள்களை வான்நோக்கிப் பாய்ச்சும் இந்த விந்தை பூமியில் எங்குமே நடக்காத ஒன்று. செவ்வாய் கிரகம் உயிரற்றதாகத் தோன்றினாலும், அங்கே ஒவ்வொரு வசந்த காலத்திலும் இத்தகைய வாயு ஊற்றுகள் வெடித்துச் சிதறி புதிய வடிவங்களை உருவாக்கி, அந்தச் சிவப்புக் கோளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

செவ்வாய் கிரகம் வெறும் பாறைகளும் தூசியும் கொண்ட கோளாக மட்டுமின்றி, பல்வேறு இயற்கை அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பூமியில் இருப்பது போன்ற நீரூற்றுகளுக்குப் பதிலாக, செவ்வாயில் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவால் ஆன ஊற்றுகள் சீறிப்பாய்கின்றன.
நீண்ட குளிர்காலத்தின் போது துருவப் பகுதிகளில் பனிப் போர்வையாக உறையும் கார்பன்-டை-ஆக்சைடு, வசந்த காலத்தின் சூரிய கதிர்களால் மீண்டும் வாயுவாக மாறுகிறது. இந்த நிகழ்வினால் உருவாகும் நிலப்பரப்புகள், பார்ப்பதற்கு ராட்சத சிலந்திகள் போன்ற தோற்றத்தை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்துகின்றன.