350 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருவான ரகசியம்: பூமியின் பழங்கால கார்பன் மாற்றத்தின் பின்னணி என்ன?
சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பிரமாண்ட சுற்றுச்சூழல் பேரழிவு ஒன்று ஏற்பட்டு கார்பன் சுழற்சியே தலைகீழாக மாறியது என்ற பல தசாப்த கால நம்பிக்கையை, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் புதிய ஆய்வு முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. 'ஜியாலஜி' (Geology) ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, பண்டைய பாறைகளில் சிக்கியிருந்த மிக நுண்ணிய வாயுக்களை ஆய்வு செய்து, பலரும் நினைத்ததுபோல இது உலகளாவிய பேரழிவு அல்ல; குறிப்பிட்ட ஒருபகுதியின் பூமிக்கு அடியில் நிகழ்ந்த புவியியல் மாற்றம் மட்டுமே என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. பூமியின் வரலாற்றில் 250 கோடி முதல் 200 கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் 'பெரும் ஆக்சிஜனேற்ற நிகழ்வு' (Great Oxidation Event) என்று அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் மெல்லக் குவியத் தொடங்கி, கடல்களையும் பாறைகளையும் மாற்றி, பிற்காலத்தில் பூமியில் சிக்கலான உயிரினங்கள் உருவாவதற்கான அடித்தளத்தை அமைத்தது. அப்போது பெருமளவிலான நுண்ணுயிரிகள் கடல் படிவுகளில் புதைந்து போயின. ரஷ்யாவின் சாவோனேகா மற்றும் ஆப்பிரிக்க நாடான காபோனின் பிரான்ஸ்வில்லியன் படுகைகளில் உள்ள பாறைகளில் இந்த காலகட்டத்தை சேர்ந்த அசாதாரண கார்பன் ஐசோடோப் மாற்றங்கள் பதிவாகியிருந்தன. இதனை 'ஷுங்கா–பிரான்ஸ்வில்லியன் நிகழ்வு' (Shunga–Francevillian event) என்று குறிப்பிட்ட விஞ்ஞானிகள், பூமி தழுவிய அளவில் சுற்றுச்சூழல் பெரும் சீர்குலைவைச் சந்தித்ததன் அடையாளமாகவே இதனைப் பல ஆண்டுகளாகக் கருதி வந்தனர். ஆனால், கால்டெக் விஞ்ஞானிகள் இந்த பாறைகளுக்குள் நுண்ணிய தாதுப் பைகளில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சிறைபட்டுக் கிடந்த பழங்கால வாயுக்களைத் துருவித் துருவி ஆராய்ந்தபோது முற்றிலும் புதிய கதை ஒன்று வெளியானது. நிலத்தடி எண்ணெயும் கரிமப் பொருட்களும் அதீத வெப்பத்தால் மாறும்போது உருவாகும் 'பைரோபிட்டுமென்' (Pyrobitumen) நிறைந்த பாறை மாதிரிகளை நார்வே புவியியல் ஆய்வு மையம் பாதுகாத்து வைத்திருந்தது. இந்த மாதிரிகளில் உள்ள வாயு மூலக்கூறுகள் ஆய்வு செய்தபோது, கடலுக்கு அடியில் கரிமப் படிவுகளுக்குள் எரிமலைக் குழம்பு (Magma) ஊடுருவிப் பாய்ந்தது தெரியவந்தது. மாக்மாவின் அதீத வெப்பம் புதைந்து இருந்த கரிமப் பொருட்களை மீத்தேன் மற்றும் புரொப்பேன் வாயுக்களாக மாற்றியது. இந்த வாயுக்கள் மேல்நோக்கி நகர்ந்து, மீத்தேனை உணவாக உட்கொள்ளும் நுண்ணுயிரிகள் வாழ்ந்த பகுதிகளை அடைந்தன. நுண்ணுயிரிகளின் இந்த தீவிர செயல்பாடே பாறைகளில் அசாதாரண லேசான கார்பன் ஐசோடோப் தடயத்தை உருவாக்கியுள்ளது. இந்த புவியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளின் சங்கிலித் தொடரே பாறைகளில் பதிவான விநோதமான கார்பன் சிக்னலுக்கு காரணம் என ஆய்வின் முதன்மை ஆசிரியரான நிவேதிதா தியாகராஜன் விளக்கியுள்ளார். மேலும் இந்த அமைப்பில் மாக்மாவுக்கு அருகில் 350°C வரையிலும், மேற்பகுதியில் 72°C வரையிலும் வெப்பநிலை நிலவியதும் கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யப் பாறைகளில் கிடைத்த இந்த புதிய ஆதாரம், அதேபோன்ற கார்பன் அடையாளம் கொண்ட ஆப்பிரிக்க நாடான காபோன் பாறைகள் மீதும் விஞ்ஞானிகளின் கவனத்தைத் திருப்பியுள்ளது. சர்வதேச கண்ட ஆய்வுத் திட்டத்தின் (ICDP) கீழ் காபோன் மாதிரிகளையும் ஆராய்ந்து ரஷ்ய வரலாற்றுடன் ஒப்பிடும் பணிகள் நடைபெற உள்ளன. அங்கும் இதே போன்ற உள்ளூர் புவியியல் மாற்றங்கள் கண்டறியப்பட்டால், 200 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வரலாற்று நிகழ்வை உலகம் பார்க்கும் பார்வையே முற்றிலும் மாறிவிடும்.

சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கார்பன் சுழற்சியில் பெரும் மாற்றம் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட கொள்கையை கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் புதிய ஆய்வு மறுத்துள்ளது. 'ஜியாலஜி' ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, பண்டைய பாறைகளில் இருந்த நுண்ணிய வாயுக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாற்றத்திற்கு 350 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக இருந்துள்ளது. இது உலகளாவிய பேரழிவு அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கு அடியில் நிகழ்ந்த புவியியல் மாற்றமே என்று இந்த ஆய்வு ஆதாரங்களுடன் விளக்குகிறது.