PulseNews
தொழில்நுட்பம்

மோட்டார், காந்தம் தேவையில்ல: ஒலி அலைகள் மூலம் இயங்கும் குட்டி ட்ரோன்கள்; சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள், ஒலி அலைகளை பயன்படுத்தி மிகச்சிறிய அளவிலான நுண்ணிய ட்ரோன்களை (Tiny Drones) இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். லாசானில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (EPFL) கல்வி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒலி அலைகளின் உதவியுடன் காற்றில் பறக்கவும், தண்ணீரில் மிதந்து செல்லவும் கூடிய சிறிய ரக ட்ரோன்களை உருவாக்கியுள்ளதாக 'சுவிஸ் இன்ஃபோ' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நுண்ணிய வாகனங்களில் 'குழிவுகள்' எனப்படும் பிரத்யேக உள்ளீடற்ற அமைப்புகளைப் பொருத்துவதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த உள்ளீடற்ற குழிவுகள், ஒலி அலைகளை உந்துவிசையாக (Propulsion) மாற்றும் திறன் கொண்டவை. உருவாகும் உந்துவிசையின் அளவு ஒலியின் அதிர்வெண்ணைப் (Frequency) பொறுத்து அமைகிறது. ஒலி அலைகள் உந்துவிசையாக மாறுவது எப்படி? EPFL-ன் 'மைக்ரோபயோரோபோடிக் சிஸ்டம்ஸ் லேபரேட்டரி' (MicroBS) ஆய்வகம், வட்ட வடிவம் அல்லது மணி வடிவிலான (Bell-shaped) குழிவுகளை உருவாக்கியது. ஒலி அலைகள் இந்தக் குழிவுகளுக்குள் இருக்கும் காற்றை அதிரச் செய்யும்போது, நகரும் காற்று ஒருமுகப்படுத்தப்பட்ட ஜெட் காற்றாக (Concentrated Jet) வெளியேற்றப்படுகிறது. ஆனால், குழிவுக்குள் வரும் காற்றோ பரவலாக உள்ளே நுழைகிறது. இந்த அழுத்த வேறுபாடே சிறிய ட்ரோன்களை முன்னோக்கி நகர்த்துவதற்கான உந்துவிசையை உருவாக்குகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் 'ஹெல்ம்ஹோல்ட்ஸ் ரெசொனன்ஸ்' (Helmholtz Resonance) என்ற அறிவியல் தத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு காலி பாட்டிலின் வாய் பகுதியில் லேசாகக் காற்றை ஊதும்போது, உள்ளே சிக்கியிருக்கும் காற்று அதிர்ந்து குறிப்பிட்ட ஒலியை எழுப்பும் நிகழ்வே இந்தத் தத்துவத்திற்கு எளிய உதாரணமாகும். ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள சிறிய மாதிரிப் படகுகளையும் உருவாக்கினர். இந்தப் படகுகளில் தலா ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்கும் வகையில் அதிகபட்சமாக மூன்று குழிவுகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒலிபெருக்கியில் இருந்து வெளியாகும் ஒலியின் அதிர்வெண்ணை மாற்றுவதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு குழிவுகளைச் செயல்படுத்த முடிந்தது. இதன் மூலம் படகுகளை வெவ்வேறு திசைகளில் திருப்ப முடிந்தது. வழியில் உள்ள தடைகளைத் தாண்டி பயணிக்க வைக்க முடிந்தது. திட்டமிடப்பட்ட பாதைகளில் தானாகவே இயங்கச் செய்ய முடிந்தது. இதேபோன்ற சோதனைகள் காற்றில் பறக்கும் சிறிய நுண்ணிய ட்ரோன்கள் மூலமாகவும் வெற்றிகரமாகச் செய்து பார்க்கப்பட்டன. இந்தச் சாதனங்களில் வழக்கமான மோட்டார்கள், கியர்கள் அல்லது காந்தப் பாகங்கள் எதுவும் இல்லாமல் உள்ளீடற்ற குழிவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், இவற்றை மிகக் குறைந்த எடையிலும் நுண்ணிய அளவிலும் உருவாக்க முடியும். எதிர்காலத்தில், நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரே சாதனத்திற்குள் ஒலிக்கு எதிர்வினையாற்றும் பல அமைப்புகளைப் பொருத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒலி அலைகள் மூலமாகப் பொருட்களைக் காற்றில் மிதக்க வைக்கும் சோதனைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவத்துறை முதல் நுண் அறிவியல் வரை பல துறைகளில் இந்த ஒலி அடிப்படையிலான ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மோட்டார், காந்தம் தேவையில்ல: ஒலி அலைகள் மூலம் இயங்கும் குட்டி ட்ரோன்கள்; சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு
PulseNews சுருக்கம்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒலி அலைகளைப் பயன்படுத்தி இயங்கும் புதிய வகை நுண் ரக ட்ரோன்களை உருவாக்கியுள்ளனர். லாசானில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியில், மோட்டார் அல்லது காந்தங்களின் உதவி இன்றி இந்த ட்ரோன்கள் செயல்படும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன்கள் காற்றில் பறக்கவும், தண்ணீரில் மிதந்து செல்லவும் கூடிய திறன் கொண்டவை. இவற்றில் 'குழிவுகள்' எனப்படும் பிரத்யேக உள்ளீடற்ற அமைப்புகள் மூலம் ஒலி அலைகளைக் கொண்டு இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று சுவிஸ் இன்ஃபோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology