டிஜிட்டல் கைது, நிதி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி: ஒருங்கிணைந்த சைபர் கமாண்ட் மையம் அமைப்பு - தமிழக அரசு
தொழில்நுட்ப ரீதியாக அதிகரித்து வரும் அதிநவீன சைபர் குற்றங்களை உடனடியாகக் கையாளும் வகையில், சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தை 'தமிழ்நாடு மாநில சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமாக' (TN-S4C) தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1930 உதவி எண் நிர்வகிப்பு, போலி சிம் கார்டு மற்றும் IMEI முடக்கம், 24 மணி நேர இணையக் கண்காணிப்பு மற்றும் வங்கிகளுடனான உடனடி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கியப் பணிகளை மேற்கொள்ள உள்ள இந்த மையத்திற்காக, 172 புதிய காவல் பணியிடங்களும், ரூ.8.88 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் 'டிஜிட்டல் கைது' உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்துறை சார்பில் ஜூலை 28 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை, ஆகஸ்ட் 12 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஆணையில் வெளியிடப்பட்டுள்ளது. அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இயங்கும் இந்த மையம், சைபர் குற்றப்பிரிவு டி.ஜி.பி / ஏ.டி.ஜி.பி-யின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிலும், மாநில காவல் தலைமை இயக்குநரின் (DGP) ஒட்டுமொத்த மேற்பார்வையிலும் இயங்கும். 24 மணி நேரமும் இயங்கும் மையத்தின் முக்கியப் பணிகள்: நிதி மோசடிகள் மீதான உடனடி நடவடிக்கை, சைபர் அச்சுறுத்தல் கண்காணிப்பு, சமூக வலைதள ரோந்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும். வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணைய சேவை வழங்கிகள், இந்திய கணினி அவசரக்கால செயல்பாட்டுக் குழு (CERT-In), இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் மற்றும் பிற முகமைகளுடன் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் செயல்படும். மாநிலங்களுக்கு இடையேயான அல்லது சர்வதேச அளவில் நடக்கும் சைபர் குற்றங்கள், ரான்சம்வேர் (Ransomware), கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்கள் மற்றும் பெருமளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும். மையத்தின் 6 முதன்மைப் பிரிவுகள்: மாநில சைபர் கமாண்ட் மையம் (SCCC): 1930 உதவி எண் கட்டுப்பாட்டு அறையை நிர்வகிக்கும்; e-Zero FIR-களை கண்காணிக்கும்; போலி சிம் மற்றும் போலி ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்களை முடக்கும்; இணைய உள்ளடக்கங்களை முடக்குதல், டார்க் வெப் கண்காணிப்பு மற்றும் இந்திய கணினி அவசரக்கால செயல்பாட்டுக் குழு (CEIR) போர்ட்டலின் மாநில முகமையாகச் செயல்படும். மாநில சைபர் குற்ற விசாரணை மையம் (SCCIC): ரூ. 1 லட்சத்திற்கு மேல் நிதி இழப்பு ஏற்படும் மின்-பூஜ்ய எஃப்.ஐ.ஆர் (e-Zero FIR) வழக்குகளுக்கான மின்-காவல் நிலையமாகச் செயல்படும். சைபர் அரங்கம்: பொதுமக்கள் விழிப்புணர்வு, காவலர்களுக்கான பயிற்சி, மாணவர் பயிற்சித் திட்டங்கள் மற்றும் ஹேக்கத்தான்களை நடத்தும். உயர்நிலை சைபர் தடயவியல் பிரிவு: மாநில சைபர் தடயவியல் ஆய்வகத்தை நிர்வகித்து, அதிநவீன தடயவியல் கருவிகளைப் பயன்படுத்த உதவும். நிர்வாகப் பிரிவு (Admin Division) சைபர் பாதுகாப்புப் பிரிவு (Cyber Security Division) பணியாளர்கள் நியமனம் மற்றும் நிதி ஒதுக்கீடு: இந்த மையத்தின் முதன்மைப் பணிகளுக்காக 5 மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 172 காவல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன (மாநில சைபர் கமாண்ட் மையத்திற்கு 76 பணியிடங்கள், மாநில சைபர் குற்ற விசாரணை மையத்திற்குக 91 பணியிடங்கள்). சைபர் அரங்கத்திற்கு 28 பணியாளர்களும், 25 அமைச்சகப் பணியாளர்களும் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட உள்ளனர். 1930 உதவி மையத்தை விரிவுபடுத்த 15 வெளிமுகமை இருக்கைகளுடன் 3 ஆண்டுகளுக்கு ரூ. 8.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளமாக ரூ. 50,000 படையில் ஒரு சட்ட ஆலோசகரும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார். லாக் பகுப்பாய்வு, டார்க் வெப் விசாரணை, மொபைல் தடயவியல் உள்ளிட்ட துறைகளில் 6 தனியார் நிபுணர்களைக் கொண்ட அரசு மற்றும் தனியார் நிபுணர்கள் அடங்கிய கூட்டு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சைபர் புகார்கள், கைதுகள், மீட்டெடுக்கப்பட்ட தொகைகள் மற்றும் தண்டனைகளைக் கண்காணிக்க மாநில அளவிலான சைபர் குற்ற டாஷ்போர்டு உருவாக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் 'மாநில சைபர் மோசடி தடுப்பு மையம்' அமைக்கப்பட உள்ள நிலையில், இந்த தமிழ்நாடு மாநில சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்வார்.

டிஜிட்டல் கைது மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட அதிநவீன சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த, சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் ‘தமிழ்நாடு மாநில சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமாக’ (TN-S4C) தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த மையத்தின் மூலம் 1930 உதவி எண் நிர்வகிப்பு, போலி சிம் மற்றும் IMEI முடக்கம், 24 மணி நேர இணையக் கண்காணிப்பு மற்றும் வங்கிகளுடனான உடனடி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 172 புதிய காவல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.