PulseNews
தொழில்நுட்பம்

14,000 கரடிகளை கொன்று குவித்த ஜப்பான்: மேலும் 8,800 கரடிகளை அகற்ற ஜப்பான் அரசு தீவிரம்; சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஜப்பானில் மனிதர்கள் மீது கரடிகள் தாக்கும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலத்தில் அந்நாட்டு அரசு 14,000-க்கும் மேற்பட்ட கரடிகளைக் கொன்று குவித்து (Cull) அழித்துள்ளது. இருப்பினும், இந்த மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையும் மனிதர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதோடு, வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் சுமார் 12,000 ஆசிய கறுப்புக் கரடிகளும், 2,000 பழுப்பு நிறக் கரடிகளும் கொல்லப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டோக்கியோவுக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களில் நிகழ்ந்த கரடித் தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்; 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே, நடப்பு நிதியாண்டிற்குள் மேலும் 8,800 கரடிகளை அகற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கரடிகளைக் கொல்வது மனித-கரடி மோதலுக்கான அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வாக அமையுமா என்ற காரசார விவாதத்தை இது தூண்டியுள்ளது. கடந்த ஆண்டில் கரடிகள் 230-க்கும் மேற்பட்ட மனிதர்களைத் தாக்கியதிலும், 13 பேர் உயிரிழந்ததிலும் இப்பிரச்னையின் தீவிரம் வெளிப்பட்டது. ஜப்பான் வரலாற்றிலே கரடித் தாக்குதலால் அதிக உயிரிழப்புகள் பதிவான ஆண்டாக அது அமைந்தது. இத்தாக்குதல்களில் பெரும்பாலானவை அகிதா, இவாத்தே போன்ற வடக்குப் பிராந்திய மலைப்பகுதி மாகாணங்களிலேயே நிகழ்ந்தன. வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக, கரடிகள் தங்களின் குளிர்கால உறக்கத்திற்கு முன் உணவாக உட்கொள்ளும் பீச் கொட்டைகள் மற்றும் ஓக் பழங்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவின்றித் தவித்த கரடிகள் காடுகளை விட்டு வெளியேறி மனித குடியிருப்புகளை நோக்கிப் படையெடுத்தன. இந்த விபரீத சூழல் காரணமாக, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகள் ஜப்பான் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தன. பல ஜப்பானிய கிராமங்கள் எச்சரிக்கைப் பலகைகளை வைத்தன; கரடிகளை விரட்ட ஒளிரும் சிவப்பு நிறக் கண்களைக் கொண்ட எந்திர ஓநாய் விவசாயிகள் நிறுவினர். கரடிகளால் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுகட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பிரத்யேக 'கரடி காப்பீடுகளை' அறிமுகப்படுத்தின. நாகானோ மாகாணத்தின் கருயிசாவா பகுதியில், 'பிக்கியோ' (Picchio) என்ற சூழலியல் அமைப்பு 1990-களில் இருந்தே மனிதர்களும் கரடிகளும் இணைந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கரடிகள் தென்படும்போது, அவற்றைத் துரத்தப் பயிற்சி பெற்ற 'கரேலியன் கரடி நாய்களை' (Karelian bear dogs) இந்நிறுவனம் பயன்படுத்துகிறது. தேவைப்படும் போது கரடிகளுக்கு மயக்க ஊசி செலுத்தி, காடுகளின் ஆழமான பகுதிகளுக்குக் கொண்டு சென்று விடுகிறது. பிக்கியோ அமைப்பின் கரடி பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஹிரூ தமதானி தெரிவிக்கையில், நடப்பு ஆண்டில் 19 கரடிகளை பிடித்துள்ளதாகவும், 130+ கரடி நடமாட்ட அழைப்புகளுக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் கூறினார். இது கடந்த ஆண்டை விட 20% அதிகம் என்றாலும், உண்மையான சேத சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். ஆசிய கறுப்புக் கரடிகள் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) "அழியும் விளிம்பில் உள்ள விலங்கு" (Vulnerable to extinction) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 60,000-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ள இவ்வகை கரடிகளில், சுமார் 42,000 கரடிகள் ஜப்பானில் வாழ்கின்றன. எனவே, இவற்றை மொத்தமாகக் கொன்று குவிப்பது அதன் இனத்திற்கே பேராபத்தை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இதே வேகத்தில் கரடிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டால், ஜப்பானில் அவை குறிப்பிட்ட பிராந்தியங்களில் முற்றிலுமாக அழியும் (Regional extinction) அபாயம் ஏற்படும். நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம் என்று 'குமமோரி' எனப்படும் ஜப்பான் கரடி மற்றும் வனச் சங்கத்தின் தலைவர் யுகோ முரோயா தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மாற்றங்களே விலங்குகளைக் குடியிருப்புப் பகுதிக்குத் தள்ளும் நிலையில், கரடிகளின் எண்ணிக்கை குறைப்பது மட்டுமே தீர்வாகாது என அவர் வாதிடுகிறார். ஐயுசிஎன் (IUCN) கரடி நிபுணர் குழுவின் இணைத் தலைவர் டேவ் கார்ஷெலிஸ் கூறுகையில், தீவிரமடையும் ஒரு பிரச்சினைக்கு ஜப்பான் தீவிரமான எதிர்வினையாற்றி வருவதாகவும், மாற்று வழிகள் இல்லாதது போல அரசு உணர்வதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2008 முதல் 2018 வரையிலான காலப்பகுதியில், ஜப்பான் ஆண்டுக்கு 1,000 முதல் 4,500 கரடிகளை மட்டுமே கொன்று வந்தது; வேட்டையாடுதலுக்கு ஆண்டுக்கு 500 கரடிகள் வரை அனுமதிக்கப்பட்டது. ஆனால், காடுகளில் உணவுப் பற்றாக்குறையும் உயிரிழப்புகளும் அதிகரித்த 2023-24 காலகட்டத்தில் 9,000-க்கும் மேற்பட்ட கரடிகள் கொல்லப்பட்டன. இந்த மனித-விலங்கு மோதல் ஜப்பானின் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு நெருங்கிய தொடர்புடையது. 1970-களில் இருந்து ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹொன்ஷூவில் ஆசிய கறுப்புக் கரடிகள் தங்கள் பழைய வாழ்விடங்களை மீண்டும் மீட்டெடுத்தன. கிராமப்புறங்களை விட்டு மனிதர்கள் வெளியேறியதும், விவசாய நிலங்கள் மீண்டும் காடுகளாக மாறியதும் வனப்பகுதிகளை விரிவுபடுத்தின. கரடிகளைப் பாதுகாப்பதில் உலகிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்ற நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்ந்தாலும், அந்த வெற்றியின் பின்விளைவுகளுக்குத் தகுந்த எதிர்காலத் திட்டங்களை வகுக்கத் தவறிவிட்டது என்று கார்ஷெலிஸ் சுட்டிக்காட்டுகிறார். தற்போது காடுகளில் நிலவும் உணவுப்பற்றாக்குறை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. மங்கோலியன் ஓக் மரங்களின் வீழ்ச்சி, வண்டுகளால் அழிக்கப்படும் ஓக் பழங்கள், பீச் மரங்களில் குறைந்துவிட்ட விதைகள் மற்றும் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவு போன்றவை காட்டுப் பழங்களின் உற்பத்தியைக் குறைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். டோக்கியோ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சூழலியலாளர் ஷின்சுகே கொய்கே, ஜப்பானிலும் உலகளவிலும் உள்ள கரடிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டின் துல்லியத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார். ஆசிய கறுப்புக் கரடிகளின் உலகளாவிய பரவல் குறித்துப் பல நாடுகளில் போதிய புரிதல் இல்லாததால் துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினம் என்கிறார். மத்திய ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆசிய கறுப்பு கரடிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 11% முதல் 12% வரை வளர்ந்து வருவதாகவும், மேற்கு ஜப்பானில் சாதகமான சூழலில் இது 15% வரை எட்டக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், உலகளவில் இவற்றின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக ஐயுசிஎன் எச்சரிக்கிறது. 2024-ஆம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்றின்படி, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய கறுப்புக் கரடிகள் வாழும் பகுதிகள் உலகளவில் பாதியாகச் சுருங்கிவிட்டன. ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2025 நவம்பரில் கரடி சேதத் தடுப்புத் திட்டம் ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கரடிகளைப் பயமுறுத்தி விரட்டுதல், குடியிருப்புகளைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், வீடுகளுக்கு அருகிலுள்ள பழ மரங்களை அகற்றுதல், அதிகாரிகளுக்கு சிறப்புத் தற்காப்புப் பயிற்சிகள் அளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கிழக்கு ஜப்பானில் உள்ள பிராந்திய அலுவலகங்களுக்குக் கரடி மேலாண்மை அதிகாரிகளையும் அரசு நியமித்துள்ளது. மனிதர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கும் அதே வேளையில், தாம் மீட்டுருவாக்கம் செய்ய உதவிய ஓர் அரிய காட்டுயிர் இனம் பிராந்திய அளவில் அழிந்துவிடாமல் காப்பதே தற்போது ஜப்பான் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. முன்னைய காலங்களில் மனிதர்களுக்கும் கரடிகளுக்கும் இடையே ஒரு எல்லைக்கோடு பேணப்பட்டதாகவும், கொல்வதை மட்டுமே மையமாகக் கொள்ளாத பிற நாடுகளின் மாற்று உத்திகளிலிருந்து ஜப்பான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சூழலியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
14,000 கரடிகளை கொன்று குவித்த ஜப்பான்: மேலும் 8,800 கரடிகளை அகற்ற ஜப்பான் அரசு தீவிரம்; சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
PulseNews சுருக்கம்

ஜப்பானில் மனிதர்கள் மீது கரடிகள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், கடந்த ஏப்ரல் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலக்கட்டத்தில் 14,000-க்கும் மேற்பட்ட கரடிகளை அரசு கொன்றுள்ளது. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவிலான நடவடிக்கைக்குப் பிறகும் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேலும் 8,800 கரடிகளை ஒழிக்க ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசின் இந்த முடிவுக்கு வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், இது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology