கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சாட் ஜி.பி.டி-யின் புதிய அறிமுகம்: ஓபன் ஏ.ஐ- யின் முக்கிய நடவடிக்கை ஏன்?
ஓபன் ஏ.ஐ (OpenAI) நிறுவனம், வளர்ந்து வரும் இளம் வயதினருக்காக (Teenagers) சாட் ஜிபிடி- யின் (ChatGPT-) ஒரு தனிப் பதிப்பை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏ.ஐ சாட்பாட்கள் இளம் பயனர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், சுயகாயம், தற்கொலை, உணவுக் கோளாறுகள் (Eating disorders) மற்றும் பாலியல் உள்ளடக்கம் தொடர்பான உரையாடல்களுக்கு இதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்து கொண்ட பதின்ம வயது இளைஞர்கள் சிலர், தங்கள் உயிரிழப்பிற்கு முன்பு சாட்பாட்களுடன் தீவிரமாக உரையாடிய பல வழக்குகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஏ.ஐ நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு வலுத்துள்ள சூழலில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாட்பாட்கள் உணர்ச்சிப்பூர்வமான சார்ந்திருப்பதை ஊக்குவித்தன, தீங்கு விளைவிக்கும் எண்ணங்களை வலுப்படுத்தின அல்லது பயனர்கள் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியபோது சரியாகத் தலையிடத் தவறின என்று இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்று, 16 வயதான ஆடம் ரெய்னின் (Adam Raine) வழக்கு ஆகும். இவரின் பெற்றோர் கடந்த ஆண்டு ஓபன் ஏ.ஐ மீது வழக்கு தொடர்ந்தனர். ஏப்ரல் 2025-இல் அவர் இறப்பதற்கு முன்பு, சாட் ஜிபிடி அவரது தற்கொலை எண்ணங்களைச் சரி என ஏற்றுக்கொண்டதாகவும், சுயகாயம் செய்துகொள்ளும் முறைகளைப் பற்றி விவாதித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, நீண்ட உரையாடல்களின் போது தங்களின் சில பாதுகாப்பு அம்சங்கள் நம்பகத்தன்மை குறைந்ததாக மாறக்கூடும் என்பதை ஓபன் ஏ.ஐ ஒப்புக் கொண்டது. இதுபோன்ற கவலைகள் பிற ஏ.ஐ சாட்பாட் நிறுவனங்கள் மீதும் எழுந்துள்ளன. 2024-இல் சாட்பாட் ஒன்றுடன் தீவிரமாக உரையாடிய பிறகு தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர கேரக்டர்.ஏ.ஐ மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு ஒப்புக்கொண்டன. அந்தச் சிறுவன் அந்தச் சாட்பாட்டிடம் தீவிர உணர்ச்சிப்பூர்வமான ஒட்டுதலை ஏற்படுத்திக் கொண்டதாக அவரது தாய் குற்றம் சாட்டியிருந்தார். ஏ.ஐ சாட்பாட்கள் வழக்கமான சமூக ஊடக தளங்களில் இருந்து வேறுபட்டு இயங்குவதால், இந்த வழக்குகள் ஏ.ஐ சாட்பாட்கள் பற்றிய விவாதத்தைத் தொடங்கியுள்ளன. ஏ.ஐ சாட்பாட்கள் பயனர்களின் உணர்வுகளைச் சரி என ஏற்றுக்கொள்ளும் இணக்கமான தோழர்களாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் தடையற்ற அங்கீகாரம், தங்களின் ஆழமான பயங்களைப் பகிர்ந்து கொள்ளும் பலவீனமான குழந்தைகளின் தற்கொலை நடத்தையையும் சுய தீங்கையும் தீவிரமாக்கக்கூடும். இளைஞர்களுக்கான சாட் ஜிபிடி-இல் என்ன வேறுபாடு? தனது புதிய அமைப்பின்கீழ், 18 வயதிற்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்படும் பயனர்களைக் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்ட சாட் ஜிபிடி அனுபவத்திற்குள் கொண்டுவர ஓபன் ஏ.ஐ திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கான இந்தப் பதிப்பு காதல் அல்லது பாலியல் உரையாடல்களைத் தவிர்க்கும், சுயகாயம் சார்ந்த உள்ளடக்கங்களுக்குக் கடுமையான வரம்புகளை விதிக்கும், மேலும் சாட்பாட் தன்னை உணர்வுள்ள ஒன்றாகவோ அல்லது பயனருடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைக்கப்பட்ட ஒன்றாகவோ காட்டிக்கொள்வதைத் தடுக்கும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது. பெற்றோர்களும் தங்களின் கணக்குகளை இணைக்கவும், பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், சில உயர்-ஆபத்து சூழ்நிலைகளில் விழிப்பூட்டல்களைப் (Alerts) பெறவும் முடியும். இந்த அமைப்பின் ஒரு முக்கிய பகுதி வயது கணிப்பு ஆகும். ஒரு பயனர் 18 வயதிற்குட்பட்டவரா என்பதை மதிப்பிட ஓபன் ஏ.ஐ பலவிதமான சமிக்ஞைகளைப் பயன்படுத்தும். கணக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, விவாதிக்கப்படும் தலைப்புகள், பயன்படுத்தப்படும் நேரம் மற்றும் கணக்கு எவ்வளவு காலமாக உள்ளது போன்றவை இதில் அடங்கும். கணக்கை உருவாக்கும் போது வேறு வயது உள்ளிடப்பட்டிருந்தாலும், சாட் ஜிபிடி தானாகவே அந்தக் கணக்கை இளைஞர்களுக்கான பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவர முடியும். தவறாக இளைஞர்களாக வகைப்படுத்தப்பட்ட பெரியவர்கள், தங்கள் வயதை உறுதிப்படுத்தி இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கிக் கொள்ளலாம். இருப்பினும், இதனைச் செயல்படுத்துவதில் சவால்கள் நீடிக்கின்றன. வயதுக் கண்டறிதல் அமைப்புகள் முழுமையானவை அல்ல, மேலும் பல பெற்றோர் கட்டுப்பாடுகள் குடும்பங்கள் அதைத் தாமாகத் தேர்ந்தெடுப்பதைச் (Opt-in) சார்ந்தே உள்ளன. எனவே, இளைஞர்களுக்கான இந்தப் பதிப்பு ஏ.ஐ தோழமையால் ஏற்படும் சில ஆபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியே தவிர, அதற்கு முழுமையான தீர்வு அல்ல. ஏ.ஐ சாட்பாட்கள் சிறுவர்களைத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு உட்படுத்துகின்றன சமீபத்திய மாதங்களில், சாட் ஜிபிடி மற்றும் பிற ஏ.ஐ சாட்பாட்கள் சிறுவர்களைத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு உட்படுத்திய பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ('Center for Countering Hate') என்ற அமைப்பின் 2025 ஆய்வில், சுயகாயம், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் உணவுக் கோளாறுகள் பற்றி விவாதித்த இளைஞர்களுக்கு சாட் ஜிபிடி ஆபத்தான பதில்களை வழங்கியது கண்டறியப்பட்டது. இதில் மது போதையை மறைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தற்கொலைக்கான கடிதங்களை எழுதுவது ஆகியவை அடங்கும். குடும்ப பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தும் ('Parents Together') என்ற தொண்டு நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ஆராய்ச்சியில், சாட்பாட்கள் சோதனையின் போது தோராயமாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் வன்முறை, சுயகாயம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து பரிந்துரைத்தது தெரியவந்தது. டொபமைன் எதிர்வினைகளை (Dopamine responses) உருவாக்கும் ஏ.ஐ அமைப்புகளுக்கு, குழந்தைகளின் வளர்ச்சி அடையும் மூளை மிகவும் பலவீனமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த ஆண்டு, ஓபன் ஏ.ஐ பெற்றோர் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது, இருப்பினும் இவற்றை எளிதாகத் தாண்டிவிட முடியும் என்று விமர்சகர்கள் விரைவில் நிரூபித்துக் காட்டினர்.

இளம் வயதினருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாட் ஜி.பி.டி-யின் புதிய பதிப்பை ஓபன் ஏ.ஐ நிறுவனம் அறிமுகம் செய்கிறது. ஏ.ஐ தொழில்நுட்பத்தால் பதின்ம வயது பயனர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்கொலை, சுயகாயம், உணவுக் கோளாறுகள் மற்றும் பாலியல் தொடர்பான உரையாடல்கள் மீது இந்த புதிய பதிப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, உயிரிழந்த சில பதின்ம வயது இளைஞர்கள் தற்கொலைக்கு முன்பாக சாட்பாட்களுடன் உரையாடியது தொடர்பான விவகாரங்களை அடுத்து, பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில் ஓபன் ஏ.ஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.