இனி பேரம் பேசவே வேண்டாம்: சென்னை ஆட்டோ, டாக்ஸிக்கு வருகிறது புதிய டிஜிட்டல் மீட்டர் செயலி: அரசு அறிவிப்பு
சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு நியாயமான கட்டணம் கிடைக்கவும், ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் புதிய டிஜிட்டல் மீட்டர் அடிப்படையிலான செயலியை அறிமுகப்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (CUMTA) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்குமார், வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் வெளியிட்டார். ஆட்டோ கட்டணத்துக்கு இனி பேரம் வேண்டாம்! சென்னையில் ஆட்டோவில் செல்லும்போது, "எவ்வளவு?" என்ற கேள்வியும், அதற்கு ஓட்டுநர் கூறும் கட்டணமும், தொடர்ந்து நடக்கும் பேரமும் பயணிகளுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய செயலி செயல்பட உள்ளது. இந்த செயலி மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான இடத்துக்கு ஆட்டோவை முன்பதிவு செய்யலாம். முன்பதிவை ஓட்டுநர் ஏற்றுக்கொண்டதும், பயணம் தொடங்கியவுடன் செயலியில் உள்ள டிஜிட்டல் மீட்டர் செயல்படுத்தப்படும். பயணத்தின் தூரம், பயண நேரம் மற்றும் அதற்கான கட்டணம் ஆகியவை டிஜிட்டல் மீட்டரில் காட்டப்படும். இதனால் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பயணிகள் நேரடியாக தெரிந்துகொள்ள முடியும். முக்கியமாக, செயலி மூலம் முன்பதிவு செய்யாமல் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து நேரடியாக ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் இந்த டிஜிட்டல் மீட்டர் முறையைப் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பணம் எப்படி செலுத்துவது? பயணிகள் ஓட்டுநரிடம் ரொக்கம் அல்லது யுபிஐ மூலம் நேரடியாக கட்டணம் செலுத்தலாம். மேலும், செயலியில் உள்ள யுபிஐ வசதி மூலமாகவும் பணம் செலுத்த முடியும் என்று அதிகாரி ஒருவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். இந்த செயலியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுமா என்பது குறித்து தற்போது தெளிவான முடிவு வெளியாகவில்லை. ஓட்டுநர்களை செயலியில் இணைப்பது, கட்டணங்களை மாற்றியமைப்பது, பயணத் தரவுகளை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம (CUMTA) மேற்கொள்ளும். பயணிகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், செயலி மூலமாகவும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலமாகவும் புகார் அளிக்க முடியும். பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் மாற்றம் புதிய முறையில் கட்டணங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்படும். குறிப்பாக எரிபொருள் விலை மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டணங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் தனித்தனியாக கட்டணத்தை மாற்ற வேண்டிய நிலை இல்லாமல், ஒரே நடைமுறையில் கட்டண மாற்றங்களை செயல்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் விரிவாக்கத்துக்கு புதிய சாலைத் திட்டம் இதற்கிடையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கான மற்ற அறிவிப்புகளையும் அமைச்சர் பி. ராஜ்குமார் வெளியிட்டார். விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதியை கருத்தில் கொண்டு 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சாலைகளுக்கான ‘கிரிட் ஆஃப் ரோட்ஸ்’ திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.12 கோடி செலவிடப்பட உள்ளது. சென்னை நகரம் தொடர்ந்து வெளிப்புற பகுதிகளை நோக்கி விரிவடைந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும், நகர வளர்ச்சியை திட்டமிட்டு மேற்கொள்ளவும் இந்த சாலை வலையமைப்புத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்கூட்டியே முக்கிய சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், எதிர்கால போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்றும் அரசு கருதுகிறது. சாத்தாங்காடு, கோயம்பேடு சந்தைகளில் ரூ.20 கோடியில் பணிகள் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகம், கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகம் ஆகியவற்றில் சாலை மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக மொத்தம் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் L, M மற்றும் N பிளாக்குகளுக்கு இடையே 22,000 சதுர அடி பரப்பளவில் கூடுதல் கடைகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.7.50 கோடி செலவிடப்பட உள்ளது. வியாபாரிகளின் கூடுதல் கடைகள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் சந்தைக்கு அதிகரித்து வரும் வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்பேடு சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.10 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தை உறுதி செய்யவும், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் புதிய டிஜிட்டல் மீட்டர் செயலியை அறிமுகப்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்குமார் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதன் மூலம் ஆட்டோக்களில் பயணம் செய்யும் போது கட்டணம் தொடர்பாகப் பேரம் பேச வேண்டிய அவசியம் இனி இருக்காது.