பாதி ஆண், பாதி பெண்... 10,000-ல் ஒன்று மட்டுமே; ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அபூர்வ பட்டாம்பூச்சி கண்டுபிடிப்பு
இயற்கை எப்போதுமே ஆச்சரியங்களின் இருப்பிடம். வண்ணத்துப் பூச்சிகளின் அழகை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், ஒரு பக்கம் ஆணாகவும், மறுபக்கம் பெண்ணாகவும் இருக்கும் பட்டாம்பூச்சியை நீங்க பார்த்ததுண்டா? இது ஏதோ கற்பனை அல்ல; அறிவியலில் 'பைலேட்டரல் கைனாண்ட்ரோமார்பிசம்' (Bilateral Gynandromorphism) என்றழைக்கப்படும் அபூர்வ உண்மை. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் 'கிரேட் மார்மன்' (Great Mormon) என்ற பட்டாம்பூச்சி இனத்தில் இந்த விந்தை அடிக்கடி நிகழ்கிறது. பொதுவாக, இந்த இனத்தில் ஆண் பட்டாம்பூச்சிகள் அடர் நிறத்திலும் எளிமையான சிறகுகளுடனும் இருக்கும். பெண் பட்டாம் பூச்சிகளோ பல வண்ணங்களுடன் சிக்கலான வேலைப்பாடுகள் கொண்ட சிறகுகளை கொண்டிருக்கும். ஆனால், இந்த 'கைனாண்ட் ரோமார்பிசம்' பாதிப்பு ஏற்பட்ட பட்டாம்பூச்சியின் உடலில் இடது பக்கம் ஆணின் நிறமும் அமைப்பும் இருக்கும். வலது பக்கம் பெண்ணின் வண்ணங்களும் கோலங்களும் இருக்கும். உடல் மிகச்சரியாக நடுவில் கோடு போட்டதுபோல இரண்டாகப் பிரிந்து, 2 வெவ்வேறு உலகங்களை ஒரே உடலில் சுமந்து நிற்கும். இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன? இது மந்திரமல்ல, மரபணுக்களின் விளையாட்டு. கரு வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்தில், செல்கள் பிரியும்போது பாலியல் குரோமோசோம்கள் (Sex Chromosomes) சரியாகப் பிரியாமல் தவறு நடக்கிறது. இதன் விளைவாககருவிலேயே சில செல்கள் ஆண் குரோமோசோம்களையும், சில செல்கள் பெண் குரோமோசோம்களையும் சுமந்து வளர்கின்றன. பட்டாம்பூச்சிகள் மிக வேகமாக வளரும் உயிரினம் என்பதால், ஆரம்பத்தில் நடக்கும் இந்தச் சிறிய 'மரபணு பிழை' அதன் முழு உருவத்தையும் பாதியாகப் பிரித்து விடுகிறது. பட்டாம்பூச்சிகள் மட்டும்தானா? இல்லை. இந்த விசித்திர நிலை பட்டாம்பூச்சிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. தேனீக்கள் மற்றும் அந்துப்பூச்சிகள், கடல் வாழ் உயிரினங்கள் நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர் (Lobsters). சில வகை பறவைகளிலும் கூட இந்த 'பாதி ஆண் - பாதி பெண்' நிலை கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பட்டாம்பூச்சிகள் இயற்கையில் காண்பது மிகவும் அரிது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, சுமார் 10,000 பட்டாம்பூச்சிகளில் ஒன்றுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மரபியல் மற்றும் உயிரினங்களின் பாலினம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு இத்தகைய உயிரினங்கள் 'நடமாடும் ஆய்வகங்களாக' உதவுகின்றன.

இயற்கையின் விந்தையான படைப்பாக, ஒரு பாதி ஆண் மற்றும் மறுபாதி பெண் என இருவேறு பாலின பண்புகளைக் கொண்ட அபூர்வ பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக 'பைலேட்டரல் கைனாண்ட்ரோமார்பிசம்' என்று அழைக்கப்படும் இந்த நிலை, பத்தாயிரத்தில் ஒரு பட்டாம்பூச்சிக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நிகழ்வாகும்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காணப்படும் 'கிரேட் மார்மன்' வகை பட்டாம்பூச்சிகளில் இந்த மாற்றத்தை காணமுடிகிறது. இது கற்பனையல்லாத ஒரு அறிவியல் உண்மை என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.