தமிழ்நாட்டில் உள்ள 234 எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் - முதலமைச்சர் விஜய்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். “எனக்காக கேட்கவில்லை; அனைவருக்காகவும் கேட்டேன்” – ஜோதிமணி காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி, தான் வைத்த கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். “நான் எனக்காக கேட்கவில்லை; அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்காகவும் தான் கேட்டேன்” என அவர் கூறினார். “முதலமைச்சரின் அறிவிப்பு புல்லரிக்க வைக்கிறது” – தாரகை கத்பட் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பட், 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு புல்லரிக்க வைப்பதாக தெரிவித்தார். பொருளாதார பின்புலம் இல்லாமல் முதல் தலைமுறை எம்.எல்.ஏ.க்களாக பலர் வந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார். “எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்; ஆனால் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். மக்களுக்கான அரசு என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது” என அவர் தெரிவித்தார். பால் கொள்முதல் விலை உயர்வுக்கும் பாராட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் மறைமுகமாகப் பயனடைவார்கள் எனக் கூறினார். திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. மாரிமுத்துவும் பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். “அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்” – பாமக வரவேற்பு செஞ்சி தொகுதி பாமக எம்.எல்.ஏ. கணேஷ் குமார், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றார். அதேவேளையில், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கும் கார் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் தெளிவுபடுத்தியதாக கூறப்பட்டது. “மக்கள் வரிப்பணத்தில் சலுகை வேண்டாம் என முன்பு கருதினோம்” பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. செல்லச்சாமி, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மக்கள் வரிப்பணத்தில் இதுபோன்ற சலுகை வழங்குவது ஏற்புடையதல்ல என முன்பு கருதியதாகவும், தற்போது கட்சியின் நிலைப்பாட்டை கேட்டு அதற்கேற்ப செயல்படுவோம் என்றும் கூறினார். “முதலமைச்சர் கொடுக்கும் காரில் தொகுதியை சுற்றினால் கெத்தாக இருக்கும்” மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், தனது தொகுதியில் மக்கள் சந்திக்கும் இடமெல்லாம் பால் கொள்முதல் விலை குறித்தே கேட்டு வந்ததாக தெரிவித்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் மற்றும் உதவியாளர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், “நிறைய எம்.எல்.ஏ.க்களிடம் 4, 5 கார்கள் உள்ளன; என்னிடமும் கார்கள் உள்ளன. முதலமைச்சர் கொடுக்கும் காரில் தொகுதியை சுற்றினால் கெத்தாக இருக்கும்” எனக் குறிப்பிட்டார். “இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும்” மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. சண்முகன், எம்.எல்.ஏ.க்களுக்கு இன்னோவா கார் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்பது பல எம்.எல்.ஏ.க்களின் கருத்தாக இருப்பதாக தெரிவித்தார். பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன், தனது எளிய பயண அனுபவத்தை நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். “கல்லூரியில் படிக்கும் போது காதல் தோல்வி, வேலையும் இல்லை, காரும் இல்லை. இன்றைக்கு வேலையும் கொடுத்து, காரும் கொடுக்கிறார் முதலமைச்சர் விஜய்” என அவர் கூறினார். மேலும், ஊரில் இருந்து ரயிலில் வந்து, ஆட்டோவில் தலைமைச் செயலகத்துக்குச் செல்வதாகவும், அங்கு காவலர்கள் தன்னை அடையாளம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். “கேட்காமலேயே கொடுத்திருக்கிறார்” – வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, வடசென்னை மக்களை குளிர்ச்சியடையச் செய்யும் வகையில் அறிவிப்பு அமைந்துள்ளதாக தெரிவித்தார். “கேளுங்கள், தரப்படும்” என்று இல்லாமல், கேட்காமலேயே வழங்கும் முதலமைச்சர் கிடைத்திருக்கிறார் என புகழாரம் சூட்டிய அவர், முதலமைச்சரின் அறிவிப்பை அவ்வையாரின் கருத்துகளுடனும், பைபிளில் இடம்பெறும் வசனத்துடனும் ஒப்பிட்டுப் பேசினார். “ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சியை எப்படி தாங்குவது?” சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சியை எவ்வாறு தாங்குவது எனக் கூறி முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றார்.

தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி, தனது கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் தனிப்பட்ட முறையில் கேட்காமல், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் நலனுக்காகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.