ஆட்டிசம், அல்சைமர் நோய்களுக்குத் தீர்வு? ஆய்வகத்தில் 7 ஆண்டுகள் வளர்ந்த மனித மூளை திசு
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மனித மூளை திசுக்களை (Brain Organoids) தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வரை வெற்றிகரமாக உயிருடன் வைத்து, அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைக் படைத்துள்ளனர். இதற்கு முன்னர் இவை 694 நாட்கள் மட்டுமே அதிகபட்சமாக உயிருடன் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆய்வு அந்தப் பழைய சாதனையை முறியடித்துள்ளது. மிளகு அளவிலான இந்த சிறிய செல் திரள்கள், மனித மூளையின் நீண்டகால வளர்ச்சி நிலைகளை ஆராய்வதற்குப் பெரிதும் உதவுகின்றன. பொதுவாக, ஆய்வகங்களில் மூளை திசுக்களை சில மாதங்களுக்கு மேல் உயிருடன் வைத்திருப்பது விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வந்தது. இதனால், மூளையின் ஆரம்பக்கட்ட கரு வளர்ச்சி நிலைகளை மட்டுமே இதுவரை ஆய்வு செய்ய முடிந்தது. ஆனால், இம்முறை செல்களின் இயற்கை சமிக்ஞைகளுக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்து கரைசலைச் சீரமைத்ததன் மூலம், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மூளைச் செல்களைச் பல ஆண்டுகள் உயிருடன் வைத்திருந்து, அவற்றின் மின் சமிக்ஞை செயல்பாடுகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். இந்த ஆய்வின் போது 34 மூளைத் திசுக்களின் செயல்பாடுகள் பல்வேறு கால இடைவெளிகளில் கண்காணிக்கப்பட்டன. அதில், மனித மூளையின் இயல்பான செல்களுக்கும், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செல்களுக்கும் இடையே ஆச்சரியமூட்டும் வகையில் பல ஒற்றுமைகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, 'டிஎன்ஏ மெத்திலேஷன்' (DNA methylation) என்ற ரசாயன செயல்முறையின் மூலம் ஆராய்ந்த போது, இந்தச் செயற்கை மூளைத் திசுக்கள் காலத்தின் மாற்றத்தைப் பதிவு செய்வது தெரியவந்தது. அதாவது, மனித மூளையானது கருப்பையில் உருவாகி ஆரம்பகால குழந்தைப் பருவம் வரை அடையும் வளர்ச்சி நிலைகளை, இந்த திசுக்களின் மரபணு கடிகாரமும் துல்லியமாகப் பிரதிபலித்துள்ளன. மேலும், இந்த செல்கள் தங்களின் முந்தைய வளர்ச்சிப் படிகளை மூலக்கூறு நினைவாகச் சேமித்து வைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, முதிர்ச்சியடைந்த செல்களை ஒரு இளம் சூழலுக்கு மாற்றிய போது, அவை மீண்டும் முதன்மையில் இருந்து தொடங்காமல், தங்களின் அடுத்தகட்ட பிந்தைய வளர்ச்சி நிலைகளுக்கே நேரடியாகச் சென்றன. தற்போது இந்த மூளை திசுக்கள் அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், இவற்றை இன்னும் நீண்ட காலம் உயிருடன் பராமரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த கண்டுபிடிப்பு மனித மூளையின் சிக்கலான முதிர்ச்சி நிலைகளை நேரலையாகக் கண்காணிக்க வழிவகுத்துள்ளது. இதன் மூலம் ஆட்டிசம், அல்சைமர் போன்ற மூளை சார்ந்த நோய்கள், முதுமையடைதல் மற்றும் நரம்பு மண்டலக் குறைபாடுகள் பற்றிய ஆராய்ச்சிகள் புதிய வேகத்தைப் பெறும். இருப்பினும், மூளை திசுக்களை பல ஆண்டுகள் வளர்ப்பது மட்டுமே நோக்கமல்ல என்றும், இந்த அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட அறிவைப் பயன்படுத்தி, ஆண்டுகள் கணக்கில் காத்திருக்காமல் மூளையின் பிந்தைய வளர்ச்சி நிலைகளை விரைவாக எவ்வாறு ஆய்வு செய்வது என்பதைக் கண்டறிவதே அடுத்த கட்ட இலக்கு என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மனித மூளை திசுக்களை (Brain Organoids) ஏழு ஆண்டுகள் வரை உயிருடன் வைத்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு அதிகபட்சமாக 694 நாட்கள் மட்டுமே இந்த திசுக்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆய்வு அந்த சாதனையை முறியடித்துள்ளது.
மிளகு அளவுள்ள இந்த செல் திரள்கள், மனித மூளையின் நீண்டகால வளர்ச்சி நிலைகளைத் துல்லியமாக ஆராய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு, ஆட்டிசம் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கான தீர்வைக் கண்டறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.