செவ்வாய் கிரகத்தில் மின்னல் வெட்டுமா? புகைப்படங்களில் சிக்காத மர்மத்தை போட்டுடைத்த நாசா ரோவர்
செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் இதுவரை பார்த்த புகைப்படங்கள் அனைத்தும் அமைதியானவை. சிவந்த மண், பாறைகள், தூசி... அவ்வளவு தான். ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஒரு 'மின்சார' மர்மம் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? செவ்வாய் கிரகத்தில் மின்னல் வெட்டுமா? இந்தக் கேள்விக்கு விடை தேடப்போதுமான கருவிகள் நம்மிடம் இல்லை. ஆனால், "தேடாமல் கிடைத்த புதையல்" போல, நாசாவின் ரோவர் ஆச்சரியமான விஷயத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பாப்டிஸ்ட் சைட் தலைமையிலான குழுவினர், செவ்வாயில் இருக்கும் நாசாவின் 'பெர்சிவரன்ஸ்' ரோவர் அனுப்பிய தரவுகளை ஆராய்ந்தனர். ரோவரில் உள்ள 'சூப்பர் கேம்' (SuperCam) என்ற மைக்ரோஃபோன், அங்குள்ள காற்றையும் சத்தத்தையும் பதிவு செய்து வருகிறது. அந்த ஒலிப்பதிவுகளை கேட்டபோதுதான் அவர்களுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது. செவ்வாயின் வளிமண்டலத்தில் ஏதோ ஒன்று 'வெடிக்கும்' சத்தம். கடந்த 2 செவ்வாய் வருடங்களில் (Martian years), ரோவர் சுமார் 55 முறை வித்தியாசமான சத்தங்களைப் பதிவு செய்துள்ளது. இவை சாதாரணக் காற்று சத்தம் அல்ல. தூசிப் புயல்கள் மற்றும் 'டஸ்ட் டெவில்ஸ்' (Dust devils) எனப்படும் தூசிச் சுழல்கள் ஏற்படும் போது, இந்தச் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதை "குட்டி மின்னல்கள்" (Mini lightning) என்று அழைக்கிறார்கள். பதிவான 55 சத்தங்களில், 7 முறை ரோவரின் கருவிகளில் மின்காந்த மாற்றங்கள் ஏற்பட்ட அதே நேரத்தில் இந்தச் சத்தமும் வந்துள்ளது. அதாவது, இது நிச்சயம் மின்சாரத்தால் உருவான சத்தம்தான் என்பதை இது உறுதி செய்தது. மீதமுள்ள 48 சத்தங்களும் இதே வகையைச் சார்ந்தவைதான். இங்குதான் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் பல கேமராக்கள் உள்ளன. அவை எத்தனையோ புகைப்படங்களை எடுத்துத் தள்ளியுள்ளன. ஆனால், இதுவரை ஒரு படத்தில் கூட மின்னல் கீற்று பதிவாகவில்லை. தூசி துகள்கள் ஒன்றோடொன்று உரசும் போது ஏற்படும் மின் வெளியேற்றம் காரணமாக இந்தச் சத்தம் உருவாகிறது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. ஆனால், பூமியில் நாம் பார்ப்பது போலப் பெரிய வெளிச்சத்துடன் கூடிய மின்னலாக இது இல்லாமல் இருக்கலாம் அல்லது கேமராவின் கண்களுக்குச் சிக்காத வகையில் அது இருக்கலாம். செவ்வாய் கிரகம் பற்றிய நம் புரிதலையே இந்த "கண்ணுக்குத் தெரியாத மின்னல்" மாற்றியமைத்துள்ளது. இப்போதைக்கு இதை நம்மால் கேட்க மட்டும்தான் முடிகிறது. எதிர்காலத்தில், இந்த மின்னலைப் படம் பிடிப்பதற்கும், அளவிடுவதற்கும் என்றே பிரத்யேக கருவிகளை அனுப்பி, இந்த மர்மத்தை முழுமையாக விடுவிக்க விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். செவ்வாயின் தூசிப் புயலுக்குள் இன்னும் என்னென்ன ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றனவோ?

செவ்வாய் கிரகத்தில் மின்னல் வெட்டுமா என்ற கேள்விக்கு விடை தேடத் தேவையான கருவிகள் நம்மிடம் இல்லை. எனினும், அங்கு நிலவும் அமைதிக்கு பின்னால் ஒரு மின்சார மர்மம் மறைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதுவரை நாம் பார்த்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் அனைத்தும் பாறைகள் மற்றும் தூசி நிறைந்த அமைதியான காட்சிகளையே காட்டின. இந்நிலையில், நாசாவின் ரோவர் தற்செயலாக ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டறிந்துள்ளதாகவும், இது குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பாப்டிஸ்ட் சைட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.